யோகாவில் கின்னஸ் சாதனை!



சாதனை

அமெரிக்கப் பெண்ணின் சாதனையை முறியடித்த விருதுநகர் மாணவி!


வி ருதுநகர் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹர்ஷ நிவேதா, உத்தித பத்மாசனத்தை 174 வினாடி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் 90 வினாடி உத்தித பத்மாசனம் செய்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஹர்ஷ நிவேதா முறியடித்துள்ளார். அவரிடம் பேசினோம்.

“நான் விருதுநகரில் உள்ள பி.எஸ். சிதம்பர நாடார் சீனியர் ஆங்கிலப் பள்ளியில்  ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது தந்தை கார்த்திக் குமார், தாயார் ஜோதி. எனது அக்காள் அமிர்தா” என சுயவிளக்கம் கொடுத்த மாணவி மேலும் தொடர்ந்தார்.“நான் 5 வயதிலிருந்து யோகா பயின்று வருகிறேன்.

எனக்கு அப்போதெல்லாம் பெரிய அளவில் ஆர்வம் இருந்ததில்லை. எனக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வரும். அதனால், உடம்பில் எதிர்ப்புச்சக்தி கூடுவதற்காக தினமும் யோகா செய்ய வேண்டும் என எனது அம்மா வற்புறுத்தினார்கள்.

அப்போது அவர்கள் சொன்னதற்காகச் செய்த யோகா இப்போது என் மூச்சாக மாறிவிட்டது. எனது அம்மா அனைத்து ஆசனங்களும் செய்வார். அவர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். இப்போது நானே ஆர்வமாகச் செய்யக் கற்றுக்கொண்டேன்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நிவேதா.

“எனது 5 வயதிலிருந்து தற்போது வரை நடந்த அனைத்து மாநில, மாவட்ட யோகா போட்டியில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் வென்றுள்ளேன். நான் செய்கிற ஆசனம், அதன் பலன் மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக எனது தாயார் அவர்களுடைய jothi karthick என்ற ஃபேஸ்புக் வழியாக ஹர்ஷாவின் காலை வணக்கம் என்று நான் செய்யும் ஆசனங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தினமும் அதில் பதிவு செய்துவருகிறார்.

கண் தெரியாதவர்களும் ஆசனங்கள் செய்யலாம் என்பதை வெளிக்காட்டவே கண்களைக் கட்டிக்கொண்டு யோகா செய்து காட்டினேன். அதற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ரியல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸில்(Real world records) என்னுடைய  பெயர் பதிவு பெற்றது. மேலும், கண் தெரியாதவர்களுக்கு  நான் விழிப்புணர்வு யோகா செய்து காட்டியதால் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் கோல்டன் மூன் அவார்டு (Golden Moon Award) பெற்றேன். இதன் உந்துதல்தான் என்னை Guiness வரை கொண்டு சென்றது” என்று பெருமிதம் பொங்க கூறினார் நிவேதா.

“உலக அளவில் யோகாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்துவந்தது. அதற்காகத் தினமும் காலையில் எழுந்து பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் 90 வினாடிகள் உத்தித பத்மாசனம் செய்து உலக சாதனை செய்திருந்தார். அந்தச் சாதனையை முறியடிக்க விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தேன்.

இந்த நிலையில்தான் மலேசியாவைச் சேர்ந்த அகில உலக யோகாசன சம்மேளன செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் இரண்டு அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பத்மாசனத்தில் கைகளை கீழே ஊன்றி உடம்பை மேலே தூக்கிய நிலையில் 174 வினாடிகள் உத்தித பத்மாசனம் செய்துகாட்டினேன். இதன் மூலம் உலக சாதனை நிகழ்த்தி கின்னஸில் இடம்பெற்றுள்ளேன்.

