சமூக மாற்றத்தை விதைக்கும் குழந்தைகள் பாராளுமன்றம்!



புதுமை

நாளைய சமூகம் சிறப்பாக அமைவதில் மிக முக்கிய பங்கு இன்றையச் சிறார்களிடம்தான் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்ட சிறார்களின் பருவம் மாணவ சமூகத்தை உள்ளடக்கியது. இந்த மாணவ சமூகம் மனிதம் என்ற மேன்மைத் தன்மையை உயர்த்திப் பிடிப்பதாகவும், திறமையுடன் கூடிய செயல்பாடு கொண்டதாகவும் உருவாக்க வேண்டியது இன்றைய சமூகத்தின் தலையாய கடமை.

இப்பொறுப்புணர்வை உணர்ந்து மாணவ சமூகத்தில் மாற்றம் கொண்டுவர நினைத்தார் கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்வின் எம் ஜான் என்ற தனிமனிதன். அவரின் எண்ணத்தில் உருவானதுதான் அனைவரையும் உள்ளிணைக்கும் ‘அக்கம் பக்கத்துக் குழந்தைகள் பாராளுமன்றம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இத்தன்னார்வ நிறுவனம் 1998ம் ஆண்டு நிறுவப்பட்டது. நடப்பியல் பாராளுமன்றத்தின் மாதிரி வடிவமாகச் செயல்படும் இக்குழந்தைகள் பாராளுமன்றமானது,  மொத்த இந்தியக் குழந்தைகளுக்கான ஒரே பிரதமர், பல்துறை அமைச்சர்கள், அவைத் தலைவர் என முழுக்க முழுக்க குழந்தைகளால் ஆளப்படுகிறது.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, ஏற்றத்தாழ்வு இல்லாத அனைவருக்குமான பொதுக்கல்வி முறை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்தல், குழந்தைகளுக்கான உரிமைகளைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதாரத்தையும் மருத்துவத்தையும் உறுதி செய்தல், குழந்தைகளின் பங்கேற்பு உரிமையை உறுதிப்படுத்துதல் என இச்சமூகத்தின் பிரச்னைகளையும் சேர்த்து இக்குழந்தைகள் பாராளுமன்றம் விவாதிக்கிறது.

இதில் அங்கமாக உள்ள குழந்தைகளுக்கு அமைச்சர்கள் போன்ற பொறுப்புகளைத் தந்து சமூகத்தின் அனைத்துச் சிக்கல்களையும் உள்வாங்கி அதன் தீர்வை நோக்கி நகர்த்தும் இதுபோன்ற செயல்பாடுகளைச் சர்வதேச அளவில் கவுரவிக்கும் பொருட்டு இப்பாராளுமன்றத்திற்கு  யுனிஃசெப்  விருது அளித்து பெருமைபடுத்தியுள்ளது ஐ.நா. சபை.

குழந்தைகள் பாராளுமன்றத்தின் கடந்த காலச் சாதனைகள், தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நாளைய இலக்குகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இப்பாராளுமன்றத்தின் இப்போதைய பிரதமரான சொர்ணலட்சுமி. இந்திய சமூகத்தில் குழந்தைகளின் நிலை என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக ஐ.நா-வில் இருமுறை  பேசியுள்ள இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.

“குழந்தைகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும் மற்றும் சமூக வளர்ச்சியில் குழந்தைகளின் பங்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் அனைவரையும் உள்ளிணைக்கும் ‘அக்கம் பக்கத்து குழந்தைகள் பாராளுமன்றம்’ என்ற அமைப்பு. இந்தியக் கிராமங்களில் இருக்கும் அக்கம் பக்கத்துக் குழந்தைகளை உறுப்பினர்களாகக்கொண்டு செயல்படும் இவ்வமைப்பானது முதலில் தண்ணீர்ப் பிரச்னை, தரமான  சாலைகள் முதலான தங்கள் கிராமப் பிரச்னைகளை தீர்ப்பதையும், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் செயல்களையும் மேற்கொண்டுள்ளது. இதுமட்டுமல்ல நூலகம் அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் போன்ற மாணவர்களின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தங்கள் அடிப்படை விதியாகக்  கொண்டு செயல்படுகிறது.

இதுபோன்ற  தேவைகளின் அவசியத்தை அந்தந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் கொண்டுசென்று அதற்கான தீர்வை நோக்கிச் செல்கின்றனர் எங்கள் மாணவ உறுப்பினர்கள்.” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் சொர்ணலட்சுமி.
மேலும் தங்கள் முயற்சியால் கிடைத்த வளர்ச்சிகளைப் பற்றிக் கூறும்போது, “தர்மபுரி மாவட்டத்தில் மாணவர்களுக்கென மாணவர்களால்
உருவாக்கப்பட்ட நூலகம், கூத்தபாடியில் 15 குப்பைத் தொட்டிகளை அமைத்தது என எங்கள் மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றனர்.

இப்படி இந்தியா முழுவதும் உள்ள அக்கம் பக்கத்துக் குழந்தைகளையும் உறுப்பினர்களாக  உள்ளிணைத்துச் செயல்படுவது தான் குழந்தைகள் பாராளுமன்றம். இங்கு நிதி, தகவல் தொடர்பு என ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியாக அமைச்சர்களை நியமித்து குழந்தைகளுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்புணர்வையும் கொடுத்துச் செயல்பட வைக்கின்றோம்.

ஒவ்வொரு அமர்விலும் முந்தைய செயல்பாடுகளைப் பற்றி விவாதித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம்.  காவல்துறை உயர் அதிகாரிகள் அல்லது தலைமை நீதிபதிகள்தான்  எங்கள் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்கள்.” எனத் தொடர்ந்த சொர்ணலட்சுமி தங்கள் எதிர்கால இலக்குகளைப் பட்டியலிடத் தொடர்ந்தார்.

“கடந்த செப்டம்பர் 25, 2015ம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபை,‘ நீடித்து பேணத்தக்க வளர்ச்சிக்கான  இலக்குகள்’ என்ற அடிப்படையில் 17 வளர்ச்சி  இலக்குகளை தீர்மானித்து அதை 2030ம் ஆண்டுக்குள் செயல்படுத்திட வேண்டும் என தங்கள் இணைப்பில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கட்டளையிட்டது.

அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்தல், வறுமையை ஒழித்தல், அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான மற்றும் தரமான கல்வி, பெண்கல்விக்கு முன்னுரிமை கோருதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் என்பன போன்ற அந்த 17 இலக்குகளையும் நடைமுறையில் சாத்தியப்படுத்துவதையே எங்கள் பாராளு மன்றத்தின் வருங்கால லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறோம்.

அனைத்து நாடுகளும் இந்த இலக்குகளைச் செயல்படுத்த முனைப்பு காட்டிவரும் இன்றைய சூழலில் முதன்முதலில் அந்த இலக்குகளைத் தங்கள் லட்சியமாக கொண்டு செயல்படும் ஒரே குழந்தைகள் அமைப்பு எங்களுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை எங்கள் பாராளுமன்றத்தில் 17 அமைச்சர்கள் மட்டும் இருந்த நிலையில் தற்போது இந்த இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் 8 அமைச்சர்கள் என்ற வீதத்தில் மொத்தம் 25 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த 17 இலக்குகளையும் துரத்தி  வெல்வதுதான் எங்கள் பாராளுமன்றத்தின் அடுத்த 15 வருட முழுமைக்குமான  இலக்கு” என்று தீர்கமாகச் சொல்கிறார் சொர்ணலட்சுமி.

- வெங்கட்