செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!


சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நேஷனல் கெரியர் சர்வீஸ், சிஐஐ என்று அழைக்கப்படும் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் கீழ் செயல்படும் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம் ஆகியவை ஒன்றிணைந்து  ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாமை நடத்திவருகின்றன.

அதன்படி தனியார் துறையில் வேலை தேடுபவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை இந்த மாதத்தில் 4 நாட்கள் நடத்த உள்ளது. இதில் பல கார்ப்பரேட் மற்றும் சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் தங்களுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்ய இருக்கின்றன.

இதுகுறித்து சென்னையில் உள்ள சிஐஐ மைய தலைமை அதிகாரி எஸ்.பரமேஸ்வர் கூறுகையில், “கல்வித் தகுதிவாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி 10.1.2018 அன்று நடைபெற்ற முகாம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் / தேர்ச்சி பெறாதவர்களுக்கானது. 17.1.2018 அன்று நடைபெறுவது ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றவர்கள்/தேர்ச்சி பெறாதவர்களுக்கானது. 24.1.2018 அன்று நடைபெறுவது எஞ்சினியரிங்/ஆர்ட்ஸ், சயின்ஸ் பட்டதாரிகளுக்கானது.

31.1.2018 அன்று நடைபெறுவது மார்க்கெட்டிங் / ஃபினான்ஸ் / ஹியூமன் ரிசோர்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில்  முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டதாரிகளுக்கானது. இந்த முகாமில் கலந்துகொள்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. மேலும் விவரங்களுக்கு: resume.chennai@mcc-centre.com, pd.peechennai@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலும், முன்பதிவுக்கு www.mcc-centre.com என்ற இணையதளத்திலும், 044 - 22500540, 22500560, 22501032 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

ஐ.ஐ.பி.எம்.-ல் முதுநிலைப் படிப்புகள்

பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட் தன்னாட்சிக் கல்வி நிறுவனம் மத்திய அரசின்கீழ் இயங்கிவருகிறது. இந்நிறுவனம் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்.,) பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கும் படிப்புகள்: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் - அக்ரி பிசினஸ் அண்ட் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட் (2 ஆண்டுகள்)  மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் - ஃபுட் புராசசிங் அண்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட் (2 ஆண்டுகள்).

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பில் 50%  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கேட், மேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.

சேர்க்கை முறை: தேர்வு மதிப்பெண்கள், எழுத்துத் திறன், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.1.2018
மேலும் விவரங்களுக்கு: www.iipmb.edu.in

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா!

ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 மாணவர்களைத் தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வி இயக்குநர், இளங்கோவன் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ‘மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், 50 மாணவர்கள், 50 மாணவியரைத் தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், அருங்காட்சியகம், விலங்கியல், தாவரவியல் பூங்கா, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், கோயில், அரண்மனை, பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இதற்கு, ஏழாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை, எளிய மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.கடற்கரை, நீர்நிலைகள், படகுப் பயணம், மலை ஏற்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது.’ என அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC - வருடாந்திரத் தேர்வுக்கால அட்டவணை வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் அலுவலர்களும், ஊழியர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி அரசு ஊழியர்களைத் தேர்வுசெய்து வருகிறது.

ஓராண்டில் தமிழக அரசுப்பணியில் எந்தெந்த பதவிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன, அதற்கான தேர்வு எப்போது, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும், நேர்முக்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற விவரங்கள் எல்லாம் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை (Annual Planner) டி.என்.பி.எஸ்.சி. கடந்த 5 ஆண்டுகளாக வெளியிட்டுவருகிறது.

இதன்மூலம், அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பார்த்து (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். அதன்படி, இந்த ஆண்டு குரூப்-2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்,உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியகக் காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் என 23 விதமான பதவிகளில் 3,235 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வழக்கமாக, டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில், என்ன தேர்வு, எப்போது அறிவிப்பு, எப்போது தேர்வு, தேர்வு முடிவுகள், நேர்முகத்தேர்வு ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த முறை, தேர்வு, அதற்கான அறிவிப்பு, தேர்வு நாள் ஆகியவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. தேர்வு முடிவு நாள் விவரம் இடம் பெறவில்லை.