குடிக்காதீங்க...குண்டாகிடுவீங்க!



ஆராய்ச்சி

‘‘ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கிறதெல்லாம் கஷ்டம்ப்பா’’ என்று அலுத்துக் கொள்ளும் உங்களுக்கு, ‘‘நம் உடலுக்குத் தேவையான நீர் சத்தை தண்ணீரின் மூலம்தான் பெறவேண்டும் என்பதில்லை.

மாறாக நீர்ச்சத்து மிகுந்த சிலவகை காய், கனிகளிலிருந்தே தேவையான நீரைப் பெற முடியும்’’ என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளரான டாக்டர் டாமிசாங். 

அதிகப்படியான தாகம், திடீர் பசி எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது அவசியம் என்பது நமக்குத் தெரியும். ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி, நீண்டதூர ஓட்டம் மற்றும் வெயிலில் அலைந்துவிட்டு வரும் வேளைகளில் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். இந்த நேரங்களிலும் அதிகப்படியான தண்ணீர் கட்டாயம் அருந்தவேண்டும்.

உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் உங்கள் உடல், மனம் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். கவனச்சிதறல், நினைவாற்றல் மற்றும் மனநிலை சேதமடைதல் பிரச்னைகளுக்கும், தலைவலி, மலச்சிக்கல்  மற்றும் சில நேரங்களில் சிறுநீரக பிரச்னைகளுக்கும் உடலின் நீரிழப்பு காரணமாவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

இதுவே, எடைக் குறைப்பு நடவடிக்கையில் அதிக நீர் அருந்துவது முக்கியமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற
கட்டாயம் இல்லை. எடை அதிகரிப்பு, எடை இழப்பு என வரும்போது தண்ணீரின் பங்கு பற்றிய அறிவியலில் ஒரு குழப்ப நிலையே நீடிக்கிறது. நீர் குடித்தால் எடை இழப்பு ஏற்படுவதாகவும், சில ஆய்வுகள் எதிராகவும் கூறுகின்றன. எடை, உடல் செயல்பாட்டு நிலை மற்றும் வசிக்கும் இடத்தின் பருவநிலை போன்ற பல காரணிகள் உடல் நீரேற்றத்தின் அளவை நிர்ணயிக்கின்றன. அதனால், எடுத்துக் கொள்ளவேண்டிய நீரின் அளவு ஒருவருக்கொருவர்
வேறுபடுகிறது’ என்கிறார் டாமிசாங்.

‘இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பது அனைவருக்கும் எளிமையான வழி’ என்றும் சொல்கிறார் அவர். வெள்ளரி, தர்பூசணி, சாத்துக்குடி, பூசணி, சுரைக்காய்... இவை எல்லாம் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்... எடையை குறைக்கவும் உதவும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!