நியூஸ் கார்னர்



செய்தித் தொகுப்பு

IIT நுழைவுத்தேர்வு தமிழில் நடத்த முடிவு!

தமிழகக் காவல் துறையில் கோப்புகள், குறிப்பாணைகள், வரைவுக்கடிதங்கள், தகவல் பரிமாற்றங்கள், பெயர்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டு
மெனச் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி ஆணையிட்டுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி காவல்துறைப் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்துப் பதிவேடுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்கவும் வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திடவும், அனைத்துக் காவல் வாகனங்களிலும் காவல் எனத் தமிழில் எழுதவும், அலுவலக முத்திரைகள் பெயர்ப் பலகைகள் தமிழில் மாற்றப்பட வேண்டுமெனவும் தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.) மற்றும் தேசியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி) உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர, ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகளின் முதன்மைத் தேர்வை (ஜே.இ.இ) இனி தமிழ் உள்ளிட்ட பத்து மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வுகள் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டுவரும் நிலையில், நீட் தேர்வுகளைப் போலவே முக்கிய மாநிலமொழிகளில் இத்தேர்வுகளை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுவந்தது.

இந்நிலையில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, வங்கமொழி, ஒடியா, அஸ்ஸாமி, மராத்தி ஆகிய 8 மாநிலமொழிகளிலும் நடத்த ஏற்பாடு செய்யும்படி இத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்காக மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கும், தமிழக டி.ஜி.பி. உத்தரவுக்கும் தமிழகக் கல்வியாராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதுடன் தொடர்ந்து தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டுமெனவும் இந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ILS கல்வி நிறுவனத்தில் Ph.D.மாணவர் சேர்க்கை!

இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸ் கல்வி நிறுவனம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட பயோடெக்னாலஜி துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக புவனேஷ்வரில் செயல்பட்டுவருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பிரிவுகள்: கேன்சர் பயாலஜி, இன்ஃபெக்சியஸ் டிசீஸ் பயாலஜி, பிளானட் பயோடெக்னாலஜி, ஹூயூமன் ஜெனிடிக்ஸ்.
கல்வித்தகுதி: துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன்  தகுதித்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.12.2019. மேலும் விவரங்களுக்கு: www.ils.res.in

மழைக்காக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுத் தேதி அண்ணா பல்கலை அறிவிப்பு!

சமீபத்தில் வடகிழக்குப் பருவமழை சில மாவட்டங்களில் கனமழையாகப் பெய்தது. அதன் காரணமாகப் பள்ளி கல்லூரி
களுக்கு விடுமுறையும், தேர்வுத் தேதிகள் மாற்றமும் செய்யப்பட்டன. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

இதன் காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மழை பாதித்த மாவட்டங்களில் கடந்த 02.12.2019 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கு அன்று நடைபெறவிருந்த பருவத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்வு, வரும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலையில் Ph.D. மாணவர் சேர்க்கை!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர முனைவர் பட்டப்படிப்புகள் பல்வேறு துறைகளில் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முனைவர் பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்.

துறைகள்: ஹிஸ்ட்ரி அண்ட் ஆர்க்கியாலஜி, ஆந்த்ரோபாலஜி, கிரிமினாலஜி, சைக்காலஜி, எஜுகேஷன், சோஷியாலஜி, பொலிட்டிக்கல் சயின்ஸ் அண்ட் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், லீகல் ஸ்டடீஸ், எக்கனாமிக்ஸ், மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் ஸ்டடீஸ், இன்ஃபர்மேஷன் சயின்ஸ், பிசியாலஜி, சைவ சித்தாந்தா, இந்தியன் மியூசிக், இங்கிலீஷ், பிரெஞ்ச், தமிழ், மேனேஜ்மென்ட், மேத்தமேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோகிராபி, ஜியோலஜி, கெமிஸ்ட்ரி, பாலிமர் சயின்ஸ், நியூக்கிளியர் பிசிக்ஸ், பயோடெக்னாலஜி மற்றும் பல துறைகள். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2019.
மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.