வினையாகும் விளையாட்டுகள்!



புதிய போதை

‘கொள்ளையடி… கொல்… தப்பித்து ஓடு…’ஸ்மார்ட்போனில் பலரும் இப்போது விளையாடிக் கொண்டிருப்பது இதுபோன்ற விபரீத விளையாட்டுகளைத்தான். சினிமாவில் வன்முறை, ஆபாசம் என்றால் அய்யய்யோ என்று அலறுகிறோம்.

ஆனால், அதைவிட மோசமான வன்முறையாளர்களும், அரைகுறை உடை அணிந்த அழகிகளும் மொபைல் கேம்களில் சாதாரணமாக வந்து போகிறார்கள். இந்த கேம்களை விளையாடிக் கொண்டிருப்பவர்களில் பலரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். முக்கியமாக, குழந்தைகள், மாணவர்கள்...

இப்போது பலருடைய ஃபேவரைட்டாக இருக்கும் Great theft auto என்ற கேம் இதற்கு நல்ல(?) உதாரணம். வெளிநாடுகளில் பலரையும் பைத்தியம் பிடிக்க வைத்து, விரைவில் இந்தியாவுக்கும் வரவிருக்கும் Pokemon Go இந்த அபாயத்தை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.

(‘போக்கிமான் கோ’ அறிமுகமான சில மாதங்களிலேயே பல விபத்துகளும், பிரச்னைகளும் வெளிநாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. போக்கிமான் விளையாட வேண்டும் என்பதற்காக ஒருவர் வேலையையே ராஜினாமா செய்திருக்கிறார். இந்த விளையாட்டு பற்றி தனியாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.)

இன்டர்நெட் அடிக்‌ஷன், கேம் அடிக்‌ஷன் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ‘இது அதுக்கும் மேல’ என்று பதற்றத்தை உண்டாக்கி இருக்கும் இந்த விபரீத விளையாட்டுகளிடமிருந்து தப்பிப்பது எப்படி?மனநல மருத்துவர் கவிதாவிடம் பேசினோம்…‘‘மனநோய்களில் ஒன்றாகவே இணையதள அடிமைத்தனத்தையும் மருத்துவ உலகம் இப்போது வரையறுத்திருக்கிறது. அந்த Internet addiction disorderல் ஒரு பகுதி தான், இந்த மொபைல் கேம்களும், அது உண்டாக்கும் அடிமைத்தனம் உள்ளிட்ட பல பிரச்னைகளும்...

மொபைல் பயன்பாடு பற்றிப் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. சில ஆய்வுகளில் இதன் அபாயம் பற்றித் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது. மொபைல் கையைவிட்டுப் போனாலே பலர் பதற்றமாகிவிடுவதை உணர்ந்து நோமொபைல்போபியா(No mobile phobia) என்று பெயர் வைக்கும் அளவு நிலைமை மோசமாகி இருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள்.

இவர்களில் 67 சதவிகிதம் பேர் எந்த மெசேஜையும், எந்த போன் காலையும் தவறவிட்டுவிடக் கூடாது என்று தூங்கும்போதுகூட தலையணைக்கருகில் வைத்துக் கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்கள், கேம்ஸ் என்று மொபைலை தீவிரமாகப் பயன்படுத்துகிற 29 சதவிகிதம் பேர் ‘மொபைல் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது’ என்று கூறி அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த விளையாட்டுகள் இன்னும் மோசமான விளைவுகளை உண்டாக்கலாம்’’ என்று மேலும் அதிர்ச்சியைக் கிளப்புகிறார்.

இதுபோல இன்டர்நெட், மொபைல் கேம்ஸுக்கு அடிமையானதற்கு அறிகுறிகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்டோம்.‘‘இவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. பதற்றமாகவே இருப்பார்கள். சமூகத்தைவிட்டு விலகி இருப்பார்கள்.

முகம் பார்த்துப் பேசாமல் போனை பார்த்துக் கொண்டே பேசுவார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். சட்டென்று உடல் எடை கூடும் அல்லது எடை குறையும். மாணவர்களாக இருந்தால் கல்வித்திறன் குறையும். மற்றவர்களுடன் சுமுகமான உறவு இருக்காது. பெற்றோர் கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல மாட்டார்கள்.

செல்போனுடன் உணர்வுப்பூர்வமான உறவில் இருப்பார்கள். அதை ஒரு துணையாகவே நினைப்பார்கள். மூளையில் இருக்கும் செரட்டோனின் என்ற நியூரோ டிரான்ஸ்மீட்டர் பாதிக்கும்போது இதுபோல எதற்காவது எளிதில் அடிமையாகி விடுவார்கள். பாதிப்பு ஆரம்ப கட்டமாக இருந்தால் சைக்கோதெரபி, கவுன்சலிங், நடத்தை மாற்று சிகிச்சை கொடுத்து குணமாக்கிவிடலாம்.

நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து மருந்து, மாத்திரைகளும் கொடுக்க வேண்டியிருக்கும்’’ என்கிற டாக்டர் கவிதா, செல்போன் அபாயத்திலிருந்து குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்று தொடர்ந்து கூறுகிறார்.‘‘செல்போனை பயன்படுத்தவே கூடாது என்று குழந்தைகளிடம் மொத்தமாகத் தடை போடக் கூடாது. அது குழந்தைகளிடம் எதிர்விளைவுகளையே உண்டாக்கும். மேலும் பதற்றமாகலாம். முரட்டுத்தனம் உண்டாகும். ‘படிக்க வேண்டும் என்றுதானே செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறீர்கள். நான் படிக்க மாட்டேன்’ என்று நமக்கு எதிராகவே திரும்பலாம்.

அதனால், பக்குவமாகத்தான் கையாள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் செல்போன் பயன்படுத்தலாம் என்று அதை ஒழுங்குபடுத்தலாம். பள்ளியில் இருந்து வந்த உடன் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் போனில் விளையாடலாம் என்று அனுமதி தரலாம். பெட்ரூமுக்கு தூங்க வரும்போது செல்போன் கொண்டு வரக் கூடாது, சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது, படிக்கும்போது செல்போனை பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று No phone zone ஆக சில இடங்களை குழந்தைகளுடன் சேர்ந்தே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

முக்கியமாக, குழந்தைகள் என்ன மாதிரி கேம்கள் விளையாடுகிறார்கள், என்னென்ன இணையதளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிப்பது
அவசியம். இந்தக் கட்டுப்பாடுகளை அவர்கள் மறுக்கும் பட்சத்தில் உளவியல் மருத்துவரின் உதவி நமக்குத் தேவை என்பதை உணர வேண்டும்’’ என்கிறார்.
இந்த விளையாட்டுகள் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?

‘‘வன்முறை, ஆபாசம் நிறைந்த கேம்களை விளையாடுகிறவர்கள் உலகத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் வளர்வார்கள். முரட்டுத்தனமாகவோ, வன்முறை மூலமாகவோ ஆசைப்படுவதை அடைந்துவிடலாம் என்ற எண்ணம் உருவாகும்.

சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் எளிதில் ஈடுபடலாம். எதிர்காலத்தில் அவர்களது குணநலனையே இந்த கேம்கள் தீர்மானிக்கும். கேம்களில் வரும் குற்றவாளிகளை ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.அதனால், பெற்றோருக்குத்தான் நிறைய பொறுப்பு இருக்கிறது. மொபைல் கேம்கள் பெற்றோரின் செல்போனில் இருந்தே குழந்தைகளுக்குச் செல்கிறது. அதனால், பெற்றோர் முதலில் அந்த கேம்களை டவுன்லோட் செய்து வைக்கக் கூடாது; விளையாடக் கூடாது.

குழந்தை அழுதால் செல்போனை கொடுத்துவிடுவது, கொஞ்ச நேரம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைப்பது என செல்போன் அடிமைத்தனத்தைப் பெற்றோர்களே உருவாக்குகிறார்கள். அதனால் பெற்றோருக்கே கவுன்சலிங் கொடுக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது.

குழந்தைகள் செல்போனை பயன்படுத்தும் நேரத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றுவதும் பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. கல்வி, அறிவியல் தொடர்பான நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கிறது. அவற்றை டவுன்லோட் செய்து குழந்தைகளிடம் கொடுக்கலாம்.

டிரைவிங், செஸ் போன்ற நல்ல விளையாட்டுகள் இருக்கின்றன. ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, பில்டிங் ப்ளாக்ஸ் என்று அவர்களது படைப்புத்திறனை மேம்படுத்தும் வழிகளைப் பெற்றோர்தான் உருவாக்க வேண்டும்.விளையாட்டு என்பது நல்ல பண்புகளை உருவாக்குவதாகத்தான் நம் காலத்தில் இருந்தது. விட்டுக்கொடுப்பது, குழுவுடன் சேர்ந்து செயல்படுவது, போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற லட்சிய உணர்வை ஏற்படுத்துவது, தன்னம்பிக்கை போன்ற நல்ல பண்புகளை விளையாட்டில் கற்றுக் கொண்டோம். முக்கியமாக, ஆரோக்கியம் தரும் சிறந்த உடற்பயிற்சி யாக விளையாட்டுகள் இருந்தது.

