கண்களைக் கட்டிக்கொண்டு புத்தகம் வாசிக்கும் மாணவி!



சாதனை

கண்களைத் திறந்துகொண்டே தட்டுத் தடுமாறி நடப்பதும், தப்புத்தப்பாக படிக்கும் நபர்களை நாம் பார்த்திருப்போம், கண்களைக் கட்டிக்கொண்டு எதிரில் உள்ள பொருட்களின் வண்ணங்களைக் கூறுவது, புத்தகங்களை வாசிப்பது மற்றும் அதனை எழுதிக்காட்டுவது என ஆச்சரியப்படுத்தியவரை பார்த்திருக்கமாட்டோம். ஆனால் அப்படி ஒரு அசாத்திய செயலை நிகழ்த்தி அசத்துகிறார் பழனி அருகே உள்ள சின்னக் கலையம்புத்தூரைச் சேர்ந்த லட்சுமணன் - ஜோதி தம்பதியரின் 12 வயது மகள் ராகவி. இந்தத் திறமை எப்படி வந்தது என அச்சிறுமியின் தாய் ஜோதியிடம் பேசினோம்…

‘‘திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் குரும்பப்பட்டி தான் எங்களது சொந்த ஊர். தற்போது அங்கிருந்து குடிபெயர்ந்து சின்ன கலையம்புத்தூர் என்ற பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரே மகள் ராகவி. அவள் அப்பகுதியிலுள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறாள். கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் பகுதியில் நடைபெற்றுவரும் தியான வகுப்புக்கு நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்.

ஒரு பிரம்மாண்டமான தியான வகுப்புக்காக ஹைதராபாத் போக நேர்ந்தது. ரயிலில் சென்றுகொண்டிருக்கும்போது எங்களைப் போன்றே கேரளாவிலிருந்து தியான வகுப்புக்கு வந்தவர்களின் அறிமுகம் கிடைத்தது. பேசிக்கொண்டிருக்கும்போது பிரைட்டர் மைன்ட் (Brighter Mind) என்ற ஒரு பயிற்சி உள்ளது, அதைக் கற்றுக்கொண்டால் மாணவர்களின் படிப்புக்கு நல்லது. ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சொன்னார்கள்.

சரி என்றைக்காவது ஒருநாள் பயன்படுமே என எங்கு நடக்கிறது, பயிற்சிக்கான நேரம் எவ்வளவு என்பதுபோன்ற விஷயங்களை விசாரித்துவிட்டு வந்தோம்.சில நாட்களுக்குப் பின்னர் உடுமலையிலுள்ள தியான மையத்தில் நடைபெற்றுவந்த பிரைட்டர் மைண்ட் பயிற்சியில் சேர்த்துவிட்டோம். நாகராஜன் என்பவர்தான் பயிற்சியளிக்கிறார்.

10 நாட்கள் பயிற்சி வகுப்பு அது. பயிற்சிக்கு சென்றுவந்துகொண்டிருக்கும்போதே எனது மகள் ராகவி கண்ணைக் கட்டிக்கொண்டு வண்ணங்களைக் கண்டுபிடிப்பது, என்ன எழுத்து, என்ன எண்கள் உள்ளன என்பது உள்ளிட்டவற்றைக் கண்டுபிடிக்கும் அவளின் நடவடிக்கைகளில் ஒருசில முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. வீட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு பொருளை வைத்தால் அது என்ன பொருள் எனச் சொல்ல ஆரம்பித்தாள்.’’ என்று தன் மகளின் தனித்திறன் தெரியவந்ததை கூறினார் ஜோதி.

‘‘பயிற்சியின்போது மகளின் படிப்புக்கு இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும் என்று சொன்னதால் படிப்பில் முன்னேற்றம் இருக்கும் என்றுதான் சேர்த்துவிட்டிருந்தேன். ஆனால், இவ்வாறு கண்ணைக் கட்டிக்கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்ததால் எங்களுக்கெல்லாம் வியப்பு தாங்கமுடியவில்லை. இவையெல்லாம் கடந்த மே மாதம் நடந்தது.

பின்னர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவந்து கொண்டிருந்தாள். இதற்கிடையில் எங்கள் குறும்பர் சங்க மாநாடு ஒன்று பழனியில் நடைபெற்றது. அப்போது எனது மகளின் செயல்கள் குறித்து தெரிந்த ஒருவர் அந்த மாநாட்டுக்கு அழைத்துக்கொண்டுவரச் சொல்லியிருந்தார். அங்கு சென்ற அவள் பெரியவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்பு இக்கலையைச் செய்துகாண்பித்தாள்.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட  எங்களது உறவினர் ஒருவர் ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார். இதனையடுத்து டிவி, செய்தித்தாள்கள் என நிறையபேர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் முன்பும் கண்களைக் கட்டிக்கொண்டு புத்தகம் வாசிப்பது, வண்ணங்களைக் கூறுவது என செய்துகாண்பித்தாள். அதன் மூலமே இன்றைக்கு அவளின் திறமை வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது. அவளது திறமையை மேன்மேலும் வளர்க்க ஒருசிலர் உதவி செய்கிறோம் எனச் சொல்லியுள்ளனர்.

எனது கணவர் லட்சுமணன் பேரூராட்சியில் தண்ணீர் தொட்டிகளில் பூச்சிகள், கிருமிகள் வராமலிருக்க மருந்து ஊற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலை தற்காலிகமானதுதான். நான் பக்கத்திலுள்ள நகரப்பகுதியில் டெய்லரிங் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால் அரசோ அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களோ அவளது திறமையை வளர்க்க உதவி செய்தால் இன்னும் சிறப்பாக வருவாள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது’’ என்கிறார் ஜோதி.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘எங்களது மகள் ராகவி படிக்கும் பள்ளியிலும் இக்கலையை செய்துகாண்பித்திருக்கிறாள். ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டதுடன், அவளை ஊக்கப்படுத்தி திறமையை மேலும் வளர்க்க உதவுவதாக சொல்லியுள்ளனர். தற்போது கண்ணைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்ட பயிற்சி செய்துகொண்டிருக்கிறாள். அடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள்.

கற்றுக்கொண்டதும் ஒரு சாதனை நிகழ்ச்சி நடத்திக்காட்டுவாள். இதற்கிடையில் தொலைதூரத்தில் நடப்பதையும் கூறும் வகையில், ஒரு தெருவைத் தாண்டி என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் பயிற்சியில் இறங்கியுள்ளாள்’’ என்று தன் மகள் மேற்கொண்டுவரும் சாகசப் பயிற்சிகள் பற்றி சர்வசாதாரணமாகச் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ராகவியின் தாய் ஜோதி.   

ராகவியின் இந்த அசாத்திய திறமையானது அனைவரையும் வியக்கவைப்பதாக அமைந்துள்ளது. மேலும் அவர் இக்கலையில் சிறந்து விளங்க பல சாதனைகளைப் படைக்க நாமும் வாழ்த்துவோம்.

 - தோ.திருத்துவராஜ்