+2தமிழ் முழு மதிப்பெண்வாங்கும் வழிகள்



+பொதுத் தேர்வு டிப்ஸ்

முதல் தாள்


கோடை விடுமுறை முடிந்து இப்போதுதான் பள்ளி திறக்கப்பட்டது போல்தோன்றலாம்… ஆனால் +2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராக வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதை மறந்துவிடக்கூடாது. மீதம் இருக்கக்கூடிய 3 மாதங்கள் கனவு போல் உருண்டோடிவிடும் என்பதைக் கவனத்தில் கொண்டு இப்போதிருந்தே தயாராகுங்கள்.நிச்சயம் அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை அள்ளலாம்.

“முன்பெல்லாம் +2 தமிழ்ப் பாடத்தில் 200க்கு 200 என்பது கனவாக இருந்தது.இப்போது தமிழிலும் சென்டம் பெறும் காலம். திட்டமிட்ட உழைப்பு, படிப்பதில் ஆர்வம், விடை எழுதுவதில் கூடுதல் கவனம் ஆகியவை  இருந்தால் நிச்சயம் எல்லோரும் தமிழில் முழு மதிப்பெண்களை அள்ள முடியும்...’’ என்கிறார் விருத்தாசலம், அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி, முதுகலைத் தமிழாசிரியை கி.ஜெயராணி. அவர் தரும் ஆலோசனைகள்...

* தொடர் பயிற்சியின் மூலம்தான் பிழைகளைக் குறைக்க முடியும்.ஒவ்வொரு விடையையும் வீட்டில் எழுதிப் பார்த்து நீங்களே திருத்திப் பார்க்க வேண்டும்.  ஒற்றுப்பிழைகள், எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகளைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்து  திருத்துவதன் மூலம் சரி செய்துகொள்ள முடியும். சிறு சிறு கவனக்குறைவுகள் உங்கள் சென்டம் கனவைத் தகர்த்துவிடலாம்.எனவே, கவனமுடன் விடைகளை எழுத வேண்டும்.

* நாளொன்றுக்கு 2 மனப்பாடச் செய்யுள்களை எழுதிப் பார்ப்பதையும், 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் 5 இலக்கணக் குறிப்புகளை மனப்பாடம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* நெடு வினாவிற்கான விடைகளை எழுதும்போது குறட்பாக்களையும் மேற்கோள் காட்டினால் முழு மதிப்பெண் கிடைக்கும்.துணைத் தலைப்புகளைக் குறிப்புச்சட்டகமாக அமைத்தால் இன்னும் அழகு சேர்ப்பதாக அமையும்.

* மனப்பாடப் பகுதியில் இடம்பெறும் 20 குறட்பாக்களையும் தொடங்கும் சீர் மற்றும் முடியும் சீர்கொண்டு பயிற்சி செய்தால் ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.

1 மதிப்பெண் வினாக்கள் குறுகிய நேரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருபவை.அதனால், நன்கு உள்வாங்கி பதற்றமின்றிப் பதில் எழுதுங்கள்.இலக்கணக் குறிப்புகள், பொருத்துக ஆகியவற்றிற்கு வினா எழுதி விடை எழுதுங்கள்.கோடிட்ட இடத்தில் இடம்பெற்றிருக்கும் வினாவை முழுவதுமாக எழுதி விடையை அடிக்கோடு இடுங்கள்.

வினாத்தாள் அமைப்பு முறை

பகுதி I சிறு வினாக்கள் (வி.எண் 1-6)

இப்பகுதியில் 6 வினாக்கள் கேட்கப்படும்.4 வினாக்களுக்கு 5 வரிகளுக்கு மிகாமல் விடை எழுதவேண்டும். இதில் வாழ்த்து, தொகை நூல்கள், திருக்குறள், தொடர்நிலைச் செய்யுள், சிற்றிலக்கியங்கள், மறுமலர்ச்சிப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
கட்டாயம் படிக்க வேண்டிய வினாக்கள்:

1. வீரமாமுனிவர் இயற்றிய  நூல்கள் யாவை?
2. கம்பரின் பெருமை சுட்டும் தொடர்கள் யாவை?
3. சிலப்பதிகாரம் கூறும் மூன்று
உண்மைகள் யாவை?
4. தம்பிரான் தோழர் என அழைக்கப்பட்டவர் யார்? காரணம் யாது?
5. தேவார மூவர் யார்?

