அறிவியலைப் புரிந்து படிக்க தாய்மொழிக் கல்வி அவசியம்!மொழியறிவு

சமீபகாலமாக நாடெங்கிலும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் போலி விஞ்ஞானிகளாலும், அரசியல்வாதிகளாலும் பொதுவெளியில் பரப்பப்படுகின்றன. அதை எதிர்த்து அறிவியல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் சென்னை வந்திருந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் ‘இந்தியாவில் அறிவியலை மேம்படுத்தும் வழிகள்’ குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகளை அறிவதற்கு முன் அவரைப் பற்றிய சிறிய அறிமுகம் அவசியம். பேராசிரியர். வெங்கட்ராமன் (வெங்கி) ராமகிருஷ்ணன் 1952ல் சிதம்பரத்தில் பிறந்தவர். ஆனால், மூன்று வயதிலேயே அவரது குடும்பம் குஜராத்திற்குக் குடிபெயர்ந்தது. 17 வயது வரை அதாவது அவரது இளங்கலை இயற்பியல் படிப்பு வரை குஜராத்தில் உள்ள பரோடா நகரில் இருந்திருக்கிறார். பிறகு உயர்கல்விக்கு அவர் அமெரிக்காவிற்கு சென்றவர் அங்கேயே அமெரிக்க குடிமகனாக தங்கிவிட்டார்.

உயிரினங்களின் மரபணு குறித்து ரிபோசோம் ஆராய்ச்சிக்காக 2009ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல்பரிசு பெற்றார். சர் சி.வி. இராமனைப் போல அவருக்கும் இங்கிலாந்து அரசு ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் அறிவியல் உலகில் உயர்ந்த இடமான ராயல் சொசைட்டியில் தற்போது தலைவராக இருக்கிறார்.

இந்தியாவின் பிரதம அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவனோடு விவாதத்தில் கலந்துகொண்டு இந்தியாவில் அறிவியலின் நிலை குறித்து மிக முக்கியக் கருத்துகளை முன்வைத்தார்.இந்திய அரசு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மிகவும் குறைவான  அளவே முதலீடு செய்கிறது என புள்ளி விவரத்தோடு கூறினார். இதில் வேதனை தரக்கூடிய அம்சம் என்னவென்றால் இந்தியா 2005ம் ஆண்டு வாக்கில் அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிட்ட தொகையை விட 2015ம் ஆண்டு வாக்கில் குறைவான தொகையையே முதலீடு செய்திருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

தைவான், இஸ்ரேல், சீனா போன்ற நாடுகள் தங்களது GDP இல் 2.5% அறிவியல் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்யும் வேளையில் இந்திய அரசின் முதலீடு அதன் GDP இல் வெறும் 0.6% சதவிதம்தான். 17ம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவும், சீனாவும்தான் உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி கண்டிருந்தார்கள். ஆனால், 17ம் நூற்றாண்டிற்கு பிறகு ஜரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை முந்திச் சென்றன. இதற்குக் காரணம் மேற்குலக நாடுகள்.

கடந்த இருநூறு ஆண்டுகளாக அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அதிக அளவு முதலீடு செய்ததுதான் காரணம் என்றும் புள்ளிவிவரங்களோடு சொன்னார். அவர் பகிர்ந்துகொண்ட இன்னொரு மிக முக்கியமான கருத்து. அறிவியல் கல்வியானது தாய்மொழியில் கற்றால்தான் அறிவியலை ஆழமாகக் கற்கமுடியும் என்பது.

தன் வாழ்நாள் முழுக்க ஆங்கிலத்திலேயே கல்வி கற்ற ஒருவர், அதுவும் மேலை நாடுகளிலேயே அறிவியலின் உச்சபட்ச விருதுகளைப் பெற்ற ஒருவர் அறிவியலை ஒவ்வொருவரும் தாய்மொழியிலேயே பயிலுங்கள் என்று சொல்கிறார். ஆனால், நமது தமிழ்நாடு அரசோ, இருக்கும் அனைத்து தமிழ்வழிப் பள்ளிகளையும் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் ஏன் அறிவியலை தாய்மொழியில் கற்கவேண்டும் என்று கூறுகிறேன். என்பதற்கு இரண்டு காரணங்களை அவர் முன்வைத்தார். ஒன்று இளம் வயது வரை தாய்மொழியில் அறிவியலைக் கற்கும்போதுதான் அறிவியலை ஆழமாக புரிந்துகொள்ள முடியும். போலந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் தாய்மொழியில்தான் அறிவியலைக் கற்பிக் கிறார்கள். இரண்டாவது இந்திய மக்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் ஆங்கிலப் புலமை பெற்றவர்கள். அந்தவகையில் இந்தியாவின் அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் வெறும் 5% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்.

மீதம் 95% மாணவர்கள் மாநிலங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பயிலுகிறார்கள். இந்த 95% மாணவர்களுக்கும் தரமான அறிவியல் கல்வியை அளிக்க வேண்டுமென்றால் அது அவரவர் தாய்மொழியிலே அளிக்க வேண்டும். அப்போதுதான் சரியான அறிவியல் வளர்ச்சி சாத்தியமாகும். நமது அரசாங்கங்கள் இதைக் கவனத்தில் கொள்ளுமா?

மூன்றாவதாக அவர் பகிர்ந்துகொண்ட இன்னொரு முக்கியமான கருத்து. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் (சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா) அறிவியல் ஆராய்ச்சியில் அரசும், தனியார் துறையும் கிட்டத்தட்ட சமமான அளவில் முதலீடு செய்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் தனியார் நிறுவனங்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகவும் குறைவான அளவே முதலீடு செய்கின்றன. தனியார் லாபத்தை மட்டும் பார்க்காமல் இதுபோன்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் அவர் சொன்னார்.

கடைசியாக தற்போது அறிவியல் மாநாடுகளில் போலி விஞ்ஞானிகள் அறிவியல் என்ற பெயரில் தவறான தகவல்களைப் பரப்புவதைக் கடிந்துகொண்ட அவர் உண்மையில் இந்த போலி விஞ்ஞானிகள் மிகவும் குறைவான பேர்கள்தான். இந்தியாவின் அறிவியல் அறிஞர்களும் பொதுமக்களும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெவித்தார்.

உண்மையை சொல்லப்போனால் இன்று இந்தியாவின் உயர்பதவிகளில் இருக்கும் அறிவியல் அறிஞர் களைவிட பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் அறிவியலைப் பற்றியும், இந்தியாவின் மக்களைப் பற்றியும் மிக ஆழமான புரிதல் இருந்தது வெளிப்பட்டது.

ஜோசப் பிரபாகரன்