அன்புதான் முதல் மருந்து!



நைட்டிங்கேல்களின் கதை

ஆயிரம் சோகங்களை மனதில் புதைத்து சிரிக்க சிரிக்க பேசுகிறவர் விஜயலட்சுமி. கோபத்தில் கூட அவரது வார்த்தைகளுக்கு மூக்கு சிவந்ததில்லை. மிகப்பெரிய துக்கம் மனதை தாக்கிய போதும் கண்கள் தளும்பியதில்லை. எல்லாவற்றையும் மனதுக்குள் விதையாக்கி தீர்வுக்காக நகர்ந்தவர். கிராமத்துப் பெண்ணுக்கு ஏழ்மை பரிசளிக்கும் அத்தனை வரங்களுக்கும் ெசாந்தக்காரர்.

செவிலியராக தன்னை உயர்த்திக் கொண்டு கிராமத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது முதல் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்துவது வரை கனிவுடன் பணியாற்றியுள்ளார். தனது செவிலியர் பணிக்காக மருத்துவர்களால் பாராட்டப்பட்டவர். இன்று 68 வயதில், தான் பணியாற்றிய மக்கள் மத்தியிலே மதிக்கப்படும் பாட்டியாக வலம் வருகிறார் விஜயலட்சுமி!

விஜயலட்சுமிக்கு சொந்த ஊர் ராசிபுரம். தாய் ருக்மணி, தந்தை சண்முகம்.  விஜயலட்சுமிக்கு 3 வயதிருக்கும் போதே தாய் இறந்து விட, தாய் பாசத்துக்கான ஏக்கங்களுடன் வளர்ந்தார். ஐந்தாம் வகுப்பு முதலே, சித்தப்பா வீடு, பாட்டி வீடு என உறவுக்காரர்கள் வீடுகளில் தங்கியிருந்து தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தாயை இழந்து தந்தையை பிரிந்து வாழ்ந்த அந்தப் பெண் 11ம் வகுப்பு வரையே படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் உறவுகளை சார்ந்து வளர்ந்த விஜயலட்சுமிக்கு ஜலகண்டாபுரம் பாண்டியன் வளவு பகுதியை சேர்ந்த துரைராஜூடன் திருமணம்.

துரைராஜூக்கு  வேலை இல்லை. ராஜா, சிவா, சுமதி என அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலை. குடும்பத்தையும், மூன்று குழந்தைகளையும் எப்படி காப்பாற்றப் போகிறோம் என்று தவித்த அந்தப் பெண், ஏதாவது வேலைக்குப் போக முடியுமா என்று தெரிந்த நபர்களிடம்
விசாரித்தார். வேதனைக்கு இடையே வேலை தேடினார்.

 சேலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து நர்ஸ் படிப்பில் சேர விசாரித்த அன்றுதான் விண்ணப்பிக்க கடைசி நாள். அங்கிருந்தோர் உதவியோடு விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு நம்பிக்கையோடு வீடு திரும்பினார் விஜயலட்சுமி. பின்னர், 2 ஆண்டு நர்ஸ் பயிற்சி முடித்து விட்டு வேலைக்கு சென்ற வேளையில், விஜயலட்சுமியின் கணவரும் இறந்து விட குடும்பத்தின் மொத்த பாரமும் அவரது தோள்களில். இத்தனை வலிகளோடுதான் அவர் கிராமத்து வீதிகளில் செவிலியராக வலம் வரத் தொடங்கினார்.

இனி விஜயலட்சுமி... ‘‘விவரம் தெரிந்த வயதில் அம்மா இல்லை. அந்த தனிமை எப்போதும் மனதை வாட்டிக் கொண்டே இருக்கும். உறவினர் உதவியில் படிப்பும் திருமணமும் முடிந்தது. கணவருக்கும் வேலை இல்லை. மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு பசிக் கொடுமையில் தவித்தோம். இல்லாமையும் இயலாமையும்தான் எனது காலில் நின்று வாழ்க்கையை நகர்த்த கற்றுத் தந்தது.

திருமணம், குழந்தைகள் என்று ஆன பின்னர் வயிற்றுப் பாட்டுக்காகத்தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தேடினேன். 11ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில் படித்த உடனே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை. படிப்பதற்கு செலவு செய்யும் வாய்ப்பும் இல்லை. ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று பலரிடமும் விசாரித்தேன்.

அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த அன்று விண்ணப்பிக்க கடைசித் தேதி. எனது கஷ்ட நிலைமையை பார்த்து அங்கிருந்தவர்களே விண்ணப்பிக்க உதவினர்.
இரண்டு ஆண்டு பயிற்சி முடித்து வேலைக்கு வந்த சில நாட்களில் கணவரும் இறந்து விட தனித்து விடப்பட்ட மாதிரி உணர்ந்தேன்.

