தூக்கத்தில் அமுக்கும் பேய்?!



குட் நைட்!

சந்தோஷக் கனவுகளோடு நல்ல நித்திரையில் இருக்கும் போது அலாரம் அடித்தால் எப்படி இருக்கும்? அந்த அலாரத்தை நிறுத்திவிட்டு 5, 10 நிமிடங்கள்  அதிகமாகத்  தூங்குகிற அலாதி சுகம்... அடடா!அதுவே ஒரு கெட்ட கனவை கண்டு பயந்து, அலறி அடித்துக் கொண்டு எழ முயற்சிக்கிறீர்கள். ஆனால், முடியவில்லை.

உங்கள் கண்களை திறந்து யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என்றால், கண்களை அசைக்க முடியாமல் ஒரே இருட்டாக இருக்கும். உதடுகளை அசைக்க முடியாமல், குரல்வளை அழுத்தப்பட்டு, வார்த்தைகள் வராது. கைகால்கள் கட்டிப்போட்டது போலவும், யாரோ உங்கள் நெஞ்சின் மீது அமர்ந்து கொண்டு அழுத்துவது போலவும் இருக்கும். சிலர் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டு, எதிரே கருப்பாக ஓர் உருவம் அசைவதாக அலறுவார்கள்.

தூக்கத்தில் நரம்பு, தசைகளின் இறுக்கத்தால் ஏற்படும் இந்த நோயை ‘தூக்க பக்கவாதம்’ (Sleep Paralysis) என்று சொல்லும் நரம்பு நோய் மருத்துவர் புவனேஸ்வரி ராஜேந்திரன் அதைப்பற்றி விளக்குகிறார்...

“உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புண்டு. தூக்கம் மற்றும் தூக்க விழிப்புக்குமான இடைப்பட்ட நிலையில் தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது. தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இதை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில்தான் நிகழும். இது பிரச்னைக்கு உரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் அடிக்கடி ஏற்படும். இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட நீடிக்கும். சில நேரம் அந்தரத்தில் பறப்பது போலவும் தோன்றும்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால், திடீர் திடீரென அதிக தூக்கத்தால் மயங்கி விழுவாரே அதுதான் துயில் மயக்க நோய். தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அவரால் கேட்க முடிந்தாலும் அசைய முடியாத நிலையை அடைவார். இதுதான் மிகவும் ஆபத்தான நிலை. ஏனெனில், எந்த நேரத்தில் இவருக்கு தூக்கம் வரும் என்பதே தெரியாது. இதற்கு மருத்துவர்களிடம் சென்றே ஆக வேண்டும்’’ என்கிற மருத்துவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

தூக்க பக்கவாதம் சாதாரணமாக எந்த நேரங்களில் வரும்?``ஒருவரின் ஆரம்ப நிலை தூக்கத்தில் உடல் உஷார் நிலையானது விரைவில்லாத கண் இயக்கம் NREM (Non Rapid Eye Movement)  என்ற நிலையில் இருக்கும்போது விழிப்புணர்வு குறைவாக இருக்கும். உடல் மெதுவாக தளர்வடைவதை உணர முடியாது. இதை ஹிப்னாகோகிக் தூக்க பக்கவாதம் (Hypnagogic Paralysis) அல்லது ப்ரீடார்மிட்டல் (Predormital) என்று சொல்கிறோம்.

NREM நித்திரை முடிந்து விரைவான கண் இயக்க REM (Rapid Eye Movement) நித்திரை ஆரம்பிக்கும்போது கண்கள் வேகமாக அசைந்து கனவுகள் ஏற்படும். அப்போது தசைகள் இறுக ஆரம்பித்து விழிப்புணர்வு அதிகமாக இருந்தும் உடலின் அசைவற்ற தன்மையை உணரமுடியும். இதை  ஹிப்னோபோம்பிக் தூக்க பக்கவாதம் (Hypnopompic) அல்லது போஸ்ட்டார்மிட்டல் (Postdormital)  என்று சொல்கிறோம். ஒட்டு மொத்த தூக்க நேரத்தில் Non Rapid Movement  தூக்கம் 75 சதவிகிதம்
எடுத்துக் கொள்கிறது.’’

யாருக்கெல்லாம் வரும்?
``ஒருவருக்கு ஒருமுறையோ, அடிக்கடியோ, ஏன் ஒரே இரவில் அதிக முறை கூட தூக்க பக்கவாதம் ஏற்படும். 10ல் நான்கு பேர் ஒருமுறையாவது இதை உணர்ந்திருக்கலாம். பருவ வயதில் உள்ளவர்களுக்கு அதிகமாக வரக்கூடும். ஆனால் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அனைவருக்குமே வரலாம். சிலருக்கு பரம்பரை காரணமாகவும் தூக்க பக்கவாதம் வரலாம்.

பயத்துடன் தூங்கச் செல்வது, தூக்கமின்மை, மாறுபாடான உறக்க நேரம், மனஅழுத்தம், குப்புறப் படுத்து உறங்குபவர்கள், தூக்க குறைபாடு நோய் உள்ளவர்கள் மற்றும் மனநோய்க்கும் தூக்கத்துக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் தூக்க பக்கவாதம் வருகிறது. துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும்” என்கிறவர், அதற்கான சிகிச்சை முறைகளை
விளக்குகிறார்.

“இதை ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். நம் நாட்டில் மட்டுமல்ல... பண்டைக்காலங்களில் பாலஸ்தீனம், கிரேக்கத்திலும் மதம் சார்ந்த நம்பிக்கைகளாகவே இதை கருதினர். இது பற்றிய அச்சம் இனி தேவையில்லை. குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் நல்ல தூக்கம் அவசியம். மருத்துவரை அணுகி மன அழுத்தம், மனநோய், துயில் மயக்க நோய் மற்றும் கால் தசைப்பிடிப்புகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் தூக்க பக்கவாத நோயிலிருந்து குணமடையலாம்.

தவறாத உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்தத்துக்கான பயிற்சிகள் செய்வதும் அவசியம். எனினும், Narcolepsy என்னும் துயில் மயக்கநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களை பூரணமாக குணமடையச் செய்வது கடினம். சிகிச்சைகள் அளித்து கட்டுக்குள் கொண்டு வருவதன்மூலம் அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழமுடியும்’’ என்கிறார் டாக்டர் புவனேஸ்வரி.

பயத்துடன் தூங்கச் செல்வது, தூக்கமின்மை, மாறுபாடான உறக்க நேரம், மன அழுத்தம், குப்புறப்படுத்து உறங்குபவர்கள், தூக்க குறைபாடு நோய் உள்ளவர்கள்  மற்றும் மனநோய்க்கும், தூக்கத்துக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் தூக்க பக்கவாதம் வருகிறது.

குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் நல்ல தூக்கம் அவசியம். மருத்துவரை அணுகி மன அழுத்தம், மனநோய், துயில் மயக்க நோய் மற்றும் கால் தசைப்பிடிப்புகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் தூக்க பக்கவாத நோயிலிருந்து குணமடையலாம்.

- இந்துமதி