தமிழக அரசு இசைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!



தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி நடத்தப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு ஆகிய இடங்களில் இசைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கோவை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மற்றும் திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகின்றன.

கோவை மாவட்ட இசைக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் ஏ.வி.எஸ்.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை, மலுமிச்சம்பட்டியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு மூன்றாண்டுகள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள் உள்ளன.

வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவில் பட்டப்படிப்பு பயில பிளஸ் 2 தேர்ச்சியுடன், 17 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டயப்படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 16 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு பி.ஏ. இளங்கலை இசை அல்லது இசைக் கலைமணி பட்டயம் பெற்றிருப்பதுடன் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட இசைப்பிரிவில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாலைநேர வகுப்பில் குரலிசை, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெறுவதற்கு ரூ.31 அஞ்சல் ஆணை பெற்றுவர வேண்டும். பி.ஏ.இளங்கலை இசைக்கு ரூ.1,460, பட்டயப்படிப்புக்கு ரூ.750, இசை ஆசிரியர் பயிற்சிக்கு ரூ.750, மாலைநேர இசை வகுப்புக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0422-2611196 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஜூன் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திருவாரூர் மாவட்ட இசைப் பள்ளியானது, வாசன் நகரில் இயங்கிவருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகளில், மூன்றாண்டு முழுநேரப் பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழும் வழங்கப்பட்டுவருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை, இலவசப் பேருந்துக் கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேர, 12 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாகசுரம், தவில், தேவாரம், ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தால் போதுமானது. ஆண்டுக்கு கல்விக் கட்டணம் ரூ. 152 செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

- முத்து