B.E/B.Tech நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை!



தமிழ்நாட்டிலிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் (Departments), பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges), அரசு மற்றும் அரசு உதவி பெறும் (Govt, and Govt. Aided Engineering Colleges) பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் (Self Financing Engineering Colleges) இருக்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இளநிலைப் பட்டப்படிப்புகளில் (B.E/B.Tech) நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், முதலாம் ஆண்டு சேர்க்கைக்குப் பின்பு நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் இடங்கள் போன்றவற்றில் நேரடியாக இரண்டாமாண்டு சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வித் தகுதி

தமிழ்நாட்டிலிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ/பி.டெக் பட்டப்படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் பட்டயப்படிப்பு (Diploma Engineering Course) அல்லது கல்லூரிகளில் இளநிலை அறிவியல் (B.Sc) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.accet.co.in அல்லது http://www.accetlea.com எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையவழியில் விண்ணப்பித்த பின்பு அதைப் பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கான பதிவுக் கட்டணமாக ரூ.300 (Demand Draft) “The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions 2019, ACGCET, Karaikudi” எனும் பெயரில் காரைக்குடியில் மாற்றிக்கொள்ளும் வசதியுடன் எடுக்கப்பட்ட வரைவோலையினை இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பதிவுக் கட்டணமின்றி சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழ் நகலினை இணைத்து அனுப்பினால் போதுமானது. நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்துடன் ‘The Secretary, Second Year B.E/B.Tech. Admissions 2019, Alagappa Chettiar Government College of Engineering and Technology, Karaikudi - 630004’ எனும் முகவரிக்கு 16.6.2019 மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை

பொறியியல் படிப்பில் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கலந்தாய்வுக்கான தகுதிப் பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டு, மதிப்பெண்கள் வாரியாகக் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் போன்றவை குறித்த தகவல் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.

இது தவிர, விண்ணப்பதாரர்களின் செல்லிடப்பேசிக்குக் குறுந்தகவல் மூலமும் கலந்தாய்வு குறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.

கூடுதல் தகவல்கள் இப்படிப்புக்கான சேர்க்கை குறித்து கூடுதல் தகவல்களை அறிய, மேற்காணும் இணையதளங்களில் இடம்பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான தகவல் மற்றும் அறிவுரைகள் (Information and Instructions to Candidates) எனும் பக்கத்தைப் பார்க்கலாம் அல்லது ‘செயலர், நேரடி இரண்டாமாண்டு பி.இ./பி.டெக் சேர்க்கை 2019’, அழகப்ப செட்டியார் கவர்ன்மென்ட் காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி, காரைக்குடி - 630 004’ எனும் அஞ்சல் முகவரியில் அல்லது 04565-230801 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

-T.S. சுப்பிரமணி         
   
 அரசுப் பள்ளிகளில் ப்ரீ  கே.ஜி. வகுப்புகள்!


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் இந்த வகுப்புகள் இல்லாததால், பெற்றோர், தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் செலுத்தி, குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது.   

  இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு, அரசுப் பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகளை தொடங்க பள்ளி கல்வித்துறை சார்பில் 2018, டிசம்பரில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும், கே.ஜி. வகுப்புகள் தொடங்கவும் குறிப்பாக, அங்கன்வாடிகளையொட்டியுள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி. வகுப்புகள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக, 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டன.

அவற்றில், 2018ல் புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை. இந்த ஆண்டு முதல், மாணவர்களை சேர்த்து, எல்.கே.ஜி., வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி. சேர்க்கையை தீவிரப்படுத்த, தொடக்க கல்வி இயக்குநரகம், மாவட்டக் கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், மாவட்ட வாரியாக தொடங்கப்பட்ட, 32 மாதிரி மேல்நிலைப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.