கட்டடக்கலைப் பட்டம் படிக்க நுண்ணறிவுத் திறன் தேர்வு! NATA 2018



திறன் தேர்வு

கட்டடக்கலை என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறை மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புள்ள ஒரு பல்துறை சார்ந்த கலையாகும். எப்படிக் கட்டடம் கட்டுவது என்பது ‘கட்டுமானப் பொறியியல்’ பிரிவு (Civil Engineering).

கட்டடங்களைச் சுற்றுப்புறச் சூழலுக்கேற்பவும், இருக்கின்ற இடத்திற்கேற்பவும், உடல் மற்றும் மன நலன்களுக்கேற்ப அழகுற அறிவியல் பூர்வமான இல்லங்கள், பல்வேறு பயன்களுக்கான கட்டடங்கள், ஆலயங்கள் என பயனுற பழமை நோக்கம் மாறாமல் கட்டுவதற்கான படிப்புதான் ‘கட்டடக்கலை’ படிப்பாகும்.

கட்டடக்கலைச் சிறப்புக்கு உலகம் முழுதும் பல சான்றுகள் காலத்தால் அழியாமல் நிமிர்ந்து நின்று வரலாற்றை நினைவுபடுத்துகின்றன. அவற்றில் தமிழகத்தில் கரிகாலனின் கல்லணையும், இராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயிலும், இராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரமும், மொகலாயக் கட்டடங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதி, தாஜ்மகால், கிரேக்க பிரமீடுகளும், ரோமானிய அரங்கங்களும், சீனப்பெருஞ்சுவரையும் நாம் சொல்லலாம்.

இந்திய அரசின் கட்டடக்கலைக் குழுமம் (Council of Architecture) கட்டடக்கலைஞர்களின் பதிவு, கல்வித்தரம், தேவையான கல்வித்தகுதி இவற்றை கண்காணிக்கிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள கட்டடக்கலை கல்லூரிகளில், 5 ஆண்டு B.Arch (Bachelar of Architecture) கட்டடக்கலைப் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கு தேசிய கட்டடக்கலை நுண்ணறிவுத் திறன் தேர்வும் (National Aptitude Test in Architecture  NATA) நடத்துகிறது. நேட்டா என்ற ஒற்றைத் தேர்வின் தேர்ச்சிக்குப்பின், மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம்.

நேட்டா தேர்வுமுறை

கட்டடக்கலைப் பயிலத் தேவையான நுண்ணறிவைச் சோதிக்கும் இத்தேர்வில், வரையும் திறன், உற்று நோக்கும் திறன், அளவு விகிதங்கள், அஸ்தெட்டிக் சென்சிட்டிவிட்டி (Aesthetic Sensitivity), கணிதம், சிக்கலான தீர்வுகளுக்கான திறன் சோதிக்கப்படும்.நாடு முழுவதும் நடைபெறும் ஒருநாள் ஆன்லைன் தேர்வில், முதல் பகுதி சரியான விடையைத் தேர்வு செய்யும் ஆன்லைன் தேர்வாகவும், இரண்டாம் பகுதி வரையும் தேர்வாகவும் இருக்கும்.

முதல் பகுதி் தேர்வு 29.4.2018 (ஞாயிறு) காலை 10.30 முதல் 1.30 வரை நடைபெறும். இதில் முதல் 90 நிமிடங்கள்  ஆன்லைன் தேர்வில் 20x2=40 மதிப்பெண்களுக்கான கணித வினாக்களும், 40x2=80 மதிப்பெண்களுக்கான பொது நுண்ணறிவு வினாக்களும் இருக்கும். இரண்டாம் பகுதியில் 90 நிமிடங்களில் ஏ4 தாளில் வரைவதற்கான (2x40=80) இரண்டு வினாக்கள் இருக்கும். மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். தவறான விடைக்கு மதிப்பெண் குறையாது.

அடிப்படைத் தகுதி மதிப்பெண்கள் குறைந்தபட்சம் முதல் பகுதித் தேர்வில் 25 விழுக்காடும் (30/120), இரண்டாம் பகுதி தேர்வில் 25 விழுக்காடும் மதிப்பெண்கள் (20/80)  எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தகுதி கட்டடக்கலைக் குழுமத்தால் நிர்ணயிக்கப்படும். இத்தேர்வின் மதிப்பெண் இந்த கல்வி ஆண்டிற்கு மட்டும் செல்லுபடியாகும்.

பாடத்திட்டம்

கணிதத்தில் அல்ஜிப்ரா, லாகிரிதம், மேட்ரிக்ஸ், திரிகோணமிதி, கோ-ஆர்டினேட் ஜியோமெட்ரி, த்ரி டைமன்சனல் ஜியோமெட்ரி, கால்குலஸ், கால்குலஸ் அப்ளிகேசன், பெர்முட்டேசன், காம்பினேசன், ஸ்டேட்டிங்புக்ஸ், ப்ராப்பரிட்டி என்ற தலைப்புகளில் வினாக்கள் கேட்கப்படும்.பொது நுண்ணறிவில், பொருள்கள், கட்டடக்கலை சார்ந்த டெக்ஸர், படங்களை புரிந்துகொள்ளுதல், இருபரிமாண பொருள்களைப் பார்த்து முப்பரிமாண பொருள்களைப் புரிந்து கொள்ளுதல், முப்பரிமாண பொருள்களைப் பார்த்து புரிந்துகொள்ளுதல், அனாலிட்டிக்கல்
ரீசனிங், காட்சி, எண்கள், வார்த்தைகள் உள்ளடக்கிய மனத்திறன், தேசியப் பன்னாட்டுக் கட்டடங்கள், கட்டடக்கலைஞர்கள், புகழ்பெற்ற படைப்புகள் இவற்றைப் பற்றிய வினாக்களும், மேத்தமெட்டிக்கல் ரீசனிங், கணங்கள், தொடர்புகள் ஆகியவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

வரைதல் தேர்வில், கொடுக்கப்பட்ட படத்தை அளவு, பரிமாணங்களுடன் தெளிவாக வரைதல், நிழல் வடிவம் மற்றும் அவற்றைப் புரிந்து வரைதல், முப்பரிமாணப் பொருள்களைக் கொண்டு குறிப்பிட்ட வடிவத்தை வரைதல், கொடுக்கப்பட்ட வடிவங்கள், அமைப்புகளை இருபரிமாணத்தில் வரைதல், பொருத்தமான வர்ணங்களுடன் படம் வரைதல், அளவு, பரிமாணங்கள், அன்றாட நிகழ்வுகளைக் கற்பனைசெய்து வரைதல், இருபரிமாண மற்றும் முப்பரிமாண சேர்த்தல், எடுத்தல், சுற்றுதல், புறப்பகுதி கொள்ளவும், திட்டமிடல், 3D எலிவேசன், லேண்ட் ஸ்கேப், பர்னிச்சர் பொருள்கள் சார்ந்து வரைதல் போன்ற விதத்தில் தேர்வு இருக்கும்.

விண்ணப்பிக்கத் தகுதி

+2 அல்லது டிப்ளமோவில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்களும், 10 ஆண்டுகள் பள்ளிப்படிப்பில் குறைந்தது 50 விழுக்காடு எடுத்து பின் இண்டர்நேஷனல் பாக்கலுரேட் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களும் நேட்டாவிற்கு
விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் முதலில் www.nata.in அல்லது https://learning.tesionhub.in/test/nata2018 என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின், NATA-2018 போர்ட்டலில் லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.1800, எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் ரூ.1500ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.3.2018
தேர்வுக்கான அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வதற்கான நாள்: 2.4.2018
தேர்வு நடைபெறும் நாள்: 29.4.2018
தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள்: 2.6.2018
மேலும் விரிவான விவரங்களை அறிந்துகொள்ள www.nata.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். l

முனைவர்

ஆர்.ராஜராஜன்