தைக்காமலே தயாரிக்கலாம் துணிப்பை… மாதம் ரூ.25,000 சம்பாதிக்கலாம்!



சுயதொழில்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புத்துறை, உயர்கல்வித்துறை, தொழிற்சாலைகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

பாலிதீனுக்கு மாற்று வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும் உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் மணலில் மக்கிப்போகும் பொருட்களான சணல் மற்றும் துணிகளிலிருந்து நமது பயன்பாட்டிற்கான பொருட்களை உற்பத்தி செய்யலாம். இதனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற பொருட்கள் தயாரித்து வருவாய் ஈட்டலாம்.
சுயதொழில் செய்ய விரும்பும்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இத்தொழில் அமையும். இதனால் தினசரி அதிகமான பைகள் பயன்படுத்தக்கூடிய கடைகளான துணிக்கடை, உணவகம் உள்ளிட்ட வணிகர்கள் பிளாஸ்டிக் அல்லாத பைகளை வாங்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். துணிப்பை தயாரிப்பு பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தற்போது தையல் கலை தெரிந்தவர்கள் பைகள், விரிப்புகள் உள்ளிட்ட பொருட்களை சணல் மற்றும் துணிகளில் தயாரித்து வருகின்றனர். இப்பொருட்
களுக்கு தற்போது நல்ல வரவேற்பும் உள்ளது. இந்த நிலையில், தையல் தெரியாதவர்களும் துணிப்பை தயாரிக்கலாம், விற்பனை செய்யலாம் என்ற புதிய முறை தொழில் வந்துள்ளது. அதாவது, துணிகளைத் தைக்காமல் பசைகொண்டு ஒட்டியும் இதுபோன்ற பைகள், தாம்பூலப்பை, பர்ஸ், லேடீஸ் பேக் தயாரித்து விற்பனை செய்யலாம்.

அதிக முதலீடு இல்லாமல் குறைந்த முதலீட்டில் தொடங்கி நல்ல லாபம் தரக்கூடிய தொழில், வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய தொழில், இந்தத் துணிப்பை தயாரிப்புத் தொழிலில் நிரந்தர வருமானம்  ஈட்டலாம் என்கிறார் கல்லூரி விரிவுரையாளரும்் சுயதொழில் பயிற்சி அளித்து வருபவருமான ஷியாமளா தேவி.

‘‘இன்றையச் சூழலில் வேலைவாய்ப்புக்காக யாரும் படிப்பை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. வருமானம் ஈட்டுவதற்கு ஏதாவது ஒரு கைத்தொழில் கற்றுக்கொண்டால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படாது. சுயமாக சம்பாதிக்கலாம். வெளியில் சென்று சிரமப்பட்டு சம்பாதிப்பதை விட வீட்டிலிருந்து சுயதொழில் செய்து வருவாய் ஈட்டுவது வாழ்க்கைக்கு உதவியாகவும், நிம்மதியாகவும் இருக்கும்’’ என்று கூறும் ஷியாமளா மூலதனம் முதல் லாபம் வரை ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்தார்.  

‘‘தற்போதைய தேவையாக துணிப்பை இருக்கிறது. அதனால், இத்தொழிலை சுமார் ரூ.10,000 முதலீட்டில் ஆரம்பிக்கலாம். வெளியில் இதற்கென இடம் தேடவேண்டிய அவசியமில்லை. வீட்டின் ஒரு அறையை எடுத்துக்கொண்டால் போதும். துணி, கத்திரிக்கோல், அளவிடுவதற்கு டேப், ஒட்டுவதற்கு ஃபேப்ரிக் குளூ என்ற பசை உள்ளிட்டவை போதுமானது.

தற்போது சந்தைகளில் ஒரு மீட்டர் காடா துணி (பருத்தித் துணி) ரூ.25க்கு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 20 மீட்டர் துணி தேவைப்படும். ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக்கொண்டால் 500 மீட்டர் துணியின் விலை ரூ.12,500. ஃபேப்ரிக் குளூ பசை, கத்திரிக்கோல், டேப் உள்ளிட்டவை வாங்க ரூ.500 என வைத்துகொண்டால் ரூ.13,000 போதுமானது. இதர செலவுகள் உள்பட இத்தொழிலை எளிமையாகத் தொடங்க ரூ.15,000 முதலீடு தேவைப்படும்.