வலிகள் எனக்கு புதிதில்லை. எப்ேபாதும் ஏதாவது ஒரு பிரச்னை துரத்திக் கொண்டே இருக்கும். குழந்தைகளின் அன்பு என்னை மறுபடியும் வேகமாகச் செயல்பட வைத்தது. அவர்களுக்காக உழைக்க நர்சிங் ேவலை கை கொடுத்தது.  குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு, வேலையும் பார்க்கத் ெதாடங்கினேன்.

1974ல் நர்சிங் பயிற்சியை முடித்து எலவம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ேகாம்பூரான் காடு மற்றும் இருப்பாலி என ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியராக பணியாற்றினேன். கிராமம் கிராமமாக நான் சந்தித்த பெண்களின் வாழ்க்கை என் உறுதியை இன்னும் அதிகப்படுத்தியது. எனது தனிமை மெல்ல என்னை விட்டு அகன்றது.

ஆண் வாரிசுக்காக தொடர்ச்சியாக குழந்தைப் பேற்றுக்கு ஆளான பெண்கள், போதிய விழிப்புணர்வு இல்லாமல் கருக்கலைப்புக்கு ஆளாக்கப்படும் பெண்கள் என வலிகளை சந்திக்கும் பெண்களோடு பழகும் நிலை. பெண்ணின் உடல் எப்போதும் ஆணின் விருப்பத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. அவளது உடல்நிலை பற்றி யாருமே கவலைப்படவில்லை. இதுதான் யதார்த்தம்.

கிராமப்புறங்களில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பிரசவம் பார்ப்போம். மிகவும் பின்தங்கிய கிராமம் மற்றும் அவசர நேரங்
களில் வீட்டுக்கே சென்று பிரசவம் பார்த்த அனுபவங்களும் உண்டு. தனக்கு எத்தனை குழந்ைத வேண்டும் என்றோ,  பிரசவத்துக்குப் பின் தன் உடலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றோ, அந்தக் காலகட்டத்தில் பெண்கள் பெரிதாக கவலைப்பட்டதில்லை.

இதனால் பலரும் உடல் அளவில் சத்துக் குறைபாடு மற்றும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. குழந்தை இல்லை என்ற காரணத்துக்காக வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டனர். முடிந்த அளவு அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். பிரசவம் பார்ப்பதோடு என் வேலை முடிந்து விட்டதாக நினைக்கவில்லை. என்னைப் பொறுத்த வரை, ‘குழந்தை இல்லை என்பதற்காகக் கவலைப்பட வேண்டாம்’ என்றுதான் சொல்லுவேன்.

தத்து எடுத்து வளர்க்கலாம். இதற்காக தன்னை நம்பி வந்த பெண்ணை கணவன் நிர்கதியாக்குவதும் கொடுமைப்படுத்துவதும் நியாயம் இல்லையே. இரண்டு குழந்தைகளுக்கு பிறகு, கணவன், மனைவி இருவரிடமும் பேசி குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வலியுறுத்துவேன்.

என்னால் முடிந்த வரை பெண் தனது உடலையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள உதவினேன். பலரும் தங்களது குடும்ப பிரச்னைகளையும் மனம் விட்டுப் பேசுவார்கள். அன்பு மட்டும்தான் அவர்களுக்கு என்னால் அளிக்க முடிந்த முதல் மருந்து. அந்த அன்பு இன்றளவும் அவர்களிடம் என்னை ஒரு உறவாகவே இணைத்து வைத்துள்ளது. கட்டிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில்தான் கடைசி 20 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றினேன்.

நான் பிரசவம் பார்த்த குழந்தைகளும் பெண்களும் என்னை பார்த்த இடத்திலெல்லாம் ‘பாட்டி’ என அன்போடு என்னை அழைத்து விசாரிக்கின்றனர். பக்கத்து கிராமங்களிலும் சிக்கலான பிரசவங்களுக்கு எப்போது அழைத்தாலும் சென்று உதவினேன். நான் சந்தித்த அத்தனை பெண்களின் மனதிலும் வாழும் வரத்தை செவிலியர் பணி எனக்கு அளித்தது.

இதைவிட பெரிய விருது என்ன வேண்டும்?’’ என்று பெருமிதப்படுகிறார் விஜயலட்சுமி!ஆண் வாரிசுக்காக தொடர்ச்சியாக குழந்தைப் பேற்றுக்கு ஆளான பெண்கள், போதிய விழிப்புணர்வு இல்லாமல் கருக்கலைப்புக்கு  ஆளாக்கப்படும் பெண்கள் என வலிகளை சந்திக்கும் பெண்களோடு பழகும் நிலை...

- எஸ்.ஸ்ரீதேவி
படங்கள்: ஆர்.பாலமுருகன்

விஜயலட்சுமி