பகுதி II பெருவினாக்கள் (வி.எண் 7-11)

இப்பகுதியில் 5 வினாக்கள் கேட்கப்படும்.மூன்றுக்கு விடை எழுதவேண்டும்.வாழ்த்துப் பகுதி, தொகை நூல்கள், திருக்குறள், தொடர்நிலைச் செய்யுள் பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
கட்டாயம் படிக்க வேண்டிய வினாக்கள்:

1. வரத நஞ்சையப் பிள்ளை எக்காரணங்களால் தமிழை வாழ்த்துவம் என்று கூறுகிறார்?
2.இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்? ஏன்?
3. பொறையுடைமையின் சிறப்புகளைத் தொகுத்துரைக்கவும்.
4. உண்டுகொல் என்னும் முறையில் கண்ணகி சினந்து கூறியன யாவை?

பகுதி III பெருவினாக்கள் (வி.எண் 12-16)

இப்பகுதியிலும் 5 வினாக்கள் கேட்கப்படும்.அவற்றுள் மூன்றுக்கு விடை எழுதவேண்டும்.சிற்றிலக்கியங்கள், மறுமலர்ச்சிப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் அமையும்.
கட்டாயம் படிக்க வேண்டிய வினாக்கள்

1. பெருமாள் உறை திருவேங்கடப்பதி குறித்துப் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கூறுவன யாவை?
2. ‘தென்கரை நாட்டின் வளம்’ குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பவற்றை எழுதுக.
3. சுவடிச் சாலையில் இருக்க வேண்டிய நூல்கள் யாவை?
4. இராசராச சோழனின் வில், வாள், முரசு, கொடி, குடை குறித்துக் கூறப்பட்டன யாவை?

பகுதி  IV நெடு வினாக்கள் (வி.எண் 17-19)
இதில் 3 வினாக்கள் இடம்பெறும்.ஒன்றுக்கு மட்டும் விடை எழுதினால் போதும்.திருக்குறள், தொடர்நிலைச் செய்யுள், மறுமலர்ச்சிப் பாடல்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் அமையும்.திருக்குறளிலிருந்து கட்டாயம் ஒரு வினா இடம்பெறுவதால் நான்கு அதிகாரங்களுக்குரிய நெடு வினாக்
களையும் முழுமையாகப் படிக்கவேண்டும்.

பகுதி V செய்யுள் வினா - விடை

(வி.எண் 20, 21)
இதில் 2 வினாக்கள் அமையும்.ஒன்றுக்கு மட்டும் விடை எழுதவேண்டும்.தொகை நூல்கள், சிற்றிலக்கியங்கள், வழிபாட்டுப் பாடல்கள் ஆகிய பகுதிகளில் இருந்தும் வினாக்கள் அமையும்.

பகுதி  VI  மனப்பாடப் பகுதி

(வி.எண் 22, 23)
மனப்பாடப் பாடலை அடி பிறழாமல் எழுதி, அதன் பா வகையையும் குறித்தல் வேண்டும்.பாடப்புத்தகத்தில் உள்ள 10 மனப்பாடப் பாடல்களையும் கவனமாக மனனம் செய்து எழுதிப் பாருங்கள். வினா எண்  23ல் தொடங்கும் குறள் ஒன்று, முடியும் குறள் ஒன்று இடம்பெற்றிருக்கும்.

பகுதி  VII  (வி.எண் 24)

இதில் ஆறு சொற்கள் இடம்பெறும்.அவற்றுள், இரண்டு சொற்களுக்கு மட்டும் உறுப்பிலக்கணம் எழுத வேண்டும். பகுபத
 உறுப்பிலக்கணம் குறித்து நினைவில் கொள்ள வேண்டிய காலம் காட்டும் இடைநிலைகள், விகுதிகள், சந்தியாக வரும் எழுத்துகள், சாரியைகள் ஆகியவற்றை +1 தமிழ்ப் புத்தகம் பக்கம் 21ல் படித்துப் பயிற்சி பெற்றுக்கொள்ளவும்.