ஒரு பை, அதாவது நீளம் 36 இன்ச், அகலம் 18 இன்ச் என்ற அளவில் தைக்கப்படும் துணிப்பை தயாரிப்பது குறித்து பார்ப்போம். மேற்சொன்ன அளவுகளில் துணியை மடித்து வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 2 இன்ச் அளவில் கைப்பிடிக்காக தனியாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். நீளமாக வெட்டப்பட்ட 36 இன்ச் துணியை இரண்டாக மடிக்கவும், மேல் பக்கம் மடித்து ஃபேப்ரிக் குளூ வைத்து ஒட்டவும், அதேபோல் வலது, இடது என இரண்டு பக்கம் ஒட்டி பையைத் திருப்பிக்கொள்ளவும்.

பின்னர் கைப்பிடிக்காக வைத்துள்ள துணியை குழல்போல் மடித்து ஒட்டி திருப்பிக்கொள்ளவும். இந்த இரண்டு கைப்பிடியையும் பையின் மேல் பகுதியில் ஒட்டவும். ஒட்டிய துணிப்பையை 24 மணி நேரம் உலர வைக்கவும். இதனை அயர்ன் செய்து பயன்படுத்தினால் கூடுதல் பிடிமானத்துடன் இருக்கும்.

இந்தப் பையில் 5 கிலோ எடை வரையிலான பொருட்களை எடுத்துச் செல்லலாம். எந்த பாதிப்பும் வராது. அதேநேரத்தில் பை அழுக்கானால் துவைத்து திரும்பவும் உபயோகிக்கலாம். இந்த துணிப்பையின் மீது எழுத்து மற்றும் படங்கள் தேவைப்பட்டால் அச்சு மூலமாக ஃபேப்ரிக் கலர் உபயோகித்து அலங்கரிக்கலாம்’’ என்கிறார்  மேலும் தொடர்ந்த ஷியாமளா, ‘‘ஒரு மீட்டர் துணியில் 2 பை என ஒரு நாளைக்கு 20 மீட்டரில் 40 பைகள் வரை முதலில் தயாரிக்கலாம். ஒரு பை தயாரிக்க அதிகபட்சமாக ரூ.13 ரூபாய் செலவாகும்.

ஒரு நாளைக்கு 40 பைகள் தயாரிக்க ரூ.520 செலவாகும். ஒரு பையை வெளிச்சந்தையில் ரூ.25 விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக்கொண்டால் (ஒரு நாள் தயாரிப்பு பைகள் 40 X 25 நாட்கள் = 1000 பைகள் தயாரிக்கலாம். ஒரு துணிப்பையில் விலை ரூ.25 என நிர்ணயித்தால் மாதத்திற்கு ரூ.25,000 வருமானம் கிடைக்கும். ஒரு துணிப்பை தயாரிக்க மூலப்பொருள் செலவு ரூ.13 என எடுத்துக்கொண்டால் 1000 பைகள் தயாரிக்க ரூ.13 X 1000 = ரூ.13,000 செலவாகும்.

ஆக வருமானம் ரூ.25 ஆயிரத்திலிருந்து செலவு ரூ.13 ஆயிரத்தைக் கழித்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வருமானம் ஈட்டலாம். இது ஒரு தோராயமான கணக்குதான். மற்றபடி துணிப்பைகளுக்கு இன்றைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சந்தைப்படுத்துவதை வைத்து வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ள முடியும். கடையாக அமைத்து அக்கம்பக்கத்து பெண்களை வேலைக்குச் சேர்த்து இத்தொழிலைச் செய்தால் செலவுகள் போக மாதம் குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ள தொழில்.

காலத்திற்கு ஏற்ற தொழில், எப்போதும் தேவையுள்ள தொழில் என்பதால் சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் தைரியமாக இத்தொழிலைத் தொடங்கலாம். அரசு பல கடன் உதவிகளை வழங்கிவருகிறது. எனவே, வங்கிக் கடன் பெற்றும் இத்தொழிலைச் சிறப்பாக செய்யலாம்” என்று உறுதியாக சொல்கிறார் ஷியாமளா.  

- தோ.திருத்துவராஜ்