டியர் டாக்டர்
‘வெறி’ தலைப்பின் கீழ் உளவியல் மருத்துவர் கார்த்திக், உறவுச்சிக்கல்களையும், அவற்றிலிருந்து பக்குவமாக வெளிவரும் முறைகளையும் விளக்கியிருந்த விதம், பல்வேறு மனப்போராட்டங்களை தாங்களாகவே வரவழைத்துக் கொண்டு புழுங்கிக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு நல்ல பாடம். இதை படித்த பின்னராவது திருந்துவார்களா? - பாலகிருஷ்ணன், மேட்டூர்., அனந்தநாராயணன், பெருந்துறை மற்றும் நாராயணசாமி, கீழக்கரை.
இரைப்பைப்புண் குறித்து டாக்டர் கு.கணேசன் விவரித்து கூறியிருந்தது பயனுடையது. தாஸ் எழுதிய `உணவே மருந்தாகும் உடற்பயிற்சியே துணையாகும்’ கட்டுரை மிக அருமை. குங்குமம் டாக்டர், வாசகர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. - சு.இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை-6.
அட்டைப்பட கொலை வெறியாட்டம்... உள்ளே வாசித்ததும் ஏன் இந்த கோ(கொடூ)ரம்? என மனமும் உடலும் பதறியது. எருக்கில் இவ்வளவு மருத்துவ சரக்கா? வியந்து போனேன்! - சிம்மவாஹினி, வியாசர்பாடி.
‘COLD IS GOLD’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த ‘கோல்ட் காபி’ தகவல்கள் காபி பிரியர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
பதப்படுத்திகள் பயன்படுத்தப்படாத பதார்த்தங்களே இல்லை என்ற இன்றைய சூழலில் அதைப் பற்றி, இயற்கை வாழ்வியல் செயற்பாட்டாளர் நாச்சாள் எடுத்துக் கூறிய உண்மைகள் பதற வைத்தன. இனியாவது இத்தகைய உணவுகளுக்கு தடை போடுவோம். - கே.மனோகர், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம்.
வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்களை தவறாகப் பயன்படுத்தும்முறைகளை எடுத்துக்கூறி அதன் விபரீதங்களை ‘கலக்காதீங்க’ கட்டுரையில் பேராசிரியர் ரவி சுந்தரபாரதி விளக்கியிருந்தார். பயனுள்ள தகவல்கள்! - மீனாள், புதுக்கோட்டை.
‘செக்கு எண்ணெய்’ கட்டுரையில் எந்த எண்ணெய் நல்லது என அருமையாக விளக்கியிருந்தார்கள் மருத்துவர் சிவகுமார் மற்றும் தேசிய வேளாண் நிறுவன அறிவியலாளர் சாய்பாபா இருவரும். அவற்றைப் பத்திரப்படுத்தும் முறைகளையும் விளக்கியிருந்தது அருமை. இன்றைய சூழலுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். - வி.கல்யாணி, மாடம்பாக்கம், சென்னை மற்றும் கே.ரமேஷ், கோவைப்புதூர், கோவை.
|