இலக்கணக் குறிப்பு (வி.எண்25)

கேட்கப்பட்ட 6 சொற்களில் எவையேனும் 3 சொற்களுக்கு விடையெழுத வேண்டும்.பண்புத்தொகை, வினைத்தொகை, எண்ணும்மை, உருவகம், அடுக்குத்தொடர், உரிச்சொற்றொடர், அளபெடை முற்றும்மை ஆகியவற்றைத் தெளிவாக அறிந்துகொண்டால் போதுமானது.

புணர்ச்சி விதி (வி.எண்26)

இதில் 6 சொற்கள் இடம்பெறும்.2 சொற்களுக்கு மட்டும் பிரித்துப் புணர்ச்சி விதி எழுத வேண்டும். இப்பகுதியில், ‘ஈறுபோதல்
மற்றும் இனமிகல்’, ‘இயல்பினும் விதியினும்  நின்ற உயிர்முன் கசதப மிகும்’, ‘உயிர்வரின் உக்குறள்  மெய்விட்டு ஓடும்’, ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’, ‘தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’, ‘பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்’ஆகிய விதிகளில் பயிற்சி பெற்றாலே போதுமானதாக இருக்கும்.

சான்று தந்து விளக்குக (வி.எண்27)

இப்பகுதியில் திணை, துறை இடம்பெறும்.இவ்வினாக்கள் ‘தொகை நூல்கள்’ பகுதியிலிருந்து அமையும்.அகப்பொருளிலிருந்து ஒரு வினாவும், புறப்பொருளிலிருந்து ஒரு வினாவும் கட்டாயம் இடம்பெறும்.புறப்பொருளிலிருந்து இடம்பெறும் பொதுவியல் திணை நெய்தல் திணை, பாலைத்திணை மற்றும் பொருண்மொழிக் காஞ்சித்துறை ஆகிய வினாக்களை அறிந்திருக்க வேண்டும்.

அணி இலக்கணம் (வி.எண்28)

உவமையணி, எடுத்துக்காட்டு உவமையணி, சொற்பொருள் பின்வருநிலையணி, தற்குறிப்பேற்ற அணி ஆகிய அணிகள் கட்டாயம் கேட்கப்படும்.

பகுதி  VIII  பொருத்துக (வி.எண் 29-32)

பயிற்சி வினாக்கள் மட்டுமன்றி ஐந்திணைக்குரிய உரிப்பொருள்கள் மற்றும் சிறுபொழுதுகள், நூல்கள் & ஆசிரியர் பெயர்கள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ளுதல் நலம்.

பகுதி IX ஒரு மதிப்பெண் வினாக்கள் (வி.எண்33-48)

இப்பகுதியில், 16 ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும்.பயிற்சி வினாக்களில் இடம்பெற்ற வினாக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு செய்யுளின் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, ஆகியவற்றிலிருந்தும் வினாக்கள் அமையும்.இலக்கணக் குறிப்பு, பிரித்து எழுதுக போன்ற வினாக்களும் இடம்பெறும்.

பகுதி X கோடிட்ட இடம் (வி.எண்49-50)

பாடப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் நாற்பது திருக்குறள்களையும் பிழையின்றி அறிந்துகொண்டால் நிச்சயம் நான்கு மதிப்பெண்களும் உங்கள் வசம்.திட்டமிட்டுப் படியுங்கள் முழு மதிப்பெண் பெறுவது சாத்தியமாகும்.

இரண்டாம் தாள்

‘‘+2 தமிழ் இரண்டாம் தாள் எளிமையானது. பாடத்தின் உள்ளடக்கத்தை நன்கு உணர்ந்துகொண்டு, அடித்தல், திருத்தல், பிழைகள் இல்லாமல், நிதானமாக, அழகாக எழுதினால் நிச்சயம் இதிலும் முழு மதிப்பெண்களைப் பெறமுடியும்...’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் கி.ஜெயராணி.  அவர் தரும் ஆலோசனைகள்...

* பெரு வினாக்கள் மற்றும் நெடு வினாக்களுக்கான விடை எழுதும்போது பொருத்தமான உள் தலைப்புகள் இட்டு எழுதினால் முழு மதிப்பெண்களையும் பெறமுடியும்.துணைப்பாடப் பகுதியில் இடம்பெறும் உள் தலைப்புகளைக் குறிப்புச் சட்டகம் அமைத்து எழுத வேண்டும்.

