தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதலிடம்!



சாதனை

நேபாளத் தலைநகா் காட்மாண்டு மற்றும் பொக்ரா ஆகிய இரு நகரங்களிலும்  13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 (எஸ்.ஏ.ஜி) டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி  10-ஆம் தேதி வரை நடைபெற்றன. 27 வகையான வெவ்வேறு விளையாட்டுகளில் மொத்தம் 2700 வீரா், வீராங்கனைகள் இப்போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தெற்காசியாவுக்கு உட்பட்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவுகள் உள்ளிட்ட 7 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியில் 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என இந்தியா 312 பதக்கங்களை வென்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

முந்தைய 2016ம் ஆண்டு நடந்த போட்டிகளைக்காட்டிலும் 3 பதக்கங்கள் கூடுதலாக இந்தியா வென்றுள்ளது குறிப்பிடதக்கது. இவ்வெற்றியை அடுத்து இந்திய அணி தொடா்ந்து 13-வது முறையாகத் தெற்காசியப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது.

நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலத்துடன் 206 பதக்கங்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலத்துடன் 251 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஹுஷு, நீச்சல், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், உள்பட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் சார்பாக சென்னை இளம் வீராங்கனை கலைவாணி சீனிவாசன் குத்துச்சண்டையில் 48 கிலோ பிரிவில் தங்கமும், அந்தோனி அமல்ராஜ் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கமும்  வென்றுள்ளனர்.

-குரு