அன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்
*வெற்றிக் கதை
* முயற்சியால் வென்றவர்கள்


வாழ்க்கையிலும் சரி தொழிலிலும் சரி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது. அமைகின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே நிறைய தொடர்பு இருக்கிறது. டாடா, பிர்லா, அம்பானி, நாராயணமூர்த்தி, ஷிவ் நாடார் உள்ளிட்ட வெற்றிபெற்ற தொழிலதிபர்கள் எல்லாம் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே.

தன்னம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களே கஷ்டங்களில்கூட வாய்ப்பை கண்டுணர்வார்கள். அவ்வாறு ஆபீஸ் பாய் வேலையில் சேர்ந்து இன்று பல ஆட்களுக்கு வேலை கொடுப்பதோடு கோடிகளில் டேர்னோவர் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கும் பிரி்ன்ட் ஃபாஸ்ட் (Print faast) மற்றும் வெற்றி பவர்ஸ் (Vetri Powers) நிறுவனங்களின் நிறுவனர் முத்துக்குமார் தன் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

‘‘திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அடுத்த சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி என்ற சிறிய கிராமம்தான் எனது சொந்த ஊர். அப்பா திருமலை நாடார் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் செய்வதற்காக சிதம்பரம் அருகே உள்ள அய்யனூர் அக்காரமங்கலம் என்ற கிராமத்திற்கு வந்துவிட்டார். அங்கு சிறியதாக மளிகைக்கடை நடத்தி வந்தார். அதனால் பள்ளிக்கல்வி எல்லாம் அப்பகுதிகளில்தான். சிதம்பரத்தில் உள்ள ஒரு அரசினர் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்து முடித்தேன். 1992ல் வேலை தேடி சென்னைக்கு வந்தேன். ஒரு 6 மாதம் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் வேலை கேட்டு சென்றேன், வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்காததற்கு சரியான ஆங்கிலம் தெரியவில்லை என்பதுதான் பெரிய காரணமாக இருந்தது.

டிகிரி படிப்புக்கு வேலை கிடைக்காது, ஏதாவது ஆபீஸ் பாய், ஹெல்பர் வேலை தேடலாம் என அலைந்தபோது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு சிறிய பிரின்டிங் பிரஸ்ஸில் ஆபீஸ் பாயாக வேலை கிடைத்தது. தொழில் பிடித்திருந்ததால் முழு ஈடுபாட்டோடு செய்தேன். இந்தத் தொழில் நன்றாக இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றியதால் 300 ரூபாய் முதலீட்டில் தியாகராயநகரில் இருந்த எனது அக்கா வீட்டில் ஸ்கிரீன் பிரின்டிங் முதலில் ஆரம்பித்தேன். 8 மாதங்களுக்குப் பின்னர் லெட்டர் பிரஸ் என்று சொல்லப்படும் ட்ரெடில் என்ற எழுத்தச்சு மெஷின் வாங்கி சைதாப்பேட்டையில் கோடம்பாக்கம் சாலையில் உள்ள விசாகத்தோட்டத்தில் தொழிலை ஆரம்பித்தேன். அதில் படிப்படியாக வளர்ந்தேன். மேலும் இரண்டு இடங்களில் அச்சகம் ஆரம்பித்தேன்.

அந்தச் சமயத்தில் தொழில், மார்க்கெட்டிங் குறித்து எங்கு பயிற்சி வகுப்புகள் நடந்தாலும் சென்று கலந்துகொள்வேன். ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கான (மார்க்கெட்டிங்) பயிற்சி, விற்பனை (சேல்ஸ்)  வகுப்புகளுக்குச் சென்று விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனை.’’ என மகிழ்ச்சியோடு மேலும் தான் கடந்துவந்த பாதையை நினைவு கூர்ந்தார்.

‘‘தொழில் ஆரம்பித்ததில் வளர்ச்சி நன்றாக இருந்ததால் அதை ஒரு நிறுவனமாக மாற்றினேன், 28 பேர் வேலை செய்தனர். ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன. என்னால் சமாளிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு தொழில் செய்வதற்கு என்னிடம் போதுமான அளவில் பணமும் இல்லை வங்கிகளும் நம்பி கடன் வழங்க மறுத்ததால் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது. 1998ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்பச் செலவுகள் எல்லாம் அதிகமானதால் தொழிலை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.

