கிராபிக் டிசைன் படிப்பும் வேலைவாய்ப்புகளும்!




*வேலை வாய்ப்பு  பெற என்ன படிக்கலாம்


ஃபேஷன் டிசைன் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை கடந்த இதழில் விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் கிராபிக் டிசைன் என்னும் வரைகலை வடிவமைப்பு படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து டிசைன் & மீடியா கல்வித் துறையின் தொலைநோக்கு பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க.குமார் கொடுக்கும் தகவல்களை இனி பார்ப்போம்…

வரைகலை வடிவமைப்பாளர்கள் எனப்படும் கிராபிக் டிசைனர்கள் இல்லாத உலகத்தினை கற்பனை செய்து பார்த்தால், வண்ணங்களின்றி, குறைந்த விற்பனை மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சியோடுதான் இருந்திருக்கும். உங்களது அன்றாட வாழ்க்கையில் நீங்கள் காணும் ஒவ்வொரு வடிவமைப்பிற்கும் பின்னால், கிராபிக் டிசைனர்களின் கைவண்ணம் உள்ளது. நுகர்வோர்கள் மற்றும் டார்கெட் ஆடியன்ஸ் ஆகியோரிடம் துல்லியமாக தொடர்புகொள்வதின் மூலம் வியாபாரம், கல்வி மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் எழுச்சியை கொண்டுவருபவர்களும் இவர்களே!

சுருக்கமாகச் சொன்னால், உண்மை, யோசனை, கருத்து, தயாரிப்பு அல்லது சேவை போன்ற எந்தவொரு செய்தியையும், காட்சிப்படமாகவோ அல்லது எழுத்துகளாகவோ டிஜிட்டல் கருவிகளின் துணை கொண்டு கலை ரீதியாக இணைத்து உருவாக்கும் ஓர் அற்புதமான கலையே கிராபிக் டிசைன் என்பதாகும்.

கிராபிக் டிசைனின் அவசியம்


நிறைய சிறப்பம்சங்கள் கொண்ட வரைகலை வடிவமைப்பு பற்றிய படிப்புகள் இந்தியா முழுவதும் மத்திய/மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. B.Des in Graphic Design, B.Voc in Graphic Design, B.Sc. in Design, B.Sc. in UI and Graphics Design, Programme in Graphic Design and Animation, Diploma in Graphic Design & Animation, B.Sc. in Media Graphics and Animation போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டிசைனின் பயன்பாடு என்பது பல்வேறு துறைகளிலும் பரவிக்கிடக்கிறது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களுக்கான (FMCG) நிறுவனங்கள், வாகனங்கள் துறை, சில்லறை வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு மற்றும் ஆடையலங்கார வடிவமைப்பு தொழில்கள் ஆகியன இந்தியாவில் டிசைன்களுக்கான மிகப்பெரிய பயன்பாட்டாளர்களாக உள்ளன.

வடிவமைப்பு சேவைகளை வழக்கமாக பயன்படுத்துபவர்களில் உபகரணங்களின் உற்பத்தியாளர்கள், இயந்திர கருவி உற்பத்தியாளர்கள், தானியங்கி துறைகள், மரச்சாமான்கள் உற்பத்தியாளர்கள், விருந்தோம்பல் துறைகள், தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வெளியீட்டு நிறுவனங்கள், ஆடை மற்றும் காலணி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் ஆகியவை முன்னணி வகிக்கின்றன. மேலும் கல்வி நிறுவனங்கள், லாப நோக்கற்ற அமைப்புகள் (NGOs), ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட களங்களும் வடிவமைப்பு சேவைகளைப் பயன்படுத்துகின்றன.

