எதிர்மறை எண்ணங்களைத் தூக்கியெறியுங்கள்!இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்-3

புதிதாய்ப் பிறப்போம் சரித்திரம் படைப்போம்!


கழுகு ஒன்று மலை அடிவாரத்தில் கோழிக்குஞ்சுகள் மேய்வதைப் பார்த்து மேலிருந்து தரையிறங்கியது. கழுகைக் கண்ட கோழிக்குஞ்சுகள் இறகுகளால் வயிற்றில் அடித்தபடி கூண்டைநோக்கி ஓடத் தொடங்கின. அதில் ஓர் ஆச்சரியம்..! அந்த கோழிக்குஞ்சுகள் கூட்டத்தில் ஒரு கழுகுக்குஞ்சும் அலறியடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.

காரணம் என்னவென்றால், கோழிமுட்டையிட்டு அடைகாத்த இடத்திலிருந்த மரத்தின் மேல் ஒரு கழுகு முட்டையிட்டிருந்தது. அதில் ஒன்று தவறி கீழே விழுந்து கோழி முட்டைகளுடன் கலந்துவிட்டது. தாய்க்கோழி அடைகாத்து குஞ்சு பொரித்தபோது கழுகுக்குஞ்சும் பொரிந்து இதர குஞ்சுகளுடன் வளர்ந்தது.

அந்த கழுகுக்குஞ்சை வானத்திலிருந்து பார்த்த பெரிய கழுகு, “அட அசட்டுக் கழுகுக்குஞ்சே, கோழிக்குஞ்சுகள் என்னைப் பார்த்து ஓடுவதற்குக் காரணம் இருக்கு. நீயும் ஏன் என்னைப் பார்த்து ஓடுகிறாய்? கொஞ்சம் நில்!’’ என்றது. கோழிக்குஞ்சுகளோடு சேர்ந்து ஓடிக்கொண்டே அந்த கழுகுக்குஞ்சு சொன்னது, “என்னை என்ன முட்டாள் என்று நினைத்துக்கொண்டாயா? ஒரு கழுகைப் பார்த்த பிறகும் ஓடாமல் நிற்பதற்கு. கோழியாய்ப் பிறந்தது என் தலையெழுத்து, நான் மட்டும் ஒரு கழுகுக்குஞ்சாக பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..! உன்னை பார்த்துப் பயப்பட வேண்டியிருக்காது’’ என்றபடி வேகமாக ஓடியது.

இது ஓர் உதாரணக் கதைதான் என்றாலும், இன்றைய சமூகத்தில் பலர் கழுகுக் குஞ்சுகளாக இருந்தாலும் தங்களைக் கோழிக்குஞ்சுகளாக நினைத்து பயந்துவிடுகின்றனர். தாங்கள் கழுகுக்குஞ்சுகளாகப் பிறக்கவில்லையே என்று கண்ணீர் வேறு வடிக்கின்றன. ஒரு கணம் தாங்கள் கழுகுதான் என்பதை உணர்ந்துவிட்டால், தங்கள் பலம் என்ன என்று புரிந்துவிட்டால்  கதையே மாறிவிடாதா? இந்த கழுகைப் போன்றுதான் நம்மில் பல இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களின் திறமை அவர்களுக்கே தெரியாமல் பயம், பதற்றம் மற்றும் தயக்கம் போன்றவை அவர்களின் மனதில் ஒரு சுமையாக மாறி தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி வெற்றிக்குத் தடையாக அமைந்துவிடுகிறது.

விண்ணை நோக்கிப் பாயும் ராக்கெட்டை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று புலப்படும். தரையிலிருந்து மிகப்பெரிய சுமையுடன் விண்ணை நோக்கிச் செல்லும் ராக்கெட் தன்னுடைய ஒவ்வொரு சுமையாக மேலிருந்து கீழே விட்டுவிட்டு முடிவில் சுமை இல்லாமல் முன்பை விட வேகமாக விண்ணை கிழித்துக்கொண்டு செல்லும். அதுபோலதான் வாழ்வில் வெற்றிபெற்று எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்றால், உங்களிடம் உள்ள சுமையான தயக்கம், பயம் மற்றும் பதற்றம் போன்ற மிகப்பெரிய சுமைகளை கீழே இறக்கிவைத்தால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற்று உயர்ந்த இடத்தை அடையமுடியும்.

ராக்கெட் என்றவுடன் எனக்கு உடனே நினைவிற்கு வருவது நமது மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள்தான். அவர் ஒருமுறை மகளிர் கல்லூரிக்குச் சென்றார். அங்குள்ள மாணவிகளிடம் கேள்வி ஒன்றைக் கேட்கிறார், அது மாணவிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘‘உலக அழகி பட்டத்தை ஐஸ்வர்யாராய் என்ற இந்தியர் பெற்றார், அவர் எவ்வாறு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்?’’ என்பதுதான் அந்த கேள்வி. ஒரு மாணவி எழுந்து சொன்னார் ‘‘அவர் அழகாக உள்ளதால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்’’ என்றார்.

