அன்று: பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தவர் இன்று: சர்வதேச சுற்றுலா நிறுவனம் நடத்தும் தொழில்முனைவோர்
வெற்றிக்கதை முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப விடாமுயற்சியும், முறையான பயிற்சியோடு சரியான திட்டமிடலும் இருந்தால், வெற்றி நம்மைத் தேடி வரும். முடிவெடுக்கும்போது மதில் மேல் பூனையாக இருக்கக்கூடாது. நாம் எப்போதும் சரியான நேரத்தில், சரியான பாதையைத் தேர்வு செய்யவேண்டும். தேர்வு செய்த பாதையில் வெற்றிகரமாக நடக்க, பல சவால்களைச் சந்திக்க நேரிடும்.
 ஆரம்பத்தில், பெரிய சவால்களாக நம் முன் தோன்றும் பல விஷயங்கள், நாளடைவில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். இன்றைய இளம் தொழில்முனைவோர் சவால்களை எதிர்கொண்டு வரலாறு படைக்க வேண்டும் எனச் சொல்லும் லா அலெக்ரியா டூரிஸம் (La Alegria international Tours Pvt Ltd) நிர்வாக இயக்குநர் திருமுருகன் தன் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
 ‘‘தருமபுரி நகரில்தான் பிறந்து வளர்ந்தேன், அப்பா அப்பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பிரிவு உதவியாளராக வேலை செய்துவந்தார். வீட்டில் நான் மற்றும் இரண்டு தங்கைகள். வீட்டிலிருந்து அம்மா எங்களைக் கவனித்துக்கொண்டார். ஒரு நடுத்தரக் குடும்பம். அப்பா ஒருவரின் சம்பாத்தியம் எங்களைப் படிக்க வைப்பதற்கும், அத்தியாவசியத் தேவைகளைச் சமாளிக்கவுமே சரியாக இருந்தது. அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில்தான் எனது பள்ளிக் கல்வியை முடித்தேன்.
நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே குடும்பத்தின் நிலைமை எனக்குப் புரிய ஆரம்பித்தது. அதனால், அப்பாவின் கஷ்டத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்து அப்பாவிடம் கூறினேன். அப்பா மருத்துவமனையில் வேலை பார்த்ததால் அவரது பரிந்துரையின் பேரில் அப்பகுதியிலுள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் சனி, ஞாயிறு மற்றும் காலாண்டு அரையாண்டு விடுமுறை நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.
மெடிக்கல் ஷாப் நேர் எதிரே பொது வாசக சாலை (Public Library) இருந்தது. அந்தச் சிறுவயதிலேயே அங்குச் சென்று நிறையப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்படிப் படித்த புத்தகங்களில் என் கவனத்தை மிகவும் ஈர்த்தது திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு. அவர் ஆரம்பக் காலகட்டத்தில் ஒரு பெட்ரோல் பங்கில்தான் வேலை செய்திருக்கிறார்.
அந்தப் புத்தகத்தின் மீதான அளவுகடந்த ஈர்ப்பால் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்குக்கு வேலைக்குச் சென்றேன். மேல்நிலைக் கல்வியை முடித்துவிட்டு அங்குள்ள ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து B.Sc. physics படித்தேன்” என்று தன் பள்ளிப் பருவம் முதல் கல்லூரிக் காலம் வரை நினைவுகூர்ந்தார் திருமுருகன்.
‘‘சிறுவயதிலிருந்தே அங்கங்கே வேலை செய்ததாலோ என்னவோ படிப்பில் ஆர்வம் குறைவாகத்தான் இருந்தது. ஏனெனில் ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்ற கனவே அதற்குக் காரணம். பட்டப் படிப்பைப் படித்து முடித்தேன். ஆனால், எனக்கு அடுத்தடுத்து இரண்டு தங்கைகள் என்பதால் அப்பாவால் மேற்கொண்டு படிக்க வைக்க வசதியில்லாமல் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நிர்வாக மேலாளராக வேலைக்குச் சென்றேன். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வேலை செய்யும் சூழல்.
அவ்வேலையைக் கடமைக்குச் செய்யாமல் முழு ஈடுபாட்டோடு செய்ததன் பலனாக அங்குள்ள ஊழியர்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்தேன். சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு நிறுவனமாக வேலை செய்துவந்ததால், ஒரு நாள் நாமும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கவேண்டும், ஒரு நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் தொழில்முனைவோராக வேண்டும் என்ற கனவு மட்டும் என்னைத் தூங்கவிடாமல் செய்தது’’ என்கிறார்.
மேலும் தொடர்ந்த திருமுருகன், ‘‘உள்ளூரிலேயே சிறியதாக ஒரு கம்ப்யூட்டர் சென்டரைத் தொடங்கினேன். அது வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருந்தாலும் என்னுடைய தேடல் தாகம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. சிறு நகரத்திலிருந்து பெருநகரப் பகுதிக்குப் போனால் இன்னும் சிறப்பாகத் தொழில் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. பெரும்பாலும் எங்கள் பகுதியிலிருந்து தொழில் செய்ய பெங்களூரு, மைசூர், ஓசூர் போன்ற இடங்களுக்குத்தான் செல்வார்கள்.
