கருணைக் கொலை கருணையா? கொலையா?



சர்ச்சை

சக உயிரின் மீது கருணையற்றவர்களால் நிகழ்த்தப்படுவதுதான்  கொலை. ஓர் உயிரின் மீதான கருணையின் காரணமாகவும் கொலை புரியலாம் என்கிற கருத்தைக் கொண்டது ‘கருணைக் கொலை’.

தீர்க்க முடியாத நோய், தாங்க முடியாத வலி, மீண்டு வர இயலாத மூளை செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

என்னவாயினும் ஒரு உயிரைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், வாழ்தலே துன்பம் என்றான பின் அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பது கொலை ஆகாது என்றும் கருணைக்கொலை மீதான இருவேறான கருத்துகள் இருக்கின்றன. இந்தியாவில் இதுவரையிலும் அனுமதிக்கப்படாத ‘கருணைக் கொலை’ பற்றிய பல்துறை சார்ந்தவர்களின் பார்வைகள் இதோ...

கருணைக் கொலையைப் பற்றிய விவாதத்தில் உளவியல் மருத்துவத்தின் பங்கு முதன்மையானது. எது போன்ற மனநிலை கருணைக் கொலையை நோக்கித் தள்ளுகிறது? உளவியல் ரீதியிலாக அதற்கான தேவை இருக்கிறதா? உளவியல் மருத்துவர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது...

‘‘கருணைக்கொலையை (Mercy killing) நல்மரணம் (Euthanasia) என்று குறிப்பிடுகின்றனர். நேரடி நல்மரணம் (Active Euthanasia), சாத்விக நல்மரணம் (Passive euthanasia) என இது இருவகைப்படும். மரணத்தை ஏற்படுத்தும் மருந்தை ஊசியின் வாயிலாகச் செலுத்தி உயிரைப் போக்குவது நேரடி நல்மரணம். உயிர் வாழ்வதற்கான உபகரணங்களை அகற்றி விடுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்துவது சாத்விக நல்மரணம்.

இது பாதிக்கப்பட்டவரே நல் மரணத்துக்கு ஆட்படுத்தும்படி விரும்பிக் கேட்பது (voluntary), அவரது உறவினர்கள், நண்பர்கள் கேட்பது (involuntary) என இருவகைப்படுகிறது. உலக அளவில் புற்றுநோய், Amyotrophic Lateral Sclerosis, Chronic Obstructive Pulmonary Disease என இம்மூன்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத்தான் பெரும்பாலும் கருணைக் கொலைக்கான கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.

உலகின் பல நாடுகளும் கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கவில்லை. ஒருங்கிணைந்த அமெரிக்காவில் Oregon மாநில அரசு மட்டும் முதலில் கருணைக் கொலைக்கு ஆதரவான சட்டத்தைப் பிறப்பித்தது. அதன் தாக்கத்தில் மேலும் சில மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாமல் நெதர்லாந்து போன்ற மேலும் சில நாடுகள் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

கருணைக் கொலையை அவர்கள் Physician Assisted Suicide - அதாவது மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் நிகழ்த்தப்படும் தற்கொலை என்று குறிப்பிடுகிறார்கள். மரணத்தை ஏற்படுத்தும் மருந்துகளை பாதிக்கப்பட்டவரே உட்கொண்டு இறக்கும்படியான சூழலை உருவாக்கிக் கொடுக்கின்றனர். இயலாதவர்களுக்கு கார்பன் மோனாக்சைடு வாயுவைச் செலுத்துவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தலாம். வலி இல்லாத மரணம் என்பதுதான் கருணைக் கொலையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன், அமெரிக்கன் சைக்கியாட்ரி அசோசியேஷன் ஆகியவை கருணைக் கொலையை எதிர்க்கின்றன. வலி, வேதனை இல்லாத வாழ்க்கைதான் நோக்கம் எனும்போது தேவைப்படும் வரையிலும் வலிக்கொல்லி மருந்துகளைக் கொடுத்து வலியிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்.

வலிக்கொல்லிகளின் பக்க விளைவுகள் காரணமாக மரணத்தைத் தழுவ நேரிட்டாலும் அது வலியில்லாத மரணமாக இருக்கும் என்கிறது அமெரிக்கன் அசோசியேசன் ஆஃப் சூசைடாலஜி. இது குறித்த விரிவான ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.