அதற்கு கலாம், ‘‘இது தவறான பதில்’’ என்றார். மற்றொரு மாணவி சொன்னார், ‘‘அவர் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதிலை அளித்தார்; ஆதலால் தேர்ந்தெடுக்கப்பட்டார்’’ என்றார். அதற்கும் கலாம், ‘‘அதுவும் இல்லை. நான் உங்களிடம் வேறு ஒரு பதிலை எதிர்ப்பார்க்கிறேன்’’ என்றார்.

இன்னொரு மாணவி எழுந்து நின்று, “ஐயா அந்த உலக அழகிப் போட்டியில் நான் கலந்துகொள்ளவில்லை. நான் கலந்து கொள்ளாததால் ஐஸ்வர்யாராய் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் கலந்துகொண்டிருந்தால் நான்தான் வெற்றி பெற்றிருப்பேன், ஐஸ்வர்யாராய்தோற்றுப்போயிருப்பார்’’ என்று பதற்றமில்லாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சொன்னார். கலாம் அந்த மாணவியைப் பார்த்து, ‘‘இந்த பதிலைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்’’ என்றார்.

என்னால் முடியும், என்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தாழ்வு மனப்பான்மையைப் புறம்தள்ளி வைத்துவிட்டு சாதித்த ஒருவரை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.1809ஆம் ஆண்டு அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த அவரை “தோல்விகளின் செல்லக் குழந்தை”என்றே எல்லோரும் சொல்வார்கள்.

அந்த அளவுக்குத் தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக்கொண்டேயிருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி பக்கத்து நகரத்துக்கு சென்றபோது அங்கே அடிமைகளை வைத்து வியாபாரம் செய்யும் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் அவர் மனதில் ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை மாற்றமுடியும் என்று தெரிந்ததும், அவசரமாகத் தனது 22வது வயதில் ஒரு நகராட்சித் தேர்தலில் வேட்பாளராகக் களம் இறங்கி படுதோல்வி அடைந்தார்.

இந்த நேரத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதிலும் பெரும் நஷ்டமடைந்தார். இல்வாழ்விலும் அவருக்கு தோல்விகள்தான். அவரின் காதலி ஆனி விஷக்காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து குழந்தை பிறந்தது. குழந்தையும் சிறு வயதிலேயே நோயால் மரணமடைந்து மனைவிக்கு மனநோய் ஏற்பட்டது. இத்தனை துயரங்களால் மனம் சோர்ந்துபோயிருந்த அவரை ஒரு போராளியாக மாற்றியது அவருடைய வளர்ப்புத்தாய் சாராபுஷ்தான்.

‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால் ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’ என்றார். அப்போதுதான் அவருக்குச் சரியான இலக்கு புரிந்தது. மனதில் ஒளி பிறந்தது. முழு மூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார். சட்டப்படிப்புடன் பேச்சுத்திறமையும் வளர்த்துக்கொண்டார். அடிமை ஒழிப்பைப்பற்றி ஊர்ஊராகக் கூட்டம்போட்டு பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு 1834-ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதன் பிறகு நகராட்சித் தலைவர், செனட் உறுப்பினர், துணை ஜனாதிபதி என பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1980ஆம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ அதுவாகவே ஆனார். அவர்தான் தோல்வியை துரத்திய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.

லிங்கனின் வாழ்வில் நடந்த துயரங்கள் வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் மூலையில் முடங்கிப் போயிருப்பார்கள். லிங்கன் வாழ்க்கை உணர்த்தும் பாடம் என்னவென்றால் உண்மையான நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால் மலையைக்கூட அசைத்து விடமுடியும். இந்த நம்பிக்கைதான் லிங்கனை வீழ்ந்துவிடாமல் வெற்றியடைய வைத்தது.

வாழ்க்கையில் சிக்கல் உருவாகின்றபோது அச்சிக்கலைத் தீர்த்து வெல்லக்கூடிய துணிவு வேண்டும். சிக்கல்களின் மேலேதான் சிலந்தி வாழ்கிறது. சிக்கல்கள் ஒன்றும் தன்னைச் சிதைத்துவிடாது என்பது அதற்குத் தெரியும். என்ன, இளைஞர்களே! இனியும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு உட்காராமல் செயலில் இறங்குங்கள். இந்த வாழ்க்கை வெல்வதற்கு மட்டுமே; தாழ்வுமனப்பான்மையால் தொலைந்து போவதற்கல்ல. தூக்கியெறியுங்கள் எதிர்மறை எண்ணங்களை. இரவுக்குப் பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வாருங்கள்... வெற்றியின் சிகரத்தைத் தொட!

(புதுவாழ்வு மலரும்)