+1 தமிழ் முழுமதிப்பெண் பெறுவது எப்படி?



+1 பொதுத் தேர்வு டிப்ஸ்

நீட் பொதுத்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியதன் காரணமாகத் தமிழகப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளான +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாண்டு மட்டும் +2 வகுப்பிற்கு முந்தைய பழைய முறையிலேயே தேர்வு வினாத்தாள், விடைக்குறிப்பு, தேர்வு நேரம், மதிப்பெண்கள் ஆகிய அனைத்தும் மாறாமல் உள்ளது. ஆனால், +1 வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடக்கும் என அரசாணை வெளியிட்டு அதற்கான மாதிரி வினாத்தாள் (Model Question Paper) வெளியிடப்பட்டுள்ளது.

+1 தேர்வில் முந்தைய மொத்த மதிப்பெண் 1200லிருந்து 600 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரமும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய வடிவில் வினாத்தாள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இம்முறையிலேயே நடந்து முடிந்த காலாண்டு பொதுத்தேர்வும் தமிழ்நாடு முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2018 -ல் நடைபெறப்போகும் பொதுத் தேர்வும் இதன்படியே நடக்கும் என தமிழகக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழ்மொழிப் பாடத்தில் மொழித்தாள்-I, மொழித்தாள்-II என இரண்டு தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும். இவற்றுக்குத் தலா 90 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதேபோல மொழித்தாள் I, II ஆகிய இரண்டு தாள்களுக்கும் தலா 10 மதிப்பெண்களுக்கு அகமதிப்பீடு தேர்வு நடைபெறும். இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களில் 200-ல் பாதியாக 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டே +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு டிப்ஸ் வழங்க உள்ளோம்.

“முழுவதும் புதிய வடிவிலான வினாத்தாள் அமைப்பு முறையினை மாணவர்கள் மனதில் பதியவைக்க வேண்டும். ஆகவே, வினாத்தாள் அமைப்பு எப்படி? முழு மதிப்பெண் பெறுவது எப்படி? தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும்? எழுதும்போது கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் எது? மொழித்தாளில் பெற வேண்டிய மதிப்பெண் எவ்வளவு? உள்ளிட்ட பல சிக்கல்களை ஆழமாகப் புரிந்துகொண்டால் எளிதில் வெற்றி வாகை சூடிடலாம்” என்கிறார் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் முதுகலை ஆசிரியர் அ.பாலச்சந்தர்.

இனி அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…
தமிழ் முதல் தாள்தமிழ் முதல்தாள் அல்லது மொழித்தாள்-I-ல் மொத்த மதிப்பெண் 100 ஆகும். இதில் 90 மதிப்பெண் எழுத்துத் தேர்விற்கும்,
10 மதிப்பெண் அகமதிப்பீடு தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். ஒட்டுமொத்தமாக 100க்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

எழுத்துத்தேர்வு வினாத்தாள் பகுதி-I, பகுதி-II, பகுதி-III, பகுதி-IV என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி-I-ல் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம் பெற்றுள்ளது. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுகின்ற முறையில் (அ, ஆ, இ) விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையைக் கண்டறிந்து முழுவதுமாக எழுத வேண்டும்.

(எ.கா. பாரதியார் மொழிபெயர்த்த நூல் என்ற வினாவிற்கு (இ) கீதை எனக் குறிப்பிடுதல்)பொதுவாக இப்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் பாடப்பகுதியின் பயிற்சி வினாக்கள் மட்டுமின்றி, செய்யுள் முன்குறிப்பு, இலக்கணக் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, செய்யுள் வரியின் கருத்துப் பகுதி, திருக்குறள் வரிகள் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும். இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற அனைத்துப் பயிற்சி வினாக்கள் மற்றும் செய்யுள் பகுதிகளைத் தெளிவுறப் படிக்க வேண்டும்.

பகுதி-II-ல் 10 வினாக்கள் இடம்பெற்றுள்ளது. இரண்டு மதிப்பெண் கொண்ட இவ்வினாக்கள் வினா எண் 21 முதல் 30 வரை உள்ளது. வினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். இப்பகுதியில் ஏழு வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். ஓரிரு வார்த்தைகளில் விடை எழுதினால் போதுமானது. நீண்ட பத்திகளில் விடை எழுத வேண்டியதில்லை.

எ.கா: பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் எவை? எட்டுத்தொகை நூல்கள் யாவை? மலையினும் மாணப்பெரிது எது? என்பன போன்றவை. மேலும் இப்பகுதியில் பிரித்து எழுதி, பகுபத உறுப்பிலக்கணம் எழுதுதல், இலக்கணக் குறிப்பு தருதல், திருக்குறள் தொடங்கும் குறள், முடியும் குறள் என்பனவும் வினாக்களாக அமையும்.

பகுதி-III-ல் 10 வினாக்கள் இடம்பெற்றுள்ளது. (அதாவது, வினா எண் 31 முதல் 40 வரை). மூன்று மதிப்பெண் கொண்ட இவ்வினாக்களுள் எவையேனும் ஏழு எழுத வேண்டும். வினா எண் 40க்குக் கட்டாயம் விடையளிக்க வேண்டும். இப்பகுதிக்கான விடைகள் மூன்று முதல் நான்கு வரிகளில் இருத்தல் வேண்டும். சிறுசிறு பகுதிகளாக இடுகுறி (*) இட்டும் எழுதலாம்.

எ.கா : * அகநானூறு குறிப்பு வரைக. * முரசறையும்போது கூற வேண்டியவை யாவை? தலைமகற்குத் தோழி கூறியன யாவை? என்பன போன்றவை. மேலும் இப்பகுதியில் இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தருதல், புணர்ச்சி விதி தருதல் போன்ற வினாக்களும் இடம்பெறும். இதற்குரிய பதில்களைச் சுட்டிக்காட்டியும், பிரித்து விளக்கிக் காட்டியும் விடை பகிர வேண்டும்.

பகுதி-IV-ல் 7 வினாக்கள் இடம்பெற்றுள்ளது. (வினா எண் 41 முதல் 47 வரை). ஒவ்வொரு வினாவிற்கும் அல்லது என்று வேறு வினா தரப்பட்டுள்ளது. அதில் ஒன்றினைத் தெரிவு செய்து, விளக்கமாக விடையளிக்க வேண்டும். இப்பகுதியில் கட்டாய வினா எதுவும் இல்லை. ஆனால், அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் 5 மதிப்பெண்.

ஆகமொத்தம் 35 மதிப்பெண் கொண்ட பெரும்பகுதி இதுவாகும்.செய்யுள் பகுதியில் திருக்குறள், தொடர்நிலைச்செய்யுள், சிற்றிலக்கியங்கள், மறுமலர்ச்சிப் பாடல்கள், திணை, துறை விளக்கங்கள், அணி இலக்கணம், மனப்பாடச்செய்யுள், இவற்றிலிருந்து பெரும்பாலும் வினாக்கள் இடம்பெற வாய்ப்பு அதிகம். இப்பகுதிகளை ஆழமாகப் படித்து எழுதிப் பழக  வேண்டும்.

தமிழ் இரண்டாம் தாள்

தமிழ் இரண்டாம் தாள் மொத்த மதிப்பெண் 100 ஆகும். இதில் 90 மதிப்பெண் எழுத்துத் தேர்விற்கும், 10 மதிப்பெண் அகமதிப்பீட்டுத் தேர்விற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொழித்தாள்-I போலவே மொழித்தாள்-II-லும் எழுத்துத் தேர்வு 90 மதிப்பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்விற்கு 100 -ல் குறைந்தபட்சம் 35 பெற்றால் தேர்ச்சி பெறலாம்.

90 மதிப்பெண் கொண்ட எழுத்துத்தேர்வு வினாத்தாள் பகுதி-I, பகுதி-II, பகுதி-III, பகுதி-IV என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி-I-ல் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் சம மதிப்பெண் கொண்ட இப்பகுதியில் உள்ள விடைகள் தமிழ்மொழியைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் வகை செய்யும் முறைமையில் இடம்பெற்றிருக்கும். வடமொழிச் சொற்களை நீக்கி நல்ல தமிழில் எழுதுதல், வல்லின மெய்களை இட்டு எழுதுதல், ஆங்கிலச் சொற்களை நீக்கித் தமிழில் எழுதுதல், எழுத்துப் பிழைகளை நீக்குதல், பொருள் வேறுபாடறிந்து எழுதுதல், கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுதல், வாக்கியப் பிழையை நீக்குதல், விரிவாக்கம் தருதல், பொருத்தமான நிறுத்தற் குறியிட்டு எழுதுதல், வல்லின மெய்களை இட்டு எழுதுதல், கலப்பு நடையை தவிர்த்து நல்ல தமிழில் எழுதுதல், பொருள் வேறுபாடு அறிந்து எழுதுதல், மயங்கொலி அறிந்து பொருள் தருதல், தொடரில் உள்ள பிழை நீக்கி எழுதுதல், விடைக்கேற்ற வினா அமைத்தல், இலக்கியச் சுவை அறிந்து எழுதுதல், தொகைச் சொல்லை விரித்து எழுதுதல் என்பன போன்ற வினாக்கள் தெளிவாகக் கேட்கப்படும்.

அடுத்து பகுதி  IV-ல் ஏழு வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் அல்லது வினா தரப்படும் ஏதேனும் ஒன்றினைத் தெரிவு செய்து உரிய பதிலை எழுத வேண்டும். சுவைப்பொருள் குன்றாமல் எழுதுவது, நாடக வடிவில் எழுதுவது, திறனாய்வு செய்து எழுதுவது, கற்பனைக் கதையாக எழுதுவது, நயம் பாராட்டி எழுதுவது எனக் கேட்கப்படும் வினாவிற்குத் தகுந்த முறையில் விடை எழுதுதல் வேண்டும். நேரடியாகக் கேட்கப்படும் பழமொழியை விளக்கி வாழ்க்கை நிகழ்வை எழுதுதல் மற்றும் ஆங்கிலத் தொடர்களுக்குத் தமிழாக்கம் தருதல் போன்றவற்றில் உரிய பயிற்சியின் மூலமாக முழு மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.

சுருங்கக் கூறின் தமிழ் இரண்டாம் தாளைப் பொறுத்தவரை படைப்பாற்றல், கற்பனைத் திறன், இலக்கிய நயம் பாராட்டல், கதைப்பகுதி, பழமொழி தமிழாக்கம், பிழைகளைக் களைதல், வாழ்வியல் நிகழ்வு என மாணவரின் அறிவாற்றலைச் சோதிக்கும் பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. வினாக்களுக்கான உத்தேச மற்றும் உசிதமான விடைகளை முன்கூட்டியே படித்து நினைவில் வைத்து எழுதிப் பார்ப்பதே முழு மதிப்பெண் பெற ஏதுவாகும்.

தமிழ் முதல்தாளில் எளிதில் வெற்றி பெறமுடியும். செய்யுள் பகுதியிலிருந்து மட்டுமே வினாக்கள் இடம்பெறுவதால் படிப்பது எளிது; எழுதுவதும் எளிது. ஆனால், தமிழ் இரண்டாம் தாளில் படைப்பாற்றல், கற்பனைத்திறன், சொந்த நடை, பழமொழி தமிழாக்கம், பாநலம் பாராட்டல், துணைப் பாடப்பகுதி என செறிவான வினாக்கள் இருக்கிறது. ஆகவே, எழுதுவதற்கும் நேரம் போதாது. வேகமாகத் தெளிவாக எழுத வேண்டும்.

தமிழ் இலக்கணப் பகுதிகளை எழுதும்போதும், பொருத்துக எழுதும்போதும் வினா எழுதி, உடன் விடை எழுத வேண்டும். விடை மட்டும் தனியே எழுதக் கூடாது. அணி இலக்கணம் எழுதும்போது எவ்வகை அணி எனக் காட்டி எழுத வேண்டும். திருக்குறள் வினாக்கள் கேட்கப்படும்போது திருக்குறளை எழுதி அதற்கான விடையை (பொருளை) எழுதினால் மிகவும் நல்லது. பகுபத உறுப்பிலக்கணத்தில் பிரித்து எழுதினாலே மதிப்பெண் வழங்கப்படும்.

புணர்ச்சி விதியில் சொற்களைப் பிரித்து எழுதி, விதி எழுதினாலே மதிப்பெண் வழங்கப்படும். ஒரு மதிப்பெண் மனப்பாடச் செய்யுள், இலக்கணப் பகுதிகள், துணைப்பாடக் கதை, பாநலம் பாராட்டல், பழமொழித் தமிழாக்கம். வாழ்வியல் நிகழ்வை எழுதுதல் ஆகியவற்றிற்கு விடை எழுதிப் பழகினாலே எளிதில் தேர்ச்சி பெறலாம்.

சொந்த நடையில் எழுதும்போது வாக்கியப் பிழை, தொடர் பிழை, எழுத்துப் பிழை, கருத்துப் பிழை இல்லாமல் நடையழகும், அணி அழகும் இருக்குமாறு எழுத வேண்டும். சிறுசிறு தொடர்களாக அமைத்து எழுதுதல் சிறந்தது.

கதைப் பகுதியில் நாடக வடிவில் கேட்கப்படும் வினாவிற்கு, பத்தி பத்தியாக விடையளிக்கக்கூடாது. திறனாய்வு செய்து கதை எழுதுக எனக் கேட்டால் கதைப்பகுதிகளை அப்படியே எழுதி வைக்கக்கூடாது. கற்பனைக் கதையா? நாடக வடிவமா? கதைப் பொருள், சுவைப்பொருள் குன்றாமல் எழுதும் முறையா? கதை மாந்தர் திறனாய்வா? என வினாவினை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப விடை தருதல் வேண்டும்.

பாநலம் பாராட்டுதல் வினாவில் கேட்கப்படும் நயங்களை மட்டும் எழுதினால் போதுமானது.கூடுதலாக மதிப்பெண் பெற பிழை இல்லாமல் எழுதுவது, பகுத்து, பிரித்து எடுத்து, இடுகுறி இட்டு எழுதுவது பத்திகளில் விடையளிப்பது, நீலநிறம், கருமை நிற எழுதுகோலை மட்டும் பயன்படுத்தி எழுதுவது, அடிக்கோடிட்டு காட்டுவது, நிறுத்தற் குறியீடுகளை இட்டு எழுதுவது கால்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் குறியீடுகள், பழமொழி, பாடல்வரிகள், சொல் இடைகள், சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து எழுதுவது சாலச் சிறந்தது.

விடைகளை மனப்பாடம் செய்து அப்படியே எழுதாமல் உடன் தேவையான பகுதிகளில் சொந்த நடையில் பிழையில்லாமலும், புத்தகம் முழுவதும் ஆழ்ந்து படித்தவற்றை வெளிப்படுத்தலும், ஒற்றுப்பிழை, சொற்பிழை, மரபுப் பிழை இல்லாமல் இருத்தலும் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண்ணைப் பெறச் சிறந்த வழியாகும். முயற்சியும், முறையான திட்டமிடலும், பயிற்சியும் இருந்தாலே தமிழ் மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது திண்ணம்.