2001ல் நானும் எனது மனைவியும் மட்டும் சேர்ந்து ஸ்கிரீன் பிரின்டிங் தொழிலை  நடத்தி வந்தோம். அப்போது வேளச்சேரியில் ஒரு ஜெராக்ஸ் கடை ஆரம்பித்தோம். அத்துடன் பிரின்டிங் செய்யத் தேவைப்படும் பேப்பர், மை போன்ற அச்சுத் தொழிலுக்கு தேவைப்படும் பொருட்களையும் விற்பனை செய்து வந்தோம். மீண்டும் ஒரு திருப்புமுனையாக அது அமைந்தது. நிறுவனம் மளமளவென வளர ஆரம்பித்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உள்ள மினி ஆப்செட் பிரஸ் மெஷின் ஒன்று வாங்கி தொழிலை சிறப்பாக நடத்த ஆரம்பித்தேன். அனுபவம் ஒரு மனிதனுக்கு சிறந்த ஆசான் என்பதுபோல் தொழிலின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டதால் நவீன உலகத்திற்கு தேவையான டெக்னாலஜியைப் பயன்படுத்தியதால் எதிர்பார்த்த வளர்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இரண்டரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளேன்’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.  

மேலும் அவர், ‘‘தற்சமயம் எங்களிடம் இரண்டு அதிநவீன டிஜிட்டல் பிரின்டிங் மெஷின், 25 x 19 இன்ச் ஆப்செட் மெஷின், தரமான எகோ சால்வென்ட் பிளக்ஸ் மெஷின், அதி நவீன வைரோ பைண்டிங் மெஷின், போல்டிங்  மெஷின், பர்ஃபெக்ட் பைண்டிங் மெஷின், அதிநவீன தானியங்கி கட்டிங் மெஷின், புதிய தொழில்நுட்பத்துடன் கோல்டு பாயில் மற்றும் பஞ்சிங் மெஷின் என அதிநவீன அச்சகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு தரமணியில் சொந்த கட்டடத்தில் சிறப்பாக இயங்கி வருகின்றது.
இதற்கிடையில் நண்பர்களுடன் இணைந்து ஆனந்தம் இளைஞர் நல அமைப்பினை ஆரம்பித்தேன்.

இதன்மூலம் 12ஆம் வகுப்பு படித்து முடித்து மேற்கொண்டு படிக்க முடியாத ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு 100% கல்வி உதவித் தொகையுடன் பொறுப்புள்ள மனிதர்களாக உயர்வதற்கு பயிற்சியும் அளிக்கிறோம். தற்போது 280 மாணவர்கள் ஆனந்தம் அமைப்பின் மூலம் படித்து வருகிறார்கள். 300 ரூபாயில் தொழிலை ஆரம்பித்தேன், அதை 300 கோடியாக்க வேண்டும், இந்த பணத்தைக் கொண்டு ஆனந்தம் பல்கலைக்கழகம் ஆரம்பித்து உயர்கல்வி கற்க வசதியில்லாத அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.

தொழிலில் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்க்கும்போது, சூரிய ஒளி மின்சார (சோலார்) பிசினஸில் நன்கு வளர்ச்சி உள்ளது என்பதால் அதனை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறேன். இதன் மூலம் விவசாயிகள், தொழில் செய்வோர் மற்றும் அன்றாடம் மின்சாரத்தை பயன்படுத்தும் அனைவரும் பயனடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கிரைடு சொல்யூஷன் சிஸ்டம் மூலம், அதாவது சோலார் மூலம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டாம். எவ்வளவு மின்சாரம் கூடுதலாக செலவழிகிறதோ அதற்கு மட்டும் செலுத்தினால்போதும். இப்போது பிரின்டிங் தொழிலோடு சோலார் தொழிலும் நல்லமுறையில் போய்க்கொண்டிருக்கிறது.

சோலாரில் வீடு, நிறுவனம், விவசாயத்திற்கு தேவையானது என ஏராளமாக செய்துகொண்டிருக்கிறோம். இந்தத் தொழில்களை யாராவது ஆரம்பிக்க வேண்டும் என ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியுடன் வழிகாட்டுதல்களையும் செய்து வருகிறேன்’’ என தனக்குப் பிடித்த தொழிலில் முயற்சியால் வெற்றி கண்ட அனுபவத்தை நிறைவாக சொல்லி முடித்தார்.

- தோ.திருத்துவராஜ்