ஒவ்வொரு பிராண்டு அல்லது வியாபாரத்திற்கும் அத்தியாவசியமானதாக இருப்பது கிராபிக் டிசைனர்களே. தபால் தலைகள் முதல் மோஷன் கிராபிக்ஸ்  வரையிலான பல்வேறு ஊடகங்களிலும் வெளியிடப்படும் டிசைன்களின் உருவாக்கத்தில் கிராபிக் டிசைனர்கள் ஈடுபடுகிறார்கள். கிராபிக் டிசைனர்களின் அவசியத்தை உணர்த்தும் சில தயாரிப்புத் துறைகளைப் பார்ப்போம்…

* சின்னங்கள்
* சுவரொட்டிகள்
* அச்சிட்ட விளம்பரங்கள்
* அட்டைப்பெட்டி வடிவமைப்பு
* விளக்கப்படம்
* இணைய வடிவமைப்பு
* விளம்பர பலகைகள்
* செய்தித்தாள் மற்றும் இதழ்களுக்கான வரைகலை சித்திரம்
* அட்டவணை மற்றும் சிற்றேடு
* துண்டுப்பிரசுரங்கள்
* அட்டைப்படம்
* மோஷன் கிராபிக்ஸ்
* திரைப்படத் தலைப்புகள்
* உணவுப்பட்டியல்
* போக்குவரத்து மற்றும் எச்சரிக்கை குறியீடு போன்ற குறியீடுகள் மற்றும் சின்னங்கள்
* எழுத்துருக்கள்
* மின்வழிக் கற்றல்
* சின்னங்கள் மற்றும் பட்டன்கள்
* பெருநிறுவன அறிக்கைகள்
* பெருநிறுவன பிரசன்டேஷன்
* மின்னஞ்சல் மற்றும் மின்செய்தி மடல்கள்

உதாரணத்திற்கு, பிரபலமான HAWLETT PACKARD (hp) நிறுவனத்தின் லோகோவை எடுத்துக் கொள்வோம். இதில் ‘h’ என்பதின் கொம்பும், ‘p’ என்பதின் வாலும் வட்டம் வரை நீட்டி விடப்பட்டுள்ளது, இதற்கு காரணம் விரிவாக்கம் மற்றும் புதுமை எனும் கருத்துகளை ஊக்குவிப்பதை எடுத்துக்காட்டுகிறது. பின்புறமுள்ள நீல வண்ணம் இந்த நிறுவனத்தின்  வலிமை, சிறப்பு மற்றும் தரத்தைக் காட்டுகிறது. மேலும் வெள்ளை வண்ணமானது கருணை, தூய்மை மற்றும் அழகினைக் குறிக்கிறது. எனவே கிராபிக் டிசைனிங் என்பது வெறும் வரைகலை மட்டுமல்ல, இது ஆராய்ச்சி, பகுப்பாய்வு, புரிதல் மற்றும் சித்தரிப்பு போன்றவற்றிலிருந்து கிடைக்கப்பட்ட தீர்வேயாகும்.

எதிர்காலம்

கிராபிக் டிசைனிங் வேலைவாய்ப்பு என்பது எப்போதும் வாய்ப்புகளை வாரிவழங்கும் துறையாகும். பிராண்டுகள், பொருட்கள் மற்றும் சேவைகள் இவ்வுலகில் இருக்கும் வரையிலும் மற்றும் மக்கள் டிஜிட்டல் பொருட்களின் மேல் மோகம்கொண்டு, தங்களின் தனியுடைமையாக எண்ணும்  வரையிலும் கிராபிக் டிசைனர்களின் தேவை தவிர்க்க முடியாதது.

  சந்தைப்படுத்துதல், விளம்பரம், டிஜிட்டல் கல்வி முறை மற்றும் பொழுதுபோக்கு பொருட்களின் வளர்ச்சி போன்றவற்றால் திறமையான கிராபிக் டிசைனர்களும் வளர்ச்சி பெறுகிறார்கள்.

