செய்தித் தொகுப்பு




சி.பி.எஸ்.இ. மூன்று மொழிகள் பாடத்திட்டத்தில் மாற்றம்!

மூன்று மொழி பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள மாற்றங்கள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில், “சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில், மூன்று மொழிப் பாடத்திட்டம் உள்ளது.

அதன்படி, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியும், ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியும் கற்றுத் தரப்படுகின்றது.மாணவர்கள் தாய்மொழியைத் தவிர, மற்றொரு இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், பல்வேறு பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.அதனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலத்தைத் தவிர, இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை மூன்றாவது மொழிப் பாடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத் தரப்படும்.பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை, விருப்பப் பாடமாக கற்றுத் தரலாம். தற்போது, எட்டாம் வகுப்பு வரை உள்ள மூன்று மொழி பாடத்திட்டத்தை, 10 ம்வகுப்பு வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது”  எனத் தெரிவித்துள்ளனர்

போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் (TNPSC, SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான பயிற்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை மூன்று மாத காலப் பயிற்சி நவம்பர் மாதம் தொடங்கி வழங்கப்பட உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. (குரூப் 2 மற்றும் குரூப் 4) எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். போன்ற முகமைகள் நடத்தும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும்பொருட்டு, கட்டணமில்லா பயிற்சிக்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொது - 33%, பிற்படுத்தப்பட்டோர் - 26.5%, பிற்படுத்தப்பட்ட - (முஸ்லீம்) - 3.5%, மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 20%, ஆதிதிராவிடர் - 15%, அருந்ததியர் - 3%, பழங்குடியினர் - 1 என பயிற்சியின் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யத் தொடங்கும் நாள் - 16.10.2017, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2017
கூடுதல் விவரங்களுக்கு www.civilservicecoaching.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

சென்னைப்பல்கலையில்மாணவர் சேர்க்கை!  

சென்னைப் பல்கலையில், சுயநிதிக் கல்வி முறையில் 2 ஆண்டுகள் கொண்ட எம்.எல். படிப்புகளில், மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம், அறிவுசார் சொத்து சட்டம், மனித உரிமைகள் மற்றும்
சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் ஆகிய துறை பிரிவின் கீழ் வழங்கப்படும் எம்.எல்., படிப்புக்கு, மூன்றாண்டுகள் கொண்ட பி.எல்.,- எல்.எல்.பி. அல்லது ஐந்து ஆண்டுகள் கொண்ட பி.எல்.- எல்.எல்.பி., பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2017
மேலும் விவரங்களுக்கு: www.unom.ac.in

850 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை!
 
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் மிகப்பெரிய குற்றச்சாட்டை பள்ளிக்கல்வி துறை மீது வைத்துள்ளது. அதில், ‘மாநில அளவில் 125 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களில், 60 இடங்கள் பல மாதங்களாகக் காலியாக உள்ளன. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 39 தலைமை ஆசிரியர்களுக்கு டி.இ.ஓ.-க்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டும், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.இதனால் நலத் திட்டங்கள் வழங்குவது, பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் மேற்பார்வை, உதவிபெறும் பள்ளிகளுக்குச் சம்பளம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 2800 அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்தப் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலையில் முடிவுக்கு வந்தது. ஆனால், அதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றக் கிளையிலும் உள்ளது.

சென்னை உத்தரவை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர இயக்குநர், செயலர் என யாரும் மூன்று மாதங்களாக அக்கறை செலுத்தவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.