ஆனால், வீடியோ கேம்கள், மொபைல் கேம்கள் வந்த பிறகு இந்த அடிப்படை விஷயங்களே தலைகீழாகிவிட்டது. கிராமங்களும் நகரமயமாகிவரும் சூழலில், பல குழந்தைகளுக்கு விளையாடு வதற்கான இட வசதிகளும் இருப்பதில்லை. இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்தாலும் முடிந்தவரை டிஜிட்டல் கேம்களைத் தவிர்த்து களத்தில் விளையாட  ஊக்குவிப்பதே நல்லது!’’

அடிமையாகிறவர்கள் யார்?

அடிமைத்தனங்களுக்கு ஆளாவதற்குப் பின்னால் உளவியல்ரீதியான காரணம் இருக்கிறது. டிஜிட்டல் அடிக்‌ஷனுக்கு ஆளாவது மனநலக் கோளாறின் ஒரு முக்கியமான அறிகுறி. தன்னம்பிக் கையின்மை, தனிமை, வெறுமை, குற்ற உணர்ச்சி, பயம் போன்ற வாழ்க்கை பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல், சிலர் ஏதாவது அடிமைத்தனத்துக்கு ஆளாவார்கள். அதனால் டிஜிட்டல் அடிமைத் தனத்தை ஒரு தனிப்பட்ட விஷயமாகப் பார்க்கக் கூடாது. இன்டர்நெட்டையோ அல்லது மொபைல் கேம்களையோ அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் அவர்களுக்கு மனநல ஆலோசனை நிச்சயம் தேவை.

கேம்ஸ் அடிமைத்தனத்துக்கு ஒருவர் ஆளாகியிருக்கிறார் என்றால் அவர் நேரம், காலம் பார்க்காமல் கேம் விளையாடுவார். விளையாடும் உந்துதலைக் கட்டுப்படுத்த முடியாது. நாளுக்கு நாள் அந்த நேரம் அதிக மாகும்.

இதன் பக்கவிளைவாக குடும்பத்திலும், தொழிலிலும், மாணவர்களாக இருந்தால் கல்வியிலும் பாதிப்பு ஏற்படும். நல்ல மனநிலையில் இருக்கிறவர்களும் இணைத்தை அதிகமாகப் பயன்படுத்தும்போது, நாளடைவில் மனநலப் பிரச்னைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு. 25 வயது வரைதான் நம் மூளையில் வயரிங் அப் (Wiringup) என்று சொல்லக்கூடிய முதிர்தல் நடக்கிறது.

 மூளையின் செல்களுக்கிடையில் எந்த அளவுக்கு இணைப்பு ஏற்பட்டு வளர்ச்சியடைகிறதோ, அந்த அளவு நாம் புத்திசாலியாவும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் பக்குவமானவர்களாகவும் உருவாவோம். ஆனால், இந்தப் பாதிப்புக்கு 20 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் ஆளாகிறார்கள் என்பதால், பதின் பருவத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

போக்கிமானுக்கு நோ சொல்வோம்!

கூகுள் கணக்கு வழியாக சைன் பண்ணிய பிறகு, ஜி.பி.எஸ் உதவியுடன் விளையாடுவதே Pokemon Go. வினோத உருவத்தில் ஒரு விலங்கு உங்களுக்கு எதிரில் இருக்கும். அதை அட்டாக் செய்ய வேண்டும்.

நகர்ந்துகொண்டே விளையாடினால்தான் அந்த மிருகத்தைத் தாக்கி ஜெயிக்க முடியும். ஓர் இடத்தில் அமர்ந்து விளையாட முடியாது.  விளையாட்டில் மூழ்குகிறவர்கள் கீழே குனிந்து கொண்டே போய் பள்ளத்தில் விழுவது, முட்டுச்சந்தில் இடிப்பது, சாலையில் நடந்து கொண்டு விபத்தில் சிக்குவது என பல பிரச்னைகள் போக்கிமான் பெயரால் நடக்க ஆரம்பித்துவிட்டன.

இந்தியாவுக்கு இன்னும் போக்கிமான் வரவில்லை. அமெரிக்கா , ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. அதற்குள் பலரையும் பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறது. விரைவில் சர்வதேச அளவில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்கிமான் கோ விளையாட்டின் அபாயம் புரிந்து Pokemon No என்றெல்லாம் தொலைக்காட்சியில் எச்சரிக்கை நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. இதற்கு போக்கிமான் மேனியா என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.

அதனால் இந்தியாவுக்கு வரும் முன்னரே போக்கிமானுக்கு நோ சொல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அது சரி… போக்கிமான் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? Pocket monster என்று அர்த்தம். அதாவது, பைக்குள் இருக்கும் பயங்கரம் என்று அர்த்தம். பெயரிலேயே பயங்கரமா?

- ஞானதேசிகன்