* துணைப்பாடத்தைப் பொறுத்தவரை வினாவிற்கு ஏற்ற விடையை மட்டுமே எழுத வேண்டும்.உதாரணத்திற்கு, கதையில் இடம்பெறும் ஒரு நிகழ்ச்சியை நாடக வடிவில் எழுதக் கேட்கும்போது கதைச் சுருக்கத்தை எழுதுவது தவறு.நாடக வடிவில் மட்டுமே எழுத வேண்டும்.

* ‘இலக்கிய நயம் பாராட்டல்’ பகுதியில் இடம்பெறும் பாடலை ஒரு முறைக்கு இரு
முறை படித்து உணர்ந்த பிறகே விடை எழுதத் தொடங்க வேண்டும்.தமிழாக்கத்தைப்பொறுத்தவரை தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தெரிந்து செய்யலாம்.

வினாத்தாள் அடிப்படையில் சில ஆலோசனைகள்...

பகுதி  I பெரு வினாக்கள் (வி.எண் 1-5)

இப்பகுதியில் 5 வினாக்கள் இடம்பெறும்.அவற்றுள், 3 வினாக்களுக்கு மட்டும் 10 வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க வேண்டும். ‘உயர்தனிச் செம்மொழி’, ‘சமரசம்’, ‘கவிதை’,‘வாழ்க்கை’ ஆகிய நான்கு பாடங்களிலிருந்து தலா 1 வினா இடம்பெறும். ஏதேனும் ஒரு பாடத்திலிருந்து மட்டும் 2 வினாக்கள் அமையும்.

 பகுதி  II பெரு வினாக்கள் (வி.எண் 6-10)

இதிலும் 5 வினாக்கள் கேட்கப்படும்.3 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். இப்பகுதியில், ‘ஆவுந்தமிழரும்’, ‘நீதி நூல்களில் இலக்கிய நயம்’, ‘மனிதர் வாழ்க’, ‘தமிழ்நாட்டுக் கலைச் செல்வங்கள்’ ஆகிய 4 பாடங்களிலிருந்து வினாக்கள் அமையும்.

பகுதி III நெடு வினாக்கள் (வி.எண் 11, 12)
இதில் 2 வினாக்கள் கேட்கப்படும்.ஒன்றுக்கு மட்டும் 20 வரிகளுக்கு மிகாமல் விடையெழுத வேண்டும்.முதல் 4 பாடங்களில் இருந்து ஒரு வினாவும், அடுத்த 4 பாடங்களில் இருந்து ஒரு வினாவும் இடம்பெறும்.

பகுதி  IV துணைப்பாடம் (வி.எண்13)

இப்பகுதியில் நான்கில் ஒரு கேள்விக்குப் பதில் தரவேண்டும்.கருப்பொருளும் சுவையும் குன்றாமல் எழுதுமாறு 2 சிறுகதைகள் கேட்கப்படும்.

இப்பகுதியில், (1) இரண்டு பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். (2) கதையின் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் கதையினைச் சுருக்கி வரைதல் அவசியம். (3) பத்திகளை அமைத்து  உள்தலைப்பிட்டு  கதை மாந்தர்களின் பெயர்களைச் சரியாகக் குறித்தல் வேண்டும். (கதையின் ஆசிரியர் பெயர், முன்னுரை, முடிவுரைக்கு இரண்டு மதிப்பெண்களும் கதைச்சுருக்கத்திற்கு எட்டு மதிப்பெண்களும் வழங்கப்பெறும்.)

  (அல்லது)
இப்பகுதியில், கதையில் இடம்பெறும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நாடக வடிவில் அமைக்குமாறு 2 கதைகள் கேட்கப்படும்.தேர்ந்தெடுக்கும் சிறுகதையினைக் கண்டிப்பாக நாடக வடிவில்தான் (உரையாடல்) எழுத வேண்டும் (நாடக அமைப்பிற்கு 3 மதிப்பெண்களும், நாடகப் பகுதிக்கு ஏழு மதிப்பெண்களும் வழங்கப்பெறும்). இப்பகுதியில் கண்டிப்பாக ஆசிரியர் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

திறனாய்வு (வி.எண் 14)

இப்பகுதியில் நான்கில் ஒரு கேள்விக்குப் பதில் தரவேண்டும்.இதில் மனம் கவர்ந்த கதை மாந்தர் குறித்துத் திறனாய்வு செய்யும் முறையில் இரண்டு வினாக்கள் