IIT ல் சேர 2-வது கட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!



நுழைவுத் தேர்வு

சென்னை உட்பட நாடு முழுவதும் 22 நகரங்களில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் பி.இ, பி.டெக். படிப்புகளில் சேர ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு முந்தைய தேர்வாக இருப்பது ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வு.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர்தான் அட்வான்ஸ்டு தேர்வில் கலந்துகொள்ள முடியும். எனினும் என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வு போதும். ஐ.ஐ.டி-யில் சேர மட்டுமே அட்வான்ஸ்டு தேர்வு அவசியம்.

கடந்த ஆண்டு வரை ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ. நடத்திவந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் இத்தேர்வுகளை நடத்தும் பொறுப்பு என்.டி.ஏ. எனப் படும் தேசிய தேர்வு முகமையிடம் (அரசு அமைப்பு) ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வு ஒரே தேர்வாகத்தான் நடத்தப்டும்.

ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக ஜனவரியில் ஒரு தேர்வும், ஏப்ரலில் இன்னொரு தேர்வும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலாவது ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வு ஜனவரி 9 முதல் 12-ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அத்தேர்வில் தேசிய அளவில் 8 லட்சத்து 74 ஆயிரம் மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு தேர்வு எழுதாதவர்களும் முதல் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்போது மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளும் வகையில் மீண்டும் தேர்வு எழுத விரும்புவோருக்கும் வசதியாக 2-வது கட்ட நுழைவுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை ஆன்லைனில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். இதற்கான ஆன்லைன் பதிவு பிப்ரவரி 8 முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இத்தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.nta.nic.in என்ற இணையதளத்தில் முழு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

 - முத்து