டீன் ஏஜில் பொக்கையா?



ஸ்மைல் ப்ளீஸ்!

காலம் மாறுது… கவலைகளும் மாறுது…தாத்தா, பாட்டி வயதில் பற்கள் விழுவது இயல்புதான். அது முதுமையின் அழகில் ஒன்றாகவும் ஆகிவிடும். ஆனால், பதின் பருவத்திலேயே மொத்தப் பற்களும் விழுந்து பொக்கை வாயாகி விட்டால்?

Papillon Lefevre Syndrome என புரியாத பெயர் கொண்ட இந்தப் பிரச்னை இன்று குழந்தைகளிடம் உருவாகி வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். வயதான பிறகு, பல் போனால் சொல் மட்டும்தான் போச்சு. இளவயதிலேயே என்றால் என்ன ஆகும்? பல் மருத்துவரான குணசீலன் ராஜனிடம் பேசினோம்...

‘‘முதலில் ஒரு விஷயம்… இது 10 லட்சம் பேரில் ஒரு குழந்தைக்குத்தான் வரும். எல்லோரும் பயப்பட வேண்டியதில்லை. இன்னொன்று மரபியல் காரணமாக ஏற்படுகிற இந்தக் குறைபாட்டை கருவிலேயே கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது.

Papillon Lefevre Syndrome வந்துவிட்டாலும் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. முழுவதுமாகக் குணப்படுத்த முடியும். பெற்றோரும் மருத்துவர்களும் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருந்தால் போதும்’’ என்று நம்பிக்கை தருபவர், இந்தக் குறைபாட்டின் தன்மை பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘பி.எல்.எஸ். பிரச்னை  கொண்ட குழந்தைகளுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் வளர்கிற பருவத்தில் எந்த வித்தியாசமும் தெரியாது. மற்ற குழந்தைகளைப் போலவே பால் பற்கள், நிரந்தரப் பற்கள் என எல்லா வகை பற்களும் முளைக்கும்.

ஆனால், பி.எல்.எஸ். பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு ஒரு கட்டத்தில் பற்கள் விழ ஆரம்பிக்கும். 15, 16 வயதுக்குள் முக்கால்வாசி பற்கள் விழுந்துவிடும் நிலைக்கும் ஆளாகலாம். அதனால், பற்கள் விழுவது குழந்தைப் பருவத்தில் சாதாரணமானதுதானே என்று நினைக்கக் கூடாது.

இந்தக் குறைபாட்டுக்கு காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. மரபியல் காரணங்களால் உண்டாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்குப் பற்களைத் தாங்கும் வேர் பலவீனமாக இருக்கும்.

பற்களின் வேர்கள் தாடையில் இருப்பதால் தாடை வளர்ச்சியும் இதனால் பாதிக்கப்படலாம். பொதுவாக, பற்களைத் தாங்கிப் பிடிப்பதற்குத்தான் தாடை எலும்பு உள்ளது. பற்கள் இல்லாமல் போய்விட்டால் தாடை எலும்பு பாதியாகக் கரைந்து விடும். பல் விழுந்த வயதானவர்களுக்கு பொக்கை ஏற்பட இதுதான் காரணம்.

வாயின் அமைப்பு முழுவதுமாக மாறிவிடும் என்பதால் அவர்களால் சரியாக சாப்பிட முடியாது. சாப்பிடுகிற உணவு செரிமானம் ஆவதிலும் சிக்கல் ஏற்படும். எடையும் குறையும். வெளிப்புறத் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய உலகில் இது உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். மற்றவர்களுடன் சரியாக பழக முடியாது. பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல முடியாது. தன்னம்பிக்கை இழந்து தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுவார்கள்’’ என்கிறார் குணசீலன்.

இந்தக் குறைபாட்டை கருவிலேயே கண்டுபிடிக்க முடியுமா? என்ன சிகிச்சைகள்? ‘‘Papillon Lefevre Syndrome குறைபாட்டைக் கருவிலேயே கண்டுபிடிக்க முடியும். ஆனால், பி.எல்.எஸ். என்பது உயிருக்கு ஆபத்தான பெரிய குறைபாடு ஒன்றும் இல்லை.

அதனால், கருவிலேயே கண்டுபிடிக்கத் தவறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அன்னப்பிளவு, உதட்டுப்பிளவு போன்ற குறைபாடுகளை இன்று எளிதாக சரிசெய்ய முடிகிறது. அதேபோல, PLS மூலம் ஏற்படும் பல் குறைபாடுகளையும் எளிதில் சரி செய்ய முடியும்.

10 வருடங்களுக்கு  முன்னால்  இதை  சரி செய்ய இடுப்புப் பகுதியில் இருந்து எலும்பு எடுத்து தாடையில் பொருத்துவோம். அந்த காயம் ஆறுவதற்கே 6 மாதங்களாகும். அதுவரை காத்திருந்து பின்னரே பற்கள் பொருத்துவோம்.

ஏறக்குறைய சிகிச்சை முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதற்கு நடுவே மருத்துவமனைக்கும் அடிக்கடி பரிசோதனைக்கு வர வேண்டியிருக்கும். அதுவும் 20 சதவிகிதம் பேருக்கு குணப்படுத்த முடியாமலும் போகலாம் என்ற நிலை இருந்தது. இன்று நவீன சிகிச்சைகளினால் நம்பிக்கை தரும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

Zygoma implant முறையில் இடுப்பு எலும்பை உபயோகிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, கன்னத்தின் எலும்பிலேயே சப்போர்ட் எடுக்கலாம். தாடை எலும்பு தேய்ந்து போனாலும் கன்னம் எலும்பு தேய்ந்து போகாது. வலிமையாகவும் இருக்கும்.

சைகோமா இம்பிளான்ட் முறையில், அதிகபட்சமாக நான்கு நாளில் நோயாளி குணம் அடைந்துவிடுவார். சிகிச்சைக்குப்பின், பொருத்தப்பட்டிருப்பது செயற்கை பல் என்பது நோயாளியைத் தவிர, யாருக்கும் தெரியாது’’ என்கிறார் டாக்டர் குணசீலன், மீண்டும் நம்பிக்கை தரும் குரலில்!

பி.எல்.எஸ். பிரச்னை கொண்டகுழந்தைகளுக்கு ஒரு கட்டத்தில் பற்கள் விழ ஆரம்பிக்கும். 15, 16 வயதுக்குள் முக்கால்வாசி பற்கள் விழுந்துவிடும் நிலைக்கும் ஆளாகலாம். அதனால், பற்கள் விழுவது குழந்தைப் பருவத்தில் சாதாரணமானதுதானே என்று நினைக்கக் கூடாது...

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்