புன்னகை மனிதனுக்கு கிடைத்த வரம்!
உடல்மொழி-24
நடை உடை பாவனை
நடைமொழி
A dress is a piece of ephemeral architecture, designed to enhance the proportions of the female body - Christian Dior

உலகெங்கும் புன்னகையும், சிரிப்பும் ஒரு நபர் சந்தோஷமாக இருக்கிறார் என்பதைக் காட்டுவதாகவே இருந்துகொண்டிருக்கிறது. ஒரு மனிதன் புன்னகைக்கும்போது, அவன் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் உருவாகும், கன்னங்கள் உப்பும், கண்கள் சுருங்கும், முகத்தில் புன்னகை பூக்கும். பார்க்க புன்னகைப்பதைப் போலவே இருக்கும்.
ஆனால், புன்னகை நிஜமானதா அல்லது பொய்யானதா என்பதைச் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். ஒரு புன்னகை உண்மையானதென்றால் புருவத்திற்கும் கண் ரப்பைக்கும் இடைப்பட்ட பகுதி சரிந்து சுருங்கும், புருவ நுனி கீழே சரியும். பொய்யான புன்னகை பாவனையில் இதை வெளிப்படுத்த முடியாது.

ஒரு குழந்தை பிறந்ததும் அழத் தொடங்குகிறது. ஐந்து வாரங்கள் கடந்த பின்னரே அது முதன்முதலாகப் புன்னகைக்கத் தொடங்குகிறது. அழுதால்தான் அடுத்தவர் கவனத்தை ஈர்த்து பசியாற முடியும், சிரித்தால் அடுத்தவர் கவனத்தை ஈர்க்க முடியாது என்பதை அறியும் குழந்தைகள் கவனத்தை ஈர்ப்பதற்காகவே அழுகின்றன.
‘ஏதாவது வேணும்னா உடனே அழுது அடம் பிடிக்காதே’ என்று அம்மாக்கள் சுட்டிக்காட்டுவதும் இதைத்தான். அதே குழந்தை வளர வளர புன்னகைத்தால்தான் அடுத்தவர் கவனத்தை ஈர்க்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளத் தொடங்குகிறது.
பரிணாம வளர்ச்சியின்படி, முதன் முதலாகப் புன்னகை என்ற பாவனையைக் காட்டியவர்கள் சிம்பன்சிகள்தான் (நமது நேரடி முன்னோர்கள்). சிம்பன்சிகள் புன்னகைப் பாவனையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன. ‘கிட்ட வராதே, தள்ளிப்போ’ என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவே புன்னகைத்துக் காட்டுகின்றன.
இதன் தொடர்ச்சிதான் இன்றளவும் சில மனிதர்கள் கோபப்படுமுன் சிரிக்கிறார்கள். சிம்பன்சிகளின் புன்னகையை ஆராய்ந்த மானுடவியலாளர்கள், ‘சிம்பன்சிகள் எரிச்சலுடன் எச்சரிக்கை செய்யும்போதும், குறும்புத்தனத்தின்போதும் புன்னகையைக் காட்டுகின்றன’ என்கிறார்கள். மனிதர்களும் இப்படி இரண்டு நிலைகளிலும் புன்னகைப்பதுதான் ஹைலைட். சிம்பன்சிகளிடமிருந்து தோன்றிய இதே உணர்ச்சிதான் மனிதர்களிடமும் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு அறையில் ஒளிந்து கொண்டிருந்த சிறுவர்கள் ‘பே’ என்று கத்தியபடி திடீரென்று நம் முன்னால் வெளிப்பட்டால் சட்டென்று ஒரு ‘கிலி’ ஏற்பட்டு, விறுக்கென்று பயந்துவிடுவோம். அந்த சமயம் பாருங்கள் பயம் எட்டிப்பார்த்த மறு விநாடி அதை மறைத்து உடனடியாக லேசாக புன்னகைக்கத் தொடங்குவோம்.
மனிதர்கள் எப்போது பய உணர்ச்சியை சந்தித்தாலும் பிறகு அதை தங்கள் புன்னகையால் மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதேபோல் ஒருவரிடம் நெருக்கமாக பழகும்போது, அவர் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையை ஏற்படுத்த, நண்பராக பாவிக்க புன்னகை ஒரு சாதனமாகவே இருந்துகொண்டிருக்கிறது.