உளவியல் ரீதியாகப் பார்த்தால் கருணைக் கொலைக்கான தேவை இருக்கிறது. வலி மற்றும் உடல் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்தான் கருணைக்கொலை செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். மீண்டு வர இயலாத மூளைச் செயலிழப்புக்குச் சென்றவர்களை பராமரிப்பதில் பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

தீர்க்கவே இயலாத நோய் எனும் பட்சத்தில் நியாயமான முறையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, நீதிபதிகள் விசாரணைக்குப் பின் நேர்மையான முறையில் நடத்தப்படும் கருணைக்கொலையை வரவேற்கலாம். ஆனால், அதற்கான தேவையை முடிவு செய்வதில் கவனம் வேண்டும். கருணைக் கொலை செய்வதற்கான பரிசீலனையில் உளவியல் மருத்துவரின் கருத்தும் அவசியமானது. ஏனென்றால் மன அழுத்தம், மன உளைச்சல் என உளவியல் சிக்கல்கள் உள்ளவர்கள் கூட கருணைக் கொலை செய்யச் சொல்லிக் கேட்பார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மருந்து, மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விட முடியும்.

கருணைக் கொலைக்கான தேவை இருப்பவர்களை யூதனேசியா எனும் நல்மரணத்துக்கு ஆட்படுத்தலாம். ஆனால், அதை தவறாகப் பயன்படுத்தாதபடி கண்காணிப்பது அவசியம்’’ என்கிறார் டாக்டர் ஜெயக்குமார்.

உடலியல் ரீதியாக கருணைக் கொலைக்கான தேவை இருக்கிறதா? மருத்துவரும், மருத்துவச் செயற்பாட்டாளருமான சந்திராவிடம் கேட்டோம்.``கருணைக் கொலை மேற்கொள்வதற்கு  உடலியல் ரீதியான தேவையை விட சமூகப் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடியே முக்கியக் காரணமாக இருக்கிறது.

மருத்துவம் தனியார்மயமாகி விட்ட சூழல் ஏழை மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தக் குடும்ப வருமானமும் மருத்துவத்துக்கே செலவு செய்யப்படுவதால் மற்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது. இப்படியொரு நெருக்கடியான சூழலில் பாதிக்கப்பட்டவர் மனதளவில் தான் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம் என்கிற முடிவுக்குள் வருகிறார்.

குடும்ப பொருளாதார சூழல் காரணமாக அவரது உறவினர்களும் அம்முடிவுக்குள் வந்து விடுகின்றனர். ஆகவே இங்கு மருத்துவத் தேவைதான் முக்கியமே தவிர கருணைக்கொலை அல்ல. மன வளர்ச்சி குன்றிய தங்களது குழந்தையை கருணைக்கொலை செய்ய வேண்டும் என பெற்றோர் மனு கொடுப்பதை செய்திகள் வாயிலாக அறிந்திருப்போம்.

அவர்களது கோரிக்கை கருணைக்கொலை அல்ல... பொருளாதார வலுவற்ற, தங்களால் கவனிக்க முடியாத குழந்தையை அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான மறைமுக விண்ணப்பம் அது. இங்கிலாந்தில் National Health Service மருத்துவத்தை முற்றிலும் இலவசமாகக் கொடுக்கிறது. அதே போல் இந்தியாவிலும் தரமான மருத்துவத்தை முற்றிலும் இலவசமாகக் கொடுப்பது பொருளாதார ரீதியான பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தாது.

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். எந்த நோயும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த இயலும். தரமான மருத்துவத்தைக் கொடுப்பதன் வாயிலாகவே பல தீவிரமான நோய்களைத் தவிர்த்து, கருணைக்கொலைக்கான தேவை உண்டாகாதபடி செய்ய முடியும்’’ என்கிறார் சந்திரா.

உயிர் வாழ்தலுக்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அது போல் தன்னால் வாழ இயலாத வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதும் கூட தனிப்பட்ட உரிமை சார்ந்ததுதானா? மனித உரிமைச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் இது குறித்துக் கூறுகிறார்.

``கருணைக் கொலை சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்றாலும், இன்றைக்கு நிறைய கிராமப்புறங்களில் முதியவர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுதான் வருகிறார்கள். பன்றிக்கறி உண்ணக்கொடுத்தல், நல்லெண்ணெயை தடவி  குளிர்ந்த நீரால் குளிப்பாட்டுதல் என உடலைக் குளிர்வித்து மரணமடையச் செய்யும் பழக்கம் இன்றைக்கு பரவலாக இருக்கிறது.

மீண்டு வர இயலாதபடியான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புக்கு ஆளானவரை கருணைக்கொலை செய்யலாம் என்பதில் நியாயமிருக்கிறது. முதியவர்களை கவனிக்க  முடியவில்லை என்பதற்காக மேற்கொள்ளப்பட்டால் நிச்சயம் அது கொலைதான். நூற்றுக்கணக்கானோர் இன்றளவிலும் இது போன்று  கொலை செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். சிசுக்கொலையை கண்காணிக்க சட்டம் இருப்பது போல கருணைக்கொலையை  கண்காணிக்க சட்டம் இல்லை என்பது முக்கியப் பிரச்னை.