யோகா செய்வதன் மூலம் எனக்கு ஏராளமான பயன்கள் கிடைத்து வருகிறது. யோகா அறிவுத்திறனை வளர்க்கும் அதற்காகவேனும் என்னைப்போன்று படிக்கும் மாணவர்கள் யோகா செய்வது நல்லது” என முத்தாய்ப்பாக முடித்தார் ஹர்ஷ நிவேதா. ஹர்ஷ நிவேதாவின் கின்னஸ் சாதனைக்கு பயிற்சியும் முயற்சியும் எடுத்த அவரது தாயார் ஜோதியிடம் பேசியபோது, “ஹர்ஷாவுக்கு சிறுவயதில் அடிக்கடி உடல்நலமில்லாமல் போகும்.

உடல்நலமில்லாமல் ஆவதற்கு உடலின் இயக்கம் சரியாக இல்லாததே காரணம் என எனக்குத் தோன்றியது. சத்தான உணவுகளைவிட உடற்பயிற்சியே ஒருவரை நோயிலிருந்து காக்கும் என்பதால் அவளுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்திக்காக யோகா செய்யக் கற்றுக் கொடுத்தேன். அது இன்று அவளை உலக அளவில் சாதனை படைக்க வைத்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில் மனிதனின் ஆயுட்காலம் என்பது 200 ஆண்டுகளாக இருந்தது. தற்போது படிப்படியாகக் குறைந்து மனிதனின் சராசரி வயது 70-ல் இருந்து 60 ஆக உள்ளது.  காரணம் உடல் உழைப்பு, ஆரோக்கிய உணவு, சுத்தமான நீர், தூய்மையான காற்று மற்றும் மன அமைதி இல்லாமல் போனதுதான். தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை திறந்தவெளியில் யோகா செய்துவந்தால் ஆரோக்கியம் மற்றும் மன
அமைதி கிடைக்கும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஓடி ஓடி உழைக்கும் செல்வத்தை அனுபவிக்க நாம் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆகையால் தினமும் காலை 1 மணி நேரமாவது யோகா செய்யவேண்டும். அதன்பின் அரை லிட்டர் தண்ணீரை அமர்ந்துகொண்டு மெதுவாக குடித்து முடிக்க வேண்டும்.

நமது உடம்பு எல்லா வகை பழம், காய்களை ஏற்றுக்கொள்ளும்படி பழக்கிக்கொள்ள வேண்டும். தினமும் 2 வகை பழம், மூன்று வகை காய்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எனது மகள் ஹர்ஷாவிற்கு காய்கறி, பழம் அதிகமாகக் கொடுப்பேன்.

மாமிச வகைகள் நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை. மாமிச உணவுகள் யோகா செய்வதற்கு ஏற்ற உணவு அல்ல. ஏன் மாமிச உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றால், மாமிச உணவில் நல்ல கொழுப்பும், கெட்ட கொழுப்பும் அதிகம் இருக்கும்.

உடற்பயிற்சி செய்து உடலை வலுவாக்குபவர்கள் வேண்டுமானால் சாப்பிடலாம். ஆனால், யோகாவோ நாடி நரம்புகள் அத்தனையையும் இலகுவாக்கி உடலைச் சீராக இயங்க வைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடியது. எனவே கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வாழ்வது ஒரு முறை, அதை அதிக காலம் ஆரோக்கியமாக வாழ்வது நம் கையில்தான் இருக்கிறது. யோகாவில் சூர்ய நமஸ்காரம் தினமும் மெதுவாக 5 முறை செய்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறமுடியும்.

யோகாவைப் போட்டியாகப் பார்க்க வேண்டாம். போட்டி என்று வைத்தால்தான் அதைக் கண்டிப்பாகச் செய்வார்கள் என்ற நோக்கத்துக்காகக் கொண்டுவந்ததுதான் போட்டி. ஆகையால் போட்டிக்காக யோகா கற்றுக்கொள்ளாமல் ஆரோக்கியத்திற்காக கற்றுக்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் நல்லது.” என்று தன்னம்பிக்கையை விதைக்கிறார் ஹர்ஷாவின் தாய்.

- தோ.திருத்துவராஜ்

படங்கள்: அ.நாகராஜன்