எனக்கு எப்போதுமே சென்னை பெருநகரின் மீது ஓர் ஈர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. அதனால் கையிலிருந்த தொகையை முதலீடாக எடுத்துக்கொண்டு 2008ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.சென்னை வந்ததும், எனக்குப் பழக்கமான நண்பர்களுடன் இணைந்து நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்துகொண்டிருந்தோம்.
இது எனக்கு நாளுக்கு நாள் பிரபல நபர்களின் அறிமுகத்தை அதிகப்படுத்தியது. அப்படி அறிமுகமான ஒரு நபருடன், எங்கள் (தருமபுரி) பகுதியில் காய், கனி பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமே என்ற யோசனையைக் கூறினார்.
யோசனை கூறிய நண்பரின் உதவியுடன் 2011-ல் ஏற்றுமதித் தொழிலைத் தொடங்கிச் சிங்கப்பூருக்கு காய்கறிகளை அனுப்பி வைக்கத் தொடங்கினேன். இதற்குத் துணையாக இன்னொரு தொழிலைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே என எண்ணியபோதுதான், தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு நிறையச் சுற்றுலாப் பயணிகள் போய்வருவது தெரியவந்தது.
கல்லூரியில் பி.எஸ்சி-க்கு மேல் படிக்க முடியாமல் தனியார்ப் பள்ளியில் வேலை பார்த்தபோது தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ. (ஃபினான்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்) படித்திருந்தேன். இந்தப் படிப்புடன் சேர்த்து IATA (International Air Transport Association) நடத்திய சுற்றுலா சார்ந்த படிப்பையும் முடித்தேன். இதன் பின்னரே நம்பிக்கையுடன் சுற்றுலா என்பதை ஒரு முழுநேரத் தொழிலாகச் செய்ய முடியும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. அது மட்டுமின்றி சுற்றுலாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
இப்போதெல்லாம் ஏராளமான மக்கள் சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாலும், வருங்காலத்திலும் இத்தொழில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதாலும் 2016-ல் லா அலெக்ரியா என்ற பெயரில் சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனத்தை சென்னை கோடம்பாக்கத்தில் தொடங்கினேன்’’ என்று டூரிஸத்தில் எப்படி கவனம் சென்றது என்று கூறிய திருமுருகன் படிப்படியான வளர்ச்சி பற்றியும் விவரித்தார்.
‘‘ஆரம்பத்தில், நம் மாநிலத்திற்குள்ளேயே ஆன்மிகம், பொழுதுபோக்கு எனச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, பின்னர் இந்தியாவிற்குள் பல இடங்களுக்குச் சென்றுவருவது எனத் தொடர்ந்தது. பொதுவாக எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் நம் மீது வாடிக்கையாளர் களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். அதற்கு நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
அந்த உண்மை, உழைப்பு, நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தினேன். அவர்கள் வெளிநாடு களுக்கு ஏன் அழைத்துச் செல்லக்கூடாது எனக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நேஷனல் டூரிஸம் ஆரம்பித்து அதன் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, லங்கா என உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறேன்.
வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றுவருவது வாடிக்கையாகிவிட்டதால் சிங்கப்பூரில் லா அலெக்ரியாவின் ஒரு அலுவலகத்தைத் தொடங்கினேன். அங்கிருக்கும் தமிழ் மக்களை ஆன்மிகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டமும் உள்ளது. சிறு சிறு தொழில்களாகச் செய்துவந்த நிலையில், ஒரு நிலையான தொழிலாக வளர்ந்துவிட்ட சுற்றுலாத் தொழிலைப் பல முயற்சிகளுக்குப் பிறகு இன்றைக்கு நல்லதொரு நிலையில் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்ததினால், இதுபோன்று சாதாரணக் குடும்பத்தில் உள்ளவர்களும் இந்தியா மற்றும் வெளிநாடு களுக்குச் சுற்றுலா சென்றுவரும் வகையிலான தவணை முறைத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திவருகிறேன். தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர். விமான நிலையத்திற்குள்ளேயே இதுவரையில் போகாதவர்கள் மற்றும் விமானத்தில் முதன்முறையாகப் பயணம் செய்பவர்களை அழைத்துச் சென்று வருவதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.
தற்போது தமிழகம் மற்றும் சிங்கப்பூரில் லா அலெக்ரியா அலுவலகங்கள் இயங்குகின்றன. என்னுடைய எதிர்கால வணிகத் திட்டம் என்னவென்றால், சிங்கப்பூரைத் தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து மற்றும் லங்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அலுவலகம் அமைக்க வேண்டும். இங்கிருந்து மக்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதுபோல் அங்கிருந்து மக்களை நம் நாட்டிற்கு அழைத்து வரவேண்டும்.
இவை எல்லாவற்றையும் தாண்டி சுற்றுலாத் துறையில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாலும், அத்துறை சார்ந்து கல்வி நிறுவனங்கள் குறைவாகவே இருப்பதினாலும், வரும் கல்வி ஆண்டில் சுற்றுலா சார்ந்த கல்விநிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல தொழில்முனைவோர்களை உருவாக்குவதே தனது கனவு’’ என்றார் இளம் வளர் தொழில்முனைவோர் திருமுருகன்.
- தோ.திருத்துவ ராஜ்
|