மனதில் தோன்றும் எண்ணங்களை உடலசைவுகள் பிரதிபலிக்கும்!



*நடை உடை பாவனை
*உடல்மொழி 11


Your dresses should be tight enough to show you’re a woman and loose enough to show you’re a lady -Edith Head - நடைமொழி

உடல் மொழியானது மனிதர்களின் உடல் தோற்றம், உடலசைவு, சைகைகள் வெளிப்படுத்தும் சூழல் ஆகியவற்றின் தொகுப்பாகவே இருக்கிறது.அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அதுதான் முகத்தோற்றம். முகம் சார்ந்த பாவனைகள் அனைத்தின் பின்னணியிலும் உணர்ச்சிகளே பிரதானமாக இருக்கிறது. கோபம் வந்தால் முகம், காதோரங்கள் சூடாகிச் சிவப்பது, உதடுகள் துடிப்பது, கன்னங்கள் இறுகுவது எல்லாம் உலகம் முழுக்க ஒரே மாதிரி இருக்கிறது.

அதே போல் முக பாவனைகளான சிரிப்பு, கண் அசைவு, புருவச் சுழிப்பு உதட்டுச் சுழிப்பு போன்ற பாவனைகளும் உலகம் முழுக்க ஒரே மாதிரி இருக்கிறது.உடலசைவுகள் (gestures) எப்போதும் மனதில் தோன்றும் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கும். நீங்கள் ஒரு தீவிரமான யோசனையில் இருக்கும் போதும், ஏதேனும் ஆசையை மனதில் வைத்து எண்ணிக்கொண்டிருக்கும் போதும் உங்கள் கை விரல்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து, கோபுரம் போல் வைத்துக்கொள்வீர்கள்.

உடலசைவு என்பது உடல் முழுமையாக ஒரே தொகுப்பாக அசைவுகளை மேற்கொண்டிருப்பது. ஒருவரது பேச்சை ஆர்வமாக கேட்க விரும்பும் போது, சற்று முன் நகர்ந்து அமர்வதும், அதுவே ஆர்வமில்லாதபோது உடல் முழுமையுமாய் சரிந்த நிலையில் இருப்பதும் ஒட்டுமொத்த உடலசைவின் வெளிப்பாடுதான். சைகைகள் வெளிப்படும் சூழல் என்பது ஒரு சூழலில் நாம் நமது இடத்தை எப்படி ஆக்கிரமத்திருக்கிறோம், அந்தச் சூழல் நம் சைகைகளை எப்படி தீர்மானிக்கின்றன என்பதன் வெளிப்பாடுதான். இந்த வெளிப்பாடுகள் அனைத்தின் கூட்டுத் தொகுப்புதான் உடல் மொழியாக பார்வையாளர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தித் தருகிறது.பேச்சு மொழியின் வெளிப்பாடான வார்த்தைகளைவிட வார்த்தைகளற்ற சைகைகளே உடல்மொழிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் வார்த்தைகளுக்கும் வார்த்தைகளற்ற சைகைகளுக்குமான புரிதலை ஏற்படுத்திக்கொள்ளும் போது சூழலை கவனமுடன் பார்க்க வேண்டும்.சக மனிதனின் உடல்மொழியை அறியும் போது, அவனது சைகைகளின் வெளிப்பாட்டை மட்டும் வைத்து, ஒருபோதும் எடை போடக்கூடாது. சைகைகளின் வாயிலான உடல்மொழியை அதன் சூழலோடு கவனிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அர்த்தத்தை சரிவரப் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு மனிதன் தனது உடம்பை விறைப்பாகவும், கைகளை இறுக்கமாகவும், கால்களை நெருக்கமாகவும் வைத்துக்கொண்டு, உள்ளங்கைகளை முகத்தருகில் வைத்து, தீவிரமான யோசனையில் இருந்தால், அவன் தனது பாதுகாப்பிற்காக, ஒரு தற்காப்பான ஆயத்த நிலையில் இருப்பதாகவே எண்ண வைக்கும். அந்த மனிதனின் சைகை ஆள் அரவமற்ற நிலையில் பகல் பொழுதில் இருந்தால், அவன் தற்காப்பிற்கு தயாரான நிலையில் இருக்கிறான் என்று புரிந்துகொள்ளலாம். அதுவே இரவு பனி, மழை போன்ற குளிரான நேரங்களில் என்றால், அவன் தனது உடல் கதகதப்பிற்காக அவ்வாறான நிலையில் இருக்கிறான் என்றே பொருள்.