ஜப்பானில் முதுமையை எட்டிய பிறகு அவர்களை காட்டுக்கு அனுப்பி விடும் வழக்கம் இருந்தது. குடும்ப அமைப்பு முறையின் உண்மையான மதிப்பீடுகள் தகர்ந்ததன் விளைவுதான் இது. இன்றைய குடும்ப அமைப்பு முறையே பொருளை மையப்படுத்தியதாகத்தான் இருக்கிறது. பொருளாதார ரீதியிலான தேவைக்குப் பயன்படாதவர்களை மற்றவர்கள் மதிப்பதில்லை.

இதன் காரணமாகத்தான் முதியவர்கள் இது போன்ற கொலைகளுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். இன்றைக்கு உலக அளவில் முதியவர்கள் வேலை வாய்ப்புக்கான குரல் எழுந்து வருகிறது. ஓய்வுக்குப் பிறகும் அவர்களது திறனைப் பொறுத்து அவர்களால் முடிந்த வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் இதனைத் தடுக்க முடியும். வயோதிகம் சார்ந்த  கருணைக் கொலைகளை தடுக்க சமூக மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும்.  கருத்தளவில் மரண தண்டனையும், கருணைக் கொலையும் ஒன்றுதான்.

நல்மரணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்கான நோக்கம்தான் கருணைக்கொலை மீதான ஆதரவுக் குரல்களை எழுப்புகிறது. கருணைக் கொலையை ஆதரிக்கலாம்... ஆனால், அதற்கான தேவையை எப்படித் தீர்மானிப்பது என்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு ஒரு கமிஷன் அமைத்து பல்துறை சார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும்’’ என்கிறார் எவிடென்ஸ் கதிர். 

 கருணைக் கொலை குறித்து தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் அதனை நீதிமன்றங்கள் எவ்வாறு அணுகியிருக்கின்றன? கருணைக்கொலையைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருக்கிறதா? அப்படி சட்டப்பூர்வமாக்கினால் ஏதேனும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமா?  வழக்கறிஞர் அருள்மொழியிடம் கேட்டோம்.

‘உறங்குவது போலுஞ் சாக்காடு’ எனத் திருக்குறளில் கூறப்பட்டுள்ளதைப் போலான மரணத்தைத்தான் பலரும் விரும்புகின்றனர். அதற்கு வாய்ப்பில்லாத போது வலி, வேதனை இல்லாத ஒரு சாவு நேர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். வாழ்வதற்கான உரிமை போல் இதனை சாவதற்கான மனிதனின் உரிமையாகப் பார்ப்பதா? இல்லை பார்வையாளர் இடத்திலிருந்து இதனைக் கொலையாகப் பார்ப்பதா? என்பது பெரும் விவாதமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் சட்டப்பூர்வமாக கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்திய அரசியலைப்புச் சட்டம் பிரிவு 21ல் வாழ்வதற்கான உரிமையை Right to live with dginity என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரியாதையோடு வாழ்வது என்கிற அடிப்படையில் பார்த்தால் தீராதநோய் மற்றும் வலி, வேதனையோடு வாழ்வது மரியாதையான வாழ்க்கையா? ஒருவர் வலியுடன் எதற்காக வாழ வேண்டும்? ஆகவே கருணைக் கொலையை மரியாதை இல்லாத வாழ்க்கை மற்றும் நல்மரணம் என்கிற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம். இதனைச் சட்டப்பூர்வமாக்கியுள்ள நாடுகளில் லேத்தல் ஊசி போட்டு நல் மரணத்தைக் கொடுக்கின்றனர்.

இந்தியாவில் இது குறித்து பெரிய அளவில் விவாதம் எழுந்தது அருணா ராமச்சந்திர ஷான்பாக் வழக்கில்தான். 1973ம் ஆண்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த அவரை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியிருக்கிறார் ஒரு வார்டு பாய். அம்முயற்சியின்போது நாய்ச்சங்கிலியால் கழுத்தை இறுக்கியதன் காரணமாக அருணாவின் மூளை செயலிழந்து விட்டது.

Persistent Vegetative State எனும் இயக்கமற்ற நிலையில் 42 ஆண்டுகள் இருந்து கடந்த ஆண்டு இறந்தார். 2011ம் ஆண்டு எழுத்தாளர் பிங்கிவிரானி என்பவர் இவரது நிலையைப் பார்த்து இவரைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது.

