அறிவியல் உலகம்!பொது அறிவு

எறும்புக்கு இரண்டு வயிறு!


சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் உதாரணமாக சொல்வதென்றால் எறும்புகளை சொல்வார்கள். எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளிலேயே கூட்டம் கூட்டமாக வாழும். உலகில் சுமார் 10,000 வகையான எறும்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இவை பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும். எறும்பின் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். மிக வேகமாக ஓடும் திறனுடையது.

அதாவது, உருவத்துடன் ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இணையாக ஓடும் ஆற்றலுடையது. இவை பொதுவாக ஆறு நிறங்களில் (Green, Red, Brown, Yellow, Blue or Purple) காணப்படும். தனது எடையை போன்று 20 மடங்கு அதிகமான சுமையை தூக்கிச் செல்லும் திறனுடையது. எறும்புகளால் திட உணவுகளை உண்ண இயலாது. அதில் இருந்து
juice -ஆக பிரித்து எடுத்துதான் உண்ணும்.

எறும்புகளின் தலையில் காணப்படும் நீட்சிகளின் மூலமாகத்தான் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும். எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 mm வரை வளரும். ஆனால், carpenter எறும்புகள் சுமார் 1 inch வரை வளரும். எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளுக்காகவும் உணவை எடுத்துச் செல்லும்.

வேகமாக பறக்கும் தேன்சிட்டு!


  தேன்சிட்டுகள் அமெரிக்காவில் உள்ள ஹம்மிங் பேர்ட் ரகத்தைச் சேர்ந்தவை. இப்பறவைகள், உருவத்தில் சிட்டுக்குருவியைவிடச் சிறியவை. ஹம்மிங் பேர்டை விடப் பெரியவை. பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர்நிற அடிப்பாகத்தையும் கொண்டது. ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கருநீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகு கருநீலத்திலுமாகவும் அடிப்பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இதன் பெயர் ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் (Purple-rumped Sunbird)’ என்பதாகும்.

தமிழ்நாட்டில் காணப்படும் தேன்சிட்டுகள் இருவகைப்படும். ஒன்று ஊதாத் தேன்சிட்டு. மற்றொன்று ஊதாப்பிட்டு தேன்சிட்டு என்பதாகும். இரண்டாவது வகையே நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும். முதல் வகையை ஸ்க்ரப் ஜங்கிள் என்று அழைக்கப்படும் சிறு காடுகளில்தான் அதிகம் பார்க்கமுடியும். ஊதாப்பிட்டு தேன்சிட்டு வகையின் ஆண் குருவி கருநீல நிறத்தில் இருக்கும். அதன் கழுத்தும் தலையும் மயில் கழுத்துப்போல மின்னும். ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு.

மற்றைய தேன்சிட்டுகளைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டவை மட்டுமல்ல ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். முன் பக்கமாகவும், பின்பக்கமாகவும், பக்கவாட்டிலும், தலைகீழாகவும்கூட அந்தரத்தில் சாகசம் புரியும். இது மணிக்கு 50 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்து, டக்கென்று பிரேக் போடுமாம். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும்.

தேன்சிட்டின் கூடு செடிகளின் கிளைகளிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும். காய்ந்த சருகு, வேர்கள் இவற்றால் சிலந்தியின் வலைத்துண்டுகள் கொண்டு ஒட்டப்பட்டிருக்கும். வெளியே ஆங்காங்கே சிறிய வெள்ளைக் காகிதத் துண்டுகளோ அல்லது எட்டுக்கால் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாக்கும் உறையோ (வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு சென்டிமீட்டர் விட்டத்தில் வட்டமாக இருக்கும்) ஒட்டப்பட்டிருக்கும். இவ்வாறு செய்வது அழகுக்காகவா அல்லது கூட்டினை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவா என்பது இப்பறவைகளைப் படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கூட்டுக்குள்ளே செல்ல பக்கவாட்டில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீட்டர் அளவிலான துவாரம் இருக்கும். அந்த துவாரத்திற்கு ஒரு ‘சன் ஷேடும்’ அமைக்கப்பட்டிருக்கும். கூட்டின் கீழ்ப் பாகத்திலிருந்து சிறிய காய்ந்த இலைச் சருகுத் துண்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும். கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த்துண்டுகள் இவற்றால் மெத்தை அமைக்கப்பட்டிருக்கும். கூட்டினை முழுமையாக கட்டுவது பெண் குருவியே. ஆண் குருவியோ தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில் கூட கூட பறந்துகொண்டிருக்கும்.

ஈர்ப்புவிசை இல்லாமல்போனால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!


ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளி என்பது அதிசயங்களைப் போலவே ஆச்சரியங்களும் நிறைந்தது. ஆகையால்தான் விண்வெளிக்குச் சென்று திரும்புபவர்களை நாசா முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் இருக்கும்போது உடல் ரீதியாக ஏற்படும் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக உடல் எடை இல்லாதது போன்று தோன்றுவதால் அவர்களின் தசை மண்டலம் வலுவிழக்கும். மேலும் ஒரே அறையில் ஒரே நபருடன் பல நாட்கள் வேலை செய்வதால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் மன அழுத்தம், தனிமையுணர்வு இது எல்லாவற்றையும் விட காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சாலும் பெரும் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

இச்சூழலில், விண்வெளிக்கு சென்று பூமிக்குத் திரும்பிய 11 ரஷ்ய வானியலாளர்களை ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவந்தனர். சில மாதங்கள் விண்வெளியில் தங்கி வந்தவர்களுக்கு ஆறு சதவீதம் மூளையின் பகுதிகள் மாற்றம் கண்டுள்ள உண்மை இவ்வாய்வில் தெரியவந்துள்ளது. இத்தன்மையால் பார்வைத்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளையும் அவர்கள் சந்தித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பி.என்.ஏ.எஸ். என்ற இதழில் வெளியான அறிக்கையில், மண்டையோட்டில் மூளை மிதக்கும் திரவத்தின் அளவு அதிகரித்துள்ளதாக உறுதி  செய்யப்பட்டுள்ளது. மூளையின் வென்ட்ரிகல் பகுதி அதிகரித்துள்ளதால், திரவத்தின் அளவும் அதிகரித்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.