கால் படாத கிராமமே இல்லை!
நைட்டிங்கேல்களின் கதை
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் இவரது பாதங்கள் பதியாத கிராமங்களை பார்ப்பது கடினம். செவிலியரைப் பார்த்தாலே காடுகளுக்குள் காணாமல் போகிற பெண்களையும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்ததற்காக கன்னங்களில் அறையும் ஆண்களையும் அன்ேபாடு அணுகி மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளார் சரோஜா.
சரோஜாவுக்கு ஆசிரியர் பணிதான் கனவு. வயது குறைவு என்ற காரணத்தால் வாய்ப்பை இழந்தார். வீட்டில் இருந்த காலகட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய நர்ஸ்களின் நட்பு கிடைக்க, நர்சிங் பணியில் சரோஜாவுக்கும் ஈடுபாடு ஏற்பட்டது. சுகாதார பார்வையாளர் பணிக்கு விண்ணப்பித்து திருவல்லிக்கேணி கஸ்தூரிபாகாந்தி மருத்துமனையில் இரண்டரை ஆண்டு பயிற்சி முடித்து குடும்ப நல பிரிவில் ஹெல்த் விசிட்டராக 1972ல் பணியில் சேர்ந்தார்.
‘‘பணியில் சேர்ந்த உடன் நான் சந்தித்தது மொழிப்பிரச்னை. தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளை பேசும் அளவுக்கு பழகினேன். அவர்கள் வீடுகளுக்கு சென்று வீட்டு விஷயங்களையும் கேட்டேன். என்னிடம் தங்களது உடல்நலப் பிரச்னைகளை சொல்லலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கினேன்.
அதன் பின் கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள், சத்தான உணவு, மருந்து மாத்திரைகள், பரிசோதனைகள் என ஒரு பெண் ஆரோக்கியமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான அத்தனை வழிமுறைகளையும் புரிய வைத்தேன். குடும்பக் கட்டுப்பாடு, தடுப்பூசி என ஒவ்வொரு விஷயத்துக்கும் அரசு கொடுக்கும் டார்க்கெட்டை தாண்டியும் செய்து முடித்து கலெக்டரின் பாராட்டு பெற்றேன்.
இச்சூழலில்தான் கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளின் மலை கிராமங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. பேருந்து வசதியே இல்லாத கிராமங்கள். அந்த ஊரையே அவர்கள் தாண்டியதில்லை. நகரங்களில் பெண்களுக்கு வந்துள்ள வசதிகள் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. தாய்மைக் காலத்தில் எந்த மருந்துமே எடுத்துக் கொண்டதில்லை. வீடு, காடு என எங்கு வேண்டு மானாலும் பிரசவம் நடக்கும்.
யாரும் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணே குழந்தை பெற்று தொப்புள் கொடியை அறுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுவாள். அதன் பின் குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய நோய்த்தடுப்பு முறைகளும் பின்பற்றப்படவில்லை. குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேசினாலே காட்டுக்குள் ஓடி விடுவார்கள்.
அங்கு கொஞ்சம் படித்த பெண்களை ஒருங்கிணைத்து பெண்களின் உடல்நலப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான பிரசவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். படிப்படியாக தாய்மைக்காலத்தில் தடுப்பூசி மற்றும் மருந்துகளையும் நேரடியாகக் கொடுத்தோம். அவசர காலங்களில் வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம். அதன் பின்பே அவர்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.
சிக்கலான பிரசவங்களின் போது மருத்துவமனைக்கு கொண்டு வந்து ேதவையான உதவிகள் செய்தோம். அதன் பின்பே பிரவசத்துக்கு மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். பிரசவத்தின் போது ஒரு குழந்தை கூட, ஒரு தாய் கூட இறந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.
1992ல் பொது சுகாதார செவிலியருக்கான பயிற்சியை முடித்ேதன். தாய் சேய் நலம் மற்றும் சுகாதாரப் பணிகளில் வரும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றை மலைவாழ் பெண்களிடம் எடுத்துக்கூறி, வைட்டமின் ஏ மாத்தி ரைகள், மலேரியா தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி என பல சுகாதார மேம்பாடுகளையும் அவர்களிடம் கொண்டு சேர்த்தோம். வேலை பார்த்த காலத்தில் எனது கால் படாத கிராமமே இல்லை என்றே சொல்லலாம்.
வேலைக்குச் சென்ற சில ஆண்டுகளில் திருமணம் நடந்தது. கணவர் மார்ட்டின் ெசாந்தமாக கார் வைத்து டிரைவராக வேலை பார்த்தார். மகன் சுனில்குமார், மகள் அனிதா. வீடு, குழந்தை, கணவரைப் பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருக்காது. கனவில் கூட இந்த கிராமத்தில் இந்தப் பெண்ணுக்கு மருந்து கொடுத்தோமா என்ற சந்தேகம்தான் வரும்!
ஓய்வுக்கு ஒரு ஆண்டு முன்பு உதவி சுகாதார செவிலியராக (இப்போது மாவட்ட தாய் சேய் நல அலுவலர் என பெயர் மாறியுள்ளது) பதவி உயர்வு கிடைத்தது. 2009ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். இவ்வளவு அனுபவத்தையும் வைத்துக் ெகாண்டு வீட்டில் சும்மா இருப்பது உறுத்தலாக இருந்தது.
இப்போது கிருஷ்ணகிரியில் இயங்கும் ரூரல் டெவலப்மென்ட் கவுன்சில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து மலைப்பகுதிகளுக்கும் செல்கிறோம். பேருந்து கூட நுழையாத கிராமங்களில் கூட எங்களது பேரன்பு தனது பணியை செய்கிறது. ஆரோக்கியமான பிரசவத்துக்கும், பெண்களின் உடல்நலம் காக்கவும் அரசின் மருத்துவ திட்டங்களை அவர்களது இடத்திலேயே கிடைக்கச் செய்கிறோம்’’ என்கிறார் சரோஜா!
வீடு, காடு என எங்கு வேண்டுமானாலும் பிரசவம் நடக்கும். யாரும் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணே குழந்தை பெற்று தொப்புள் கொடியை அறுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுவாள்!
- எஸ்.ஸ்ரீதேவி படங்கள்: எம்.சீனிவாசன்
சரோஜா
|