பெண் கொசுக்களே உயிரைக் கொல்லும்!



சிறு கடி பெரிய அபாயம்

உலகக் கொசு தினம்-ஆகஸ்ட் 20


பெண் கொசுக்கள் மலேரியாவை மனிதர்களுக்குப் பரப்புகிறது என்பதை 1897ம் ஆண்டு கண்டுபிடித்த மருத்துவர் சர். ரொனால்ட் ராஸுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இத்தினம் நினைவுகூரப்படுகிறது.

மழைக் காலமே கொசு பெருகி பல நோய்களைப் பரப்புவதற்கு ஏற்றது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொசு வகைகள் உள்ளன. அவற்றில் சில கொசுக்கள் மட்டுமே ஆபத்தானவை. ஆண் கொசுக்கள் தேனையும், பெண் கொசுக்கள் ரத்தத்தையும் தங்கள் உணவாகக் கொள்கின்றன. ரத்தத்தை உறிஞ்சும்போது பெண் கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் பரப்புகின்றன.

கொசுவால் அதிகமாகப் பரவும் நோய்கள் மலேரியா, டெங்கு காய்ச்சல், ஜப்பானிய மூளையழற்சி, சிக்குன்குனியா காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல். இதில், பெண் அனோபெலஸ் கொசுவால் மலேரியா உண்டாகிறது. டெங்கு, யானைக்கால், ஜப்பானிய மூளைஅழற்சி, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சலை ஏடிஸ் கொசு உண்டாக்குகிறது. யானைக்கால் ஜப்பானிய மூளையழற்சியை கியூலெக்ஸ் கொசு உண்டாக்குகிறது.

 கொசுக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள கொசு விரட்டியைப் பயன்படுத்தலாம். கை, கால்களை மூடிக் கொண்டு கொசு வலைக்குள் உறங்கி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். ‘கொசுக்கடி...’ என்றே நாம் பொதுவாகக் கூறுகிறோம். ஆனால், கொசுவுக்குப் பல் கிடையாது. ஆதலால், அவை உறிஞ்சுகின்றன எனலாம். கொசு பெருக இடம் அளிக்காதவாறு அருகில் உள்ள இடங்களில் நீர் தேங்க அனுமதிக்க வேண்டாம். பெண் கொசு மீண்டும் மீண்டும் கடித்து ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மலேரியாவை பரப்பும்.

நீர் தேங்கும் குட்டைகளிலும் திறந்தவெளிகளிலும் மண்ணெண்ணெய் தெளித்து கொசு பெருகுவதைத் தடுக்கலாம். மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை கொசு பரப்புமே தவிர ஹெச்.ஐ.வியை அல்ல!கூலர், ஃப்ரிட்ஜ் டிரே, பூஜாடி, கூரை போன்றவற்றில் இருந்து நீரை அகற்றவும். மின் பூச்சிக்கொல்லிகள் 1 சதவிகிதம் கொசுவையும் பூச்சிகளையுமே கொல்லுவதால் அவை அதிகமாக பயன்படுவதில்லை. கொசு வலையும், விரட்டிகளுமே அதிக செலவற்ற தடுப்பு முறைகள்.

- தோ.திருத்துவராஜ்