உயிர்காப்புக் கருவியின் துணையின்றி அவரால் வாழ முடியாது என்றால் அதனைத் துண்டித்து மரணமடையச் செய்யலாம். ஆனால், அருணா வென்டிலேட்டர் இல்லாமலேயே சுவாசிக்கிறார் எனும்போது அவரை விஷ ஊசி போட்டு கொல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. கருணைக்கொலையைப் பொறுத்த மட்டிலும் பொதுவானதொரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஏனென்றால் நமது நாட்டில் நல்ல சட்டங்கள் எல்லாம் பெரும்பாலும் தவறான வழியில்தான் பயன்படுத்தப்படுகின்றன.

கருணைக் கொலை செய்ய வேண்டுமென்றால் முறையாக வழக்குத் தொடர்ந்து பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு நீதிமன்றமே அதனை முடிவு செய்யும்’’ என்கிறார் அருள்மொழி. ``கருணைக் கொலை என்பது மனிதனின் உயிர் வாழ்தலுக்கான உரிமைக்கு மட்டுமல்லாமல் இயற்கைக்கும் எதிரானது’’ என்கிறார் சமூக ஆர்வலர் மோகன்...

‘‘கருணைக் கொலை என்கிற கருத்தே இயலாமையின் வெளிப்பாடுதான். அது நோயாளியின் இயலாமை மட்டுமல்ல இந்த சமூகம் மற்றும் அரசின் இயலாமை என்றும் சொல்லலாம். மருத்துவ ரீதியாக வசதிகளை ஏற்படுத்தித் தர முடியாத அரசின் கட்டமைப்பைத்தான் நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும். நாகரிகமடைந்த சமூகத்தில் மனிதனுக்கான சில வரையறைகளை வகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அதற்கு அப்பாற்பட்டு இருப்பவர்களை ஏற்றுக்கொள்ளாத நமது பார்வையில்தான் பிரச்னை இருக்கிறது. மேற்கத்திய சமூக மனநிலையின் பிரதிபலிப்பாக நாம் இதனைப் பார்க்கலாம். பண்டைய இந்தியாவில் பரிவ்ராஜகம் எனும் காட்டு வாழ்க்கை இருந்தது. Lower brain எனப்படும் விலங்கின அறிவு மட்டுமே அந்த வாழ்க்கைக்குப் போதுமானது.

இச்சமூகம் Higher brain உடையவர்களைத்தான் மனிதர்களாக ஏற்றுக்கொள்கிறது. ஆகவேதான் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லாவற்றிலிருந்தும் மீள்வதற்கான ஆற்றல் அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது. வாழ்வதற்கான போராட்டம் இல்லாத உயிரினங்கள் இல்லை.

வலி மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. வலியை தங்கள் மீதான கவனத்தை ஈர்ப்பதற்கான கருவியாக மாற்றிக் கொண்டோம் என்பதுதான் சிக்கலே. விமான விபத்தின் காரணமாக ஒருவர் கடலிலோ, தனிமைத்தீவிலோ விழுந்து உயிர்பிழைக்கிறார் எனில் அவருக்கு வலி என்கிற உணர்வை விட அங்கிருந்து தப்ப வேண்டும் என்கிற எண்ணமே பிரதானமாக இருக்கும்.

வலியைத் தாங்கும் திறன் அனைத்து உயிர்களுக்கும் இயற்கையாகவே இருக்கிறது. வேட்டையின்போது புலி, சிங்கம் ஆகியவற்றுக்கும் பலமான காயங்கள் ஏற்படும். அந்த வலியையும் பொருட்படுத்தாமல் அவை வேட்டையாடுகின்றன.

அதன் இலக்கு இரையை அடைவது மட்டுமே எனும்போது அவை வலியை பொருட்படுத்திக் கொள்வதில்லை. வலி என்கிற உணர்வின் மீதான அபரிமிதமான எண்ணத்தை நாம் உருவாக்கி யிருக்கிறோம். இயற்கையாகவே தாங்கமுடியாத வலி என்று எதுவும் கிடையாது. அதன்படி கருணைக் கொலைக்கான தேவை என்பது நமது புரிதலில்தான் இருக்கிறதே தவிர உண்மையில் இல்லை’’ என்கிறார் மோகன்.

கருணைக் கொலை செய்வதற்கான பரிசீலனையில் உளவியல் மருத்துவரின் கருத்தும் அவசியமானது. ஏனென்றால் மன அழுத்தம், மன உளைச்சல் என
உளவியல் சிக்கல்கள் உள்ளவர்கள் கூட கருணைக்கொலை செய்யச் சொல்லிக் கேட்பார்கள். ஆனால், அவற்றையெல்லாம் மருந்து, மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விட முடியும்.எந்த நோயும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த
இயலும். தரமான மருத்துவத்தைக் கொடுப்பதன் வாயிலாகவே பல தீவிரமான நோய்களைத் தவிர்த்து, கருணைக் கொலைக்கான தேவை உண்டாகாதபடி செய்ய முடியும்.

- கி.ச.திலீபன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்