ஆறுதல் பரிசு!



வாசகர் கடிதம்

குடும்பச் சூழல், பொருளாதாரப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் கல்வியைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கு வரப்பிரசாதமாக வாய்ப்பளிக்கும் தேசிய திறந்தநிலைப் பள்ளி பற்றிய கட்டுரை அருமை. திறந்தநிலைப் பள்ளிகளில் உள்ள படிப்புகளின் வகைகள், அப்படிப்புகளின் சிறப்பம்சங்கள், விண்ணப்பிப்பது எப்படி? என மாணவனின் அடிப்படை சந்தேகங்களுக்குப் பதில் தரும் விதமாகத் தொகுத்து தெளிவான  நடையில் விளக்கியிருப்பது தனிச்சிறப்பு.
  ஏ.தேவா, கோட்டூர்.
 
நவோதயா பள்ளிகளைப் பற்றிய கல்வியாளர்களின் கருத்து ஏற்கப்பட வேண்டியதுதான். ஆனால், இன்னும் மின்சாரம் கூட  இல்லாத கிராமங்கள் இருக்கும் தமிழ்நாட்டின் பின்தங்கிய மாணவர்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பாக இதைக் கருதலாமே. இன்றைய கல்விச் சூழலில் தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பள்ளிகளை முற்றிலும் அகற்றுவதென்பது அசாத்தியமே. அரசுப் பள்ளிகளையும், தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் வகையில் செயல்படும் இம்முன்மாதிரி பள்ளிகளில் எவ்விதக் கட்டணமுமின்றி கிராமப்புற மாணவர்கள் பயிலலாம் என்பதை  நாம் ஆதரிக்கலாமே.
  ஜி.ரவிக்குமார், விருத்தாசலம்.
 
இன்றைய கல்விச் சூழலில் குழந்தைகளின் கல்வித்தரம் கேள்விகுறியாகவே உள்ளது என்பதை உரக்கச் சொல்கிறது குழந்தை நேயப் பள்ளிகளைப் பற்றிய கட்டுரை. குழந்தைகளின் மனநிலையும் அவர்களின் வெகுளித்தனத்தையும் உணராமல், புத்தகத்தில் இருக்கும் பாடங்களை மட்டும் நடத்தும் ஆசிரியர்கள் ஒருபுறம் இருக்கும்போது, குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு குழந்தைகளைக் கொண்டாடும் குழந்தைநேயப் பள்ளிகள் மறுபுறம் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய கல்வி-வேலை வழிகாட்டி இதழுக்கு நன்றி.
    இரா.ரத்தினவேலு, காரியாபட்டி.
 
ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவுகொண்ட தமிழக இளைஞர்களுக்குப் பொருளாதாரமும், படிப்பதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததுமே மிக முக்கிய பிரச்னைகள். தமிழக மாணவர்களின் இச்சூழலைக் களையும் வகையில் எழுதப்பட்ட ‘ஆன்லைனில் படித்து ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ என்ற கட்டுரை ஆறுதல் பரிசு. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளால் இதழை அலங்கரிக்கும் கல்வி-வேலை வழிகாட்டிக்கு இதுவே தனிச்சிறப்பு.
எஸ்.விஜயகுமார், திருச்சி.