+1 பொருளியலில் முழு மதிப்பெண் பெறும் வழிகள்!



+1 பொதுத் தேர்வு டிப்ஸ்

பொதுத்தேர்வு தேதிகள் 10ம் வகுப்பு, +1, +2 மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் இது. +1 பொருளியல் பாடத்தைப் பொறுத்தவரையில் நன்கு திட்டமிட்டு எந்தெந்தப் பாடங்களைப் படித்தால் முழு மதிப்பெண் மிக எளிமையாகப் பெறமுடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“மாணவர்களில் பெரும்பாலானவர்கள் நினைப்பது எளிமையாகப் படித்து எப்படி வெற்றி பெறுவது. சுலபமாக நிறைய மதிப்பெண்கள்  பெறுவது எப்படி? நாம் பொருளியல் பாடத்திலும் சென்டம் எடுக்க முடியுமா? என்றெல்லாம் மனதில் கணக்கு போடுவார்கள். அந்தக் கணக்கு சாதகமாக அமைய குறிப்பிட்ட சில பாடங்களைப் படித்தாலே முழு மதிப்பெண் பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு” என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளியல் முதுகலை ஆசிரியர் K.பாஸ்கரன். அவர் தரும் டிப்ஸ்…

முதன்முதலில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ள நிலையில் அனைவருக்கும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள். +1 பொதுத்தேர்வு பொறுத்தவரையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு எழுதியதைப்போல் 200 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுத வேண்டியதில்லை. தற்போது நடைபெற உள்ள தேர்வில் மொத்த மதிப்பெண் 100. இதில் 90 மதிப்பெண் வினா வகை எழுத்துத் தேர்வு. 10 மதிப்பெண் அகமதிப்பீடு. ஆகமொத்தம் 100 மதிப்பெண்.

இந்தப் பொதுத்தேர்வைப் பொறுத்தவரையில் வினா வரைவுத்தாள் (Blue-Print) திட்டம் இல்லை. எனவே, பொருளியல் பாடத்தில் மொத்தம் 12 பாடங்கள் உள்ளன. இதில் ஒரு மதிப்பெண் வினா-விடை மொத்தப் பாடத்தில் இருந்து 20 கேட்கப்படும். இந்த ஒரு மதிப்பெண் வினாவானது, சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக என்று கேட்கப்படுகிறது. இதில் அனைத்து வினாவிற்கும் விடையளிக்க வேண்டும்.

பகுதி II-ல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் பத்து கொடுக்கப்பட்டு ஏழு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் 30-வது வினா கட்டாய வினா. இதற்குக் கட்டாயம் விடையளிக்க வேண்டும்.பகுதி III-ல் மூன்று மதிப்பெண் வினாக்கள் பத்து கொடுக்கப்பட்டு ஏழு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் வினா எண் 40-க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

பகுதி IV-ல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஏழு கொடுக்கப்படும். இதில் ஏழு வினாவிற்கு விடையளிக்க வேண்டும். இந்த ஏழு வினாக்களும் (அல்லது) என்ற முறையில்… அதாவது, ஒரு வினாவிற்கு இரண்டு வினாக்கள் கொடுத்து அதில் முதல் (அல்லது) இரண்டாம் வகை வினாவிற்கு ஏதாவது ஒன்றுக்கு விடையளிக்கும் வகையில் ஏழு வினாக்கள் இடம்பெறும். இந்த வினாக்கள் ஏழுக்கும் விடையளித்தாலே 35 மதிப்பெண்கள் பெற முடியும்.
உதாரணமாக: மக்கள்தொகை வெடிப்பிற்கான காரணங்களை விளக்குக.

(அல்லது)

வணிகவாதிகளின் சிந்தனைகளை விவாதிக்கவும்.

இதுபோன்று ஏழு வினாக்கள் கேட்கப்படும்.

கூடுதல் வினாக்கள்: 2, 3, 5 மதிப்பெண் வினாவினை பொறுத்தவரையில் புத்தகத்தின் பாடப்பகுதியில் உள்ள சிறு சிறு தலைப்புகளைக் கொண்டு வினாக்கள் கேட்கப்படும். அப்போது, ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது சொல்லுகின்ற முக்கிய தலைப்புகளை அடிக்கோடிட்டு படிக்கவும்.
இதுபோன்ற வினாக்களை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் (அ) சிறிய தலைப்புகளைத் தேர்வு செய்து வினா வடிவமைத்து ஆசிரியரிடம் சரி பார்த்தால் மிகவும் நல்லது.

உதாரணமாக சில கேள்விகளைப் பார்ப்போம்...

பாடம் 8 வங்கியியல்
1. மிகைப்பற்று வசதி என்றால் என்ன?
2. வணிக வங்கிகளின் பொதுப்பயன்பாட்டுச் சேவைகள் யாவை?
பாடம் 9 பன்னாட்டு வாணிபம்
1. பன்னாட்டு வளர்ச்சிக் கழகத்தின் (IDA) நோக்கங்கள் யாவை?
2. SAP என்றால் என்ன?
3. உலக வங்கியின் (WB)-வின் பணிகள் யாவை?
4. WTO-வின் முக்கியப் பணிகள் யாவை?
இதுபோன்ற வினாக்கள் கேட்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போதிருந்து திட்டமிட்டு பதற்றமின்றி படித்தால், முழு கவனத்தோடு தேர்வு எழுதினால் +1 பொருளியல் பாடத்தில் கட்டாயம் சென்டம் பெறலாம். வாழ்த்துகள்!