சைகை ஒன்றுதான், ஆனால் அது நிகழும் சூழலால் அதன் அர்த்தம் மாறிவிடுகிறது. அதனால்தான் எப்போதும் வார்த்தைகளற்ற சைகைகளை அதன் சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமானதாகிறது. இன்னும் குறிப்பாய் சொல்ல வேண்டுமானால் சைகைகளின் தொகுப்பான உடல்மொழியை சூழ்நிலைகள்தான் பெரும்பாலும் தீர்மானிக்கவே செய்கிறது. உடல் மொழியின் மிக முக்கிய வெளிப்பாடு கைகுலுக்குவது.

ஒரு கைகுலுக்கலை வைத்து அந்த மனிதரது குணாதிசயங்களை உடல் மொழி வல்லுநர்கள் மிகத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். கைகுலுக்கும் சைகையில் பல நுட்பான செய்திகள் இருந்தாலும், அதிலும் சூழ்நிலைகளின் பங்கு இருக்கவே செய்கிறது. ஒருவரிடம் கை குலுக்கும்போது, மனதிடம் இல்லாதவர்களும், பலவீனமானவர்களும், மிக மென்மையாக, இறுக்கமற்ற நிலையில், துவண்ட வகையிலேயே கைகுலுக்குவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் அப்படி கைகுலுக்குபவர்கள் அனைவரும் அப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

கைகளில் அடிபட்டவர்கள், உடல் பலவீனமானவர்கள், ஆஸ்பத்திரியில் படுத்திருப்பவர்கள் அனைவரும் அது மாதிரியான வகையில்தான் கைகுலுக்குவார்கள். ஆக கைகுலுக்கல் சைகையை கவனிக்கும் போது அது நிகழும் சூழலையும் சேர்த்து கவனிக்க வேண்டும்.கைகளால் வாத்தியக்கருவி இசைப்பவர்கள், நுட்பமான பணி செய்பவர்கள், அறுவை சிகிச்சை செய்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் கைகுலுக்குவதில்லை என்று ஒரு ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள் (நம்ம ஊரில் கை குலுக்க மாட்டார்கள், கரம் குவிப்பார்கள்) இது நபருக்கு நபர் மாறுபட்டாலும், பொதுவில் கைகளால் பணி செய்பவர்கள் கை குலுக்க விரும்புவதில்லை என்பதுதான் விசித்திரமான நிஜம்.

உடல்மொழியைப் போலவே உடை பற்றிய அக்கறையும் பலருக்கும் இருப்பதில்லை. பாந்தமாய் உடை உடுத்துவது என்பது ஒரு கலை. சிலர் தங்கள் நிறத்திற்கும், உடலளவுக்கும் பொருத்தமில்லாத (இறுக்கமான அல்லது லூசான) உடைகளை அணிவார்கள். இறுக்கமான உடைகளை அணியும் போது சில சைகைகளை இயல்பாக செய்ய இயலாமல் போகும். உதாரணமாக இறுக்கமான பேன்ட் அணிந்தவர்களால் கால் மேல் கால் போட்டுக்கொள்ள முடியாது. அதே போல் இறுக்கமான மேலாடை அணிந்தவர்களால் கைகளை இயல்பாக அசைத்துப் பேச முடியாது.உடை எப்போதும் உடலுக்கு பொருந்தக்கூடியதாக, சௌகர்யமானதாக, அணிந்தால் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாக, உடல் அசைவுகள் இயல்பாக வெளிப்பட எந்த வகையிலும் இடைஞ்சல் இல்லாததாக இருக்க வேண்டும்.

உணர்ச்சிகளின் இயல்பான வெளிப்பாட்டிற்கு உடையின் அந்த பங்களிப்புதான் முக்கியமானது. சைகைகளைக் கொண்டு உடல்மொழியை புரிந்துகொள்கையில் பெரியவர்களை விட சிறியவர்களை படிப்பது மிகவும் சுலபமானது. அது சுவாரஸ்யமானதும் கூட.