உடல்மொழி வழியாக சகமனிதரைப் பார்த்ததும் சிநேகமாக புன்னகைக்க இதுவே முக்கியக் காரணம். மனிதர்களின் அனைத்து உணர்ச்சி வெளிப்பாடுகளில் ஏதோ ஒரு வடிவில் புன்னகையின் சாயல் இருந்துகொண்டேயிருக்கிறது. சிலரின் அழுதுவடியும் முகம் பார்க்க சிரிப்பது போல் இருப்பதும் அதனால்தான். அடுத்தவரிடம் மன்னிப்பு கேட்கும்போதுகூட, இறுக்கமான முகத்துடன் கேட்பதைவிட மெல்லிய புன்னகையுடன் கேட்கும் மன்னிப்புதான் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, அங்கீகரிக்கப்படுகிறது.
பார்த்ததும் பரவும் புன்னகை
உடல்மொழியின் பயன்பாட்டில், மனிதர்களுக்கிடையே பரிமாறப்படும் புன்னகை ஒரு தொற்றுவியாதிபோல் சட்டென்று ஒட்டிக்கொண்டுவிடுகிறது. புன்னகை ஒரு அற்புதமான விஷயம். மனிதர்களுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லவேண்டும். அது எப்போதும் நேர்மறையான உணர்ச்சிகளை மட்டுமே ஏற்படுத்தக்கூடியது. ஒருவரைப் பார்த்து புன்னகைக்கும்போது பாசிட்டிவ் உணர்ச்சி பரிமாறப்படுகிறது. புன்னகையை எதிர்கொள்ளும் மனிதர் பதிலுக்குப் புன்னகைக்கிறார். புன்னகை நிஜமானதாக இருந்தாலும் சரி, பொய்யானதாக இருந்தாலும் சரி, அதை ஏற்கும் யாரும் பதிலுக்குப் புன்னகைக்கவே செய்கிறார்கள்.
ஸ்வீடன் நாட்டில் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உல்ஃப் டிம்பர்க் என்பவர், மனிதர்களின் மனம் எப்படி முகத்தசைகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஓர் ஆய்வை நடத்தினார். கிட்டத்தட்ட 100 மனிதர்களை தேர்வு செய்து அவர்களின் முகத் தசைநார்களிலிருந்து வெளிப்படும் மின் சிக்னல்களை (சமிக்ஞைகள்) அளக்க ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை நடத்தினார்.
அதில் ஒரு மனிதனின் கோபமான முகம், புன்னகையான முகம் என்று இரு புகைப்படங்களைக் காட்டி கோபமான முகம் கொண்ட புகைப்படத்தைப் பார்த்ததும் புன்னகைக்க வேண்டும், புன்னகையான முகம் கொண்ட புகைப்படத்தைப் பார்த்ததும் கோபத்தைக் காட்டவேண்டும் என்றார். இதென்ன பிரமாதம், புகைப்படங்களுக்கு எதிர்ப்பதமான உணர்ச்சி பாவனையை காட்டவேண்டும் அவ்வளவுதானே என்று பலரும் ஒத்துக்கொண்டார்கள்.
புன்னகை முகம் கொண்ட படத்தைப் பார்த்ததும் கோபமாக பார்க்க முடிந்தவர்களால், கோபமான முகம் கொண்ட படத்தைப் பார்த்ததும் புன்னகைக்க முடியவில்லை. அந்தப் படத்தைப் பார்த்த பலருக்கும் சட்டென்று முகம் சுழிக்கத்தான் முடிந்தது. அப்போது சிரிப்பது மிகக்கடினமாக இருந்தது. அறிவுப்பூர்வமாக முகத்தசைகளை கட்டுப்படுத்துவது கடினமானதாக இருந்தது. எத்தனை முயன்றபோதும் மனதில் உதிக்கும் உணர்ச்சிகள்தான் முகத்தில் வெளிப்பட்டது. அப்போதுதான் முகத்தசைகளை இயக்கக்கூடியதாக மனம் இருக்கிறது என்பதை உல்ஃப் டிம்பர்க் விளக்கினார்.
