முன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்
*சேவை


பேராசிரியர்களும், அறிஞர்களும் நியமிக்கப்படும் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்.

ஒரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இவற்றின் நிர்வாகச் செயல்பாடுகளை அங்கீகரிப்பவை இரண்டு குழுக்கள்தான். ஒன்று ஆட்சிமன்றக்குழு (செனட்) இன்னொன்று ஆட்சிப்பேரவை குழு (சிண்டிகேட்). பாராளுமன்றத்தில் லோக்சபா ராஜ்யசபா மாதிரிதான் இந்த இரண்டு குழுக்களும். நிர்வாகச் செயல்பாடுகள் உள்ளிட்ட மிக முக்கியமான முடிவுகளை சிண்டிகேட் செயல்படுத்துகிறது. பல்கலைக்கழக பாடத்திட்டங்கள், பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழக மேம்பாட்டு பணிகள் போன்றவற்றில் துணைவேந்தருக்கு ஆலோசனை கூறும் வேலையை செனட் செய்கிறது.

செனட் குழுவில் மூன்று விதமான உறுப்பினர்கள் இருப்பார்கள். முதல் வகை பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் பதவி வழி உறுப்பினராக செனட் உறுப்பினராக பதவி வகிப்பார்கள்.இரண்டாவது வகை உறுப்பினர்கள் எலக்டட் மெம்பர்ஸ். இவ்வகை உறுப்பினர்கள் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒரு பேராசிரியர் மற்ற பேராசிரியர்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்.

மூன்றாவது வகை உறுப்பினர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் நாமினேட்டட் மெம்பர்ஸ். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பு வகிக்கும் மேதகு ஆளுநர் தன்னுடைய பிரதிநிதியாக சில உறுப்பினர்களை நியமிப்பார். கல்வி, கலை, இலக்கியம், எழுத்து, மாணவர் மேம்பாடு போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தன்னுடைய பிரதிநிதியாக ஆளுநர் நியமிக்கிறார். இவர்கள் நாமினேட்டட் மெம்மபர்ஸ். ஆளுநரின் நேரடி நியமனம் என்பதால் இந்த உறுப்பினர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

இப்பொறுப்புக்குதான் அரசுப் பள்ளியில் பணிபுரியும் இளம் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆம், திருவாரூர் மாவட்டம், தென்குவளை வேலி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் ஆதலையூர் சூரியகுமார்தான் அந்த ஆசிரியர். பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்புக்கு ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் அதிலும் இளைஞர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியேற்றார். கல்வி சார்ந்த பலதரப்பட்ட தன்னார்வப் பணிகளால் மாவட்ட ஆட்சியர் விருது, கனவு ஆசிரியர் விருது, லட்சிய ஆசிரியர் விருது என 10-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்திருக்கிறார். கனவு ஆசிரியர் விருதில் கிடைத்த தொகையில் மாணவர்களுக்கு பயனுள்ள நூல்களை வாங்கி கொடுத்திருக்கிறார் இவர்.

‘‘மாணவர்களை வங்கிகளுக்கு அழைத்துச் சென்று வங்கி நடைமுறைப் பயிற்சிகள் அளிப்பது, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று மாணவர்களுக்குப் பள்ளிக்கூட எல்லைகளைத் தாண்டி வெளியுலகத்தின் சாளரங்களைத் திறந்துவிட்டு வகுப்பறையை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும்’’ என்று சொல்லும் இவர், களப்பயிற்சிகள் அளிப்பதில் வல்லவர்.  டெங்கு காய்ச்சல் அதிகம் பேரை பலி வாங்கியபோது மேலூரில் மட்டும் டெங்கு பரவ காரணம் என்ன? என்று மாணவர்களோடு களத்தில் இறங்கி காரணங்களைக் கண்டுபிடித்து ஆட்சியருக்கு அறிக்கை அளித்து பாராட்டு பெற்றிருக்கிறார்.

எட்டாம் வகுப்பு மாணவர்களை வைத்துக்கொண்டு வெறும் சிட்ரிக் அமிலத்தையும் சமையல் சோடாவையும் கலந்து எரிபொருளாக்கி 12 அடி உயரத்திற்கு ராக்கெட் பறக்கவிட்டிருக்கிறார். இவர் மதுரை மாவட்டம், மேலூர் அரசுப் பள்ளியில் பணியாற்றியபோது பள்ளி மாணவிகளுக்கு பகுதிநேரமாக தொழிற்பயிற்சி அளித்து பொருளாதார சுயசார்பு அளித்திருக்கிறார்.

பள்ளிக்கூடம் என்ற சிறிய வட்டத்தில் சுற்றி வந்த நீங்கள் பெரும் கடலான பல்கலைக்கழக மாணவர்களுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, “தொலைநோக்குப் பார்வையோடு சில திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறேன். மாணவர்களின் சமூகப் பின்னணியிலிருந்து இந்த மாணவர்களுக்கான செயல்திட்டத்தை அணுக வேண்டும். நம் சமூகத்தில் மாணவிகள் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள அதிகபட்ச வயது இருபத்தியொன்றுதான். அதற்குப் பிறகு பெரும்பாலும் திருமணம் ஆகிவிடுகிறது. அதற்குள் சுயதொழில் அல்லது அரசு வேலை வாய்ப்புக்கு அவர்களை தயார் செய்துவிட வேண்டும். மாணவிகளோடு சேர்ந்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு கல்லூரியிலும் வேலைவாய்ப்பு பயிற்சிக் குழு தொடங்க முயற்சிகள் மேற்கொள்வேன்.

அடுத்து மாணவர்களின் கலை, இலக்கியம், எழுத்தாற்றலை மேம்படுத்த தமிழ்ப் பத்திரிக்கையோடு இணைந்து ஆளுகைக்கு உட்பட்ட 130 கல்லூரிகளிலும் கலை, இலக்கியக் குழு ஒன்றினை ஏற்படுத்தி கதை, கவிதை பட்டறைகளை தொடர்ந்து நடத்த முயற்சிகள் மேற்கொள்வேன். இந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்திய பிறகே மற்ற திட்டங்கள்’’ என்கிறார் ஆதலையூர் சூரியகுமார்.

மாணவர்களின் திறன் மேம்பாடு, கல்வியறிவில் மேம்பாடு, மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பள்ளிக்கல்வி அளவில் பல்வேறு நலப்பணிகளில் தன்னார்வத்தோடு ஈடுபட்டு முன்மாதிரி ஆசிரியராக திகழ்கிறார் ஆதலையூர் சூரியகுமார். இவரின் மாணவர் நலன் சார்ந்த பணிகள் மேலும் சிறப்படைய நாமும் வாழ்த்துவோம்!

-முத்து