-
தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு


 உடை  வழி  -  ஸ்கார்ஃப் (SCARF)

ஸ்கார்ஃப் என்ற பெயரைக் கேட்டதும் அது பெண்கள் வகை ஆடை என்ற எண்ணம் அனைவருக்கும் எழத்துவங்குவது விசித்திரம் என்றால், ஸ்கார்ஃப்பை கண்டறிந்தது ஆண்கள் என்ற செய்தி கூடுதல் விசித்திரம்.ஸ்கார்ஃப் கழுத்தைச் சுற்றி கட்டிக்கொள்ளும் சிறிய துணி. அது குளிருக்காக,  உடல் சுத்தத்திற்காக, ஃபேஷனிற்காக, மதச் சடங்குகளுக்காக என்று உலகம் முழுக்க பல்வேறு காரணங்களுக்காக அணியப்பட்டுவருகிறது. மனிதர்கள் ஸ்கார்ஃப்பை கி.மு 9ம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தி வந்தார்கள் என்பது கழுத்தில் ஸ்கார்ஃப் கட்டியபடி உள்ள Ashurnasipral- II மன்னர் சிலையே ஆதாரமாக இருக்கிறது.பண்டைய ரோம் நகரில் மக்கள் உடலை வியர்வையிலிருந்து சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக, சுடேரியம் (Sudarium) என்ற பெயரில் ஸ்கார்ஃப்பை பயன்படுத்தினார்கள்.

சுடேரியம் லத்தீன் வார்த்தை. அதற்கு வியர்வையைத் துடைக்கும் துணி என்று அர்த்தம். அந்த வார்த்தையே காலப்போக்கில் தேய்ந்து திரிந்து SCARF என மாறியதாகச் சொல்கிறார்கள். ஆனால், உலகிலேயே முதன் முதலில் சீன பேரரசர் செங் தான், தனது ஆட்சியில் துணியால் நெய்யப்பட்ட ஸ்கார்ஃப் பயன்படுத்தினார் என்றும், அது அதிகாரிகளையும், சிப்பாய்களையும் வேறுபடுத்திக் காட்டவே பயன்படுத்தப்பட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

17ம் நூற்றாண்டில் ஸ்கார்ஃப் குரேசியாவில் நுழைந்தது. அதை பிரெஞ்ச் மொழியில்  Cravats  என்றழைத்தார்கள். (கழுத்துப்பட்டி என்று அர்த்தம்). அந்த வார்த்தையே சுருங்கி ஸ்கார்ஃப் என வந்ததாகவும் சொல்கிறார்கள். அதுவரை அரச உடையாக மட்டுமே இருந்த ஸ்கார்ஃப் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குள் வர, அதை ஃபேஷன் உலகம் வரவேற்று எடுத்துக்கொண்டது.

வெப்பம், வியர்வைகளிலிருந்து கழுத்துப்பகுதியை பாதுகாப்பதற்காக அணியப்பட்ட ஸ்கார்ஃப், மெல்ல காது, கன்னம், மூக்கு, தலைப் பகுதிகளை புழுதி, வெப்பத்திலிருந்து காக்கவும் பயன்படுத்தப்பட, அதுவே இப்போது ஃபேஷனாகிப்போனது. எத்தனை இருந்தாலும், உலகம் முழுக்க ஸ்கார்ஃப் என்றதும் நினைவுக்குவருவது உலக ஸ்கவுட் அமைப்புதான். ஸ்கவுட்டில் ஸ்கார்ஃபை Neckerchief என்று அழைக்கிறார்கள்.

ஆனாலும் உலகம் அதை ஸ்கார்ஃப்பாகவே குறிப்பிடுகிறது.ஆரம்பகாலத்தில் ஸ்கார்ஃப் கழுத்துப் பகுதி உடையாக கண்டுபிடிக்கப்பட்டதாலோ என்னவோ, இன்று வரை சிறு குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும்போது, அவர்கள் கழுத்தைச் சுற்றி ஒரு சிறு துணியை (ஸ்கார்ஃப்) கட்டிய பிறகே அம்மாக்கள் சாதம் ஊட்டுகிறார்கள்.ஒரு சிறு துணிதான். அதை மேல் சட்டைக்குள் நுழைத்து கழுத்துப் பகுதியை சுற்றிக்கொண்டு இருப்பது போல் கட்டிக்கொண்டு பாருங்கள், தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாவதை கண்கூடாக பார்க்கலாம்.