* BSE-இன் 2014ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, அமெரிக்காவில், 1,97,540 கிராபிக் டிசைனர்கள் உள்ளனர், மேலும் அவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 50,670 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
* இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ள கிராபிக் டிசைனர்களின் ஆரம்ப ஆண்டு வருமானம் சராசரியாக 2.4 முதல் 3.6 லட்சங்களாகும். மேலும், 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ள தொழில்முறை நிபுணர்களுக்கு 6 முதல் 7.5 லட்சங்கள் வருமானமாக கிடைக்கிறது.
* தொழிலாளர் புள்ளியியல் அலுவலகக் குறிப்பின்படி திறமையான கிராபிக் டிசைனர்கள் தட்டுப்பாடு காரணமாக, கிராபிக் டிசைன் வேலையானது உலகளவில் அதிக சம்பளம் வழங்கப்படும் வேலையாக உள்ளது.

* மேலும் வரும் 2020 ஆம் ஆண்டில் உலக அளவில் கிராபிக் டிசைனர்களுக்கான தேவை 13% அதிகரிக்கும் என இவ்வலுவலகக் குறிப்பு தெரிவிக்கிறது.
* இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 10,000 புது கிராபிக் டிசைனர்களுக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
* ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு தங்களின் வேலைகளை அவுட்-சோர்சிங் செய்வதற்கான முக்கிய நாடாக இந்தியா அமைந்துள்ளது.
* இந்தியாவின் கிராபிக் டிசைனர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளது.

இந்தத் துறையில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் தவிர, ஒருவரது படைப்புத்திறன்கள், தனித்திறமை மற்றும் ஆற்றல் போன்றவற்றின் அடிப்படையில் கிரியேட்டிவ் டைரக்டர், பிரின்சிபல் டிசைனர், டிசைன் ஸ்டூடியோவின் வெற்றிகரமான ஸ்தாபகர், ஆர்ட் டைரக்டர் அல்லது தலைமை டிசைனர் போன்ற உயர் பதவிகளை, வேலைக்குச் சேர்ந்த 10 அல்லது 15 வருடங்களில் அடைந்திடமுடியும்.

வேலைவாய்ப்புகள்

இத்துறை படிப்புகளை முடித்து பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், கிரியேட்டிவ் டைரக்டர், பேக்கேஜ் டிசைனர், வெப் டிசைனர், டெஸ்க்டாப் பப்ளிஷர், மல்டிமீடியா டெவலப்பர், விசுவல் இமேஜ் டெவலப்பர், விசுவல் ஜர்னலிஸ்ட், ப்ராட்காஸ்ட் டிசைனர், லோகோ டிசைனர், இல்லஸ்ட்ரேட்டர், ஆர்ட் டைரக்டர், ஆர்ட் ப்ரொடக்ஷன் மேனேஜர் போன்ற மதிப்புமிக்க வேறு பல வேலைவாய்ப்புகள் எண்ணற்ற அளவில் உள்ளன.

நாம் ஏன் இத்துறைப் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்?


 பின்வரும் காரணங்களால் இத்தொழில் மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றம் பெறுகிறது.
* எந்தவொரு வியாபார முன்னேற்றத்திற்கும் முக்கிய கருவியாக அமைவது
* எங்கிருந்தும் டிசைன் செய்யலாம்
* பிரபலமாவதற்கு நல்ல வாய்ப்பு
* எப்போதும் அதிக தேவையுள்ள ஒரு வேலைவாய்ப்பு
* படைப்புத்திறன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தினில் மாற்றத்தினை உருவாக்கும் வாய்ப்பு

உலகத்திற்கே மாற்றத்தினை உருவாக்கும் வாய்ப்புடன், கட்டுப்பாடற்ற வகையிலான தனித்தன்மை வாய்ந்த ஒரு சிறந்த தொழில்துறையைத் தேடும் ஆர்வலர்களுக்கு இத்துறைப் படிப்பு ஒரு வரப்பிரசாதமே! அடுத்த அத்தியாயத்தில் Visual Media படிப்பு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

- தோ.திருத்துவராஜ்