மனிதர்களின் இயல்பான முகபாவனைகளை மனம்தான் இயக்குகிறது.கண்கள் வழியாகக் காட்சிகளை உணர்ந்த நிலையிலும், உணர்வற்ற நிலையிலும் ஏற்கும் மனம் அதை முகபாவனைகளாகப் பிரதிபலித்துக்கொண்டேயிருக்கிறது. மனதின் பாய்ச்சலுக்கு முகம் ஒரு கருவியாக இருந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் புன்னகைப்பதை ஒரு பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
வியாபார ரீதியாக நடக்கும் பேச்சுவார்த்தைகளின்போது சரியான நேரத்தில் வெளிப்படுத்தியப் புன்னகை நூறு சதவிகித வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.எந்த அளவுக்கு புன்னகையை முகத்தில் படரவிடுகிறோமோ அதைவிட அதிக அளவுக்குப் பலனை அறுவடை செய்யலாம். புன்னகையால் வேறு என்ன செய்ய முடியும்…?!!
உடை வழி - டர்பன் (தலைப்பாகை)
மதங்கள் தோன்றிய காலத்திலிருந்தே டர்பன் அணியும் வழக்கமும் தோன்றியிருக்கிறது. உலகில் டர்பன் இல்லாத மதங்கள் அரிது. டர்பன் மனிதர்களை மதங்களோடு இணைக்கும் பாலமாகவே இருந்துகொண்டிருக்கிறது. எல்லா மதங்களும் டர்பனை ஆண்களின் உடையாகத்தான் வைத்திருக்கிறது.
* Islam : இஸ்லாமியர்கள் டர்பனை தங்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடையாகவே அணிகிறார்கள். சியா இஸ்லாமியர்கள் வெள்ளை நிற டர்பன் மீது கறுப்புநிறப் பட்டையை அணிகிறார்கள் (சய்யிதுகள்). சூடானில் டர்பன் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும். பாகிஸ்தானில் அது வெள்ளை நிறத்தில பின்னப்பட்ட வடிவில் (தொப்பி) இருக்கும்.
* Judaism : யூதர்களுக்கு டர்பன் ஒரு முக்கியமான மத ஆடை. ஒவ்வொரு யூதரும் அவசியம் டர்பன் அணியவேண்டுமாம். காரணம், டர்பன் அணிவதால் அவர்களது பாவங்கள் விலகுவதாக நம்பப்படுகிறது.
* Sikkism : உலகம் முழுக்க டர்பன் மத அடையாளமாக இருப்பது சீக்கியர்களுக்குத்தான். சீக்கியர்களுக்கு டர்பன் அணிவது தங்கள் குருவை வணங்குவதான செயல். டர்பன் அணிந்த சீக்கியர் ஏற்றத்தாழ்விற்கு அப்பாற்பட்டவராகிறார். சீக்கியத்தின் முக்கியக் கொள்கை சக மனிதருக்கு உதவவேண்டும் என்பதே.
அந்த வகையில் எந்த ஒரு கூட்டத்திலும் டர்பனை வைத்து சீக்கியரைச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதை உணர்த்தும் விதமாகத்தான், ‘‘பல்லாயிரக்கணக்கானவர் மத்தியிலும் சீக்கியரைச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்’’ என்றார் சீக்கிய மதக் குருவான குருகோபிந்த்.
சீக்கியர்கள் டர்பனை Morni Turban, Patiala Turban, Vattan Turban Amritsar Turban என்று 4 விதமாக அணிகிறார்கள். பொதுவாக சீக்கியர்கள் நீலம், வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்களில்தான் டர்பனை அணிகிறார்கள். வெள்ளைநிற டர்பனை அணிந்தவர்கள் துறவு நிலை கொண்டவர்களாகவும், (வானத்தைப் போல) நீலநிற டர்பனை அணிபவர்கள் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டவர்களாகவும், கறுப்பு-ஆரஞ்சுநிற டர்பனை அணிந்தவர்கள் வீரர்களாகவும், ராயல் ப்ளூ நிறத்தில் டர்பனை அணிபவர்கள் சீக்கிய மதத்தைக் கற்பவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். திருமணம் போன்ற விசேஷத்தின்போது ரோஸ் நிற டர்பன் அணிவார்கள்.
டர்பன் துணியால் இருப்பதாலோ என்னவோ இன்றைய தேதியில் சீக்கியர்கள் அணியும் டர்பனிலும் ஃபேஷன் நுழைந்துவிட்டது. இன்றைய தேதியில் சில சீக்கியர்கள் தங்கள் மேலாடை உடையின் வண்ணத்திற்கேற்ப அதே நிறத்தில் டர்பனை அணிந்துகொள்கிறார்கள்.
- தொடரும்
|