எடை குறைக்க இதுவே அற்புத வழி!



குழந்தையின் முதல் டாக்டர்

ஆகஸ்ட் 1-7 உலக தாய்ப்பால் வாரம்


‘குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் அளிப்பது  பிரசவத்துக்கு பிந்தைய 22 சதவிகித குழந்தை மரணங்களைத் தடுக்கும். தமிழ்நாட்டிலோ 54.7 சதவிகித தாய்மார்கள்தான் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்’ என்ற தகவலை சமீபத்தில் யுனிசெஃப் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் அதன் தலைமை அலுவலர் ஜாப் ஜக்காரியா தெரிவித்தார்.

‘‘தாய்ப்பால் கொடுப்பது தாய் மற்றும் சேய் இருவருக்குமே நன்மை பயக்கக்கூடியது என்ற கருத்து தமிழகத்தில் கலாசார  ரீதியாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது. இடையில் நாம்தான் அதை  மறந்துவிட்டோம்” என்ற ஆதங்கத்தோடு பேச ஆரம்பிக்கிற மகப்பேறு மற்றும் பிரசவ
ஆலோசகரான டாக்டர் கெளரி மீனா தாய்ப்பால் மகிமைகளைப் பட்டியலிடுகிறார்.

‘‘புதிதாகப் பிரசவித்த இளம் தாய்க்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சி, பயம், கவலை போன்ற கலவையான உணர்வுகளால் சில சமயம் ‘Postpartum depression’ என்று சொல்லக்கூடிய பிரசவத்துக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படும். தன்னுடைய வயிறு முன்பிருந்ததைப் போல அல்லாமல் பெருத்திருப்பது, அடி வயிற்றில் ஏற்படும் சுருக்கங்கள், சிசேரியன் அறுவைசிகிச்சையின் போது போடப்படும் தையல் தழும்புகள் போன்ற உடலின் மாற்றங்களைக் கண்டு மன அழுத்தம் அடைவார்கள்.  தாய்ப்பால் கொடுக்கும் போது தன் குழந்தையின் மீதான ஈர்ப்பு அவளின் மனஅழுத்தத்தை போக்கும் சக்தி வாய்ந்தது. 

 வியர்வை  சிந்தாமல், உட்கார்ந்த நிலையிலேயே எடை குறைக்க உதவும் உடற்பயிற்சி உண்டென்றால் அது தாய்ப்பால் கொடுப்பதுதான். எடை குறைக்க நினைக்கும் பெண்கள் எவ்வளவு காலம் கொடுக்க முடியுமோ, அதுவரை தாய்ப்பால் கொடுக்கலாம்.  தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பதால் இயற்கையாகவே கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும்.

மற்ற பெண்களைக் காட்டிலும் அதிகநாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் சினைப்பை கட்டி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை அடுத்த கர்ப்பம் தள்ளிப்போவதால், இது ஓர் இயற்கையான கருத்தடை முறையாக அமையும்.

 சமீபத்திய ஆய்வு ஒன்றில் தாய்ப்பால் தரும் பெண்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு குறைவதாகவும் கண்டறிந்துள்ளனர்.  சில குடும்பங்களில், கர்ப்பிணிகளை  அக்கறையோடு கவனித்துக் கொள்வதாக நினைத்து அதிக உணவு கொடுப்பார்கள். அதனால் அவர்களின் எடை அதிகரிக்கும்.  எடை கூடும்போது தானாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் அதிகரித்துவிடும். இதற்கும் தாய்ப்பால்தான் நல்மருந்து. பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் தர ஆரம்பித்தவுடன் படிப்படியாக சர்க்கரை, ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும்.

தன் உடலை உருக்கி ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் தருகிறாள். இதனால் அவளது உடலில் கால்சியம், இரும்புச்சத்து குறைந்துவிடும். பால் கொடுக்கும் பெண்கள் தன் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதுடன், இவை அடங்கிய உணவுகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்.

இப்படி சர்வரோக நிவாரணியாக இருக்கும் தாய்ப்பாலை குழந்தை பிறந்த 1 மணி நேரத்துக்குள் கொடுப்பது அவசியம். இதை ‘கோல்டன் அவர்’ (Golden hour) என்று சொல்கிறோம். இங்கு பெரும்பாலான பெண்கள் அதை பின்பற்றுவதில்லை. சில மருத்துவமனைகளில், சிசேரியன் பிரசவம் ஆன பெண்களை தனியாகவும், குழந்தைகளை தனியாகவும் பிரித்துவிடுகிறார்கள். இதனால் பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்ட முடிவதில்லை.

முதல் சீம்பால் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது.  மருத்துவமனையில் இருக்கும்போதே தாய்,  நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஊட்டிவிடுகிறாள். முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் தேவையில்லை. இப்போதைய இளம்பெண்கள் ‘போதிய பால் சுரப்பதில்லை... அதனால் பால் பவுடர் கொடுக்கிறோம்’ என்கிறார்கள்.

அமைதியான சூழ்நிலையில், மனநிறைவோடு தாய்ப்பால் கொடுக்கும்போது அந்தக் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும். குறைமாதக் குழந்தையோ, நிறைமாதக் குழந்தையோ அந்தக் குழந்தையின் தேவைக்குத் தகுந்தவாறு அன்னையிடம் பால் சுரக்கும். மணம், ருசியை வைத்து தன் தாயின் மார்பகங்களை கண்டுபிடித்துவிடும் ஆபூர்வ சக்தி பிறந்த குழந்தைக்கு உண்டு. தாய்தான்  குழந்தையின் முதல் டாக்டர். குழந்தைக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற எந்த தொற்று நோய்களுக்கும் தாய்ப்பால்தான் மருந்து. அதற்கு இணையான வேறு மருந்து கிடையாது!’’ என்கிறார் டாக்டர் கெளரி மீனா.

வியர்வை சிந்தாமல், உட்கார்ந்த  நிலையிலேயே உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சி உண்டென்றால் அது தாய்ப்பால் கொடுப்பதுதான். எடையைக் குறைக்க நினைக்கும் பெண்கள் எவ்வளவு  காலம் கொடுக்க முடியுமோ அதுவரை தாய்ப்பால் கொடுக்கலாம்!

- இந்துமதி