செவிலியர் பட்டயப்படிப்பு!



அட்மிஷன்

மாணவியருக்கு அரிய வாய்ப்பு!


தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடிமகள்களுமான தகுதியுள்ள மாணவியர்களிடமிருந்து அரசு செவிலியர் பள்ளிகளில் செவிலியர் பட்டயப் படிப்பில் சேருவதற்குத் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: தமிழ்நாடு மாநில மேல்நிலைக் கல்வி குழுமத்தால் நடத்தப்படும் மேல்நிலைப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் தேர்வில் அல்லது அதற்கு இணையான தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். OC/BC/BC(M)/MBC/DNC பிரிவைச் சார்ந்த மாணவிகள் மேல்நிலைத் தேர்வில் கூட்டுமதிப்பெண் 40% க்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். SC/SC(A)/ST பிரிவைச் சார்ந்த மாணவிகள் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

மாணவிகள் தமிழ்மொழியை முதல் மொழிப்பாடமாகஎடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செவிலியர் படிப்பை ஏற்கனவே முடித்த மாணவியர்கள் இதற்கு விண்ணப்பிக்க அனுமதியில்லை. வயதுவரம்பு: விண்ணப்பதாரர் 31.12.2017-ல் குறைந்தபட்சமாக 17 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 35 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: செவிலியர் பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு சென்னை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயமுத்தூர், சேலம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில், வேலூர், தேனி, திருவாரூர், தர்மபுரி, விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், உதகமண்டலம், திருப்பூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய  அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) வழங்கப்படும். விண்ணப்பங்கள் வழங்கப்படும் கடைசி தேதி: 21.10.2017 வரை.

விண்ணப்பம் நேரில் பெற விரும்புவோர் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்/  தலைமை மருத்துவமனை இணை இயக்குநருக்கு விண்ணப்ப மனுவுடன் ரூ.300-க்கான வரைவோலை (Demand Draft) சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கேட்பு வரைவோலை 9.10.2017-க்கு முன் தேதியிட்டதாக இருக்கக்கூடாது. வரைவோலை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் ‘‘செயலாளர், தேர்வுக் குழு , கீழ்ப்பாக்கம், சென்னை - 10’’ என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும். இந்த வரைவோலை சென்னையில் மாற்றத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

எஸ்.சி., எஸ்.சி.(அ), எஸ்.டி. பிரிவைச் சார்ந்த மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்ப மனுவுடன் உண்மை நகல் சான்றொப்பம் செய்யப்பட்ட சாதிச் சான்றிதழ் (நகல்கள்) சமர்ப்பித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தகவல் தொகுப் பேடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை htt:www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிப்பவர்கள் உரிய கட்டணத் தொகை ரூ.300-க்கான கோடிட்ட கேட்பு வரைவோலை (Demand Draft) இணைத்து அனுப்ப வேண்டும்.

ஆனால், எஸ்.சி., எஸ்.சி.(அ) மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவியர்கள் வரைவோலை இணைக்கத் தேவையில்லை. சிறப்புப் பிரிவிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள் மட்டும் தகவல் தொகுப்பேட்டில் இணைப்பில் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டிற்கான படிவத்தினைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பிரிவுகள்:

1. முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள்
2. விளையாட்டு வீரர்கள்
3. முட நீக்கியல் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள்
சிறப்புப் பிரிவின் கீழ் வரும் மாணவிகள் மட்டும் அதற்குரிய சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்து
அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ‘செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010’ என்ற முகவரிக்கு 23.10.2017 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப்பின் தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. தபால் மூலம் அனுப்புவதில் ஏற்படும் தாமதம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. செவிலிய பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிக்கும் காலம் முதல் கலந்தாய்வு முடியும்வரை முழு தகவல்களையும் www.tnhealth.org/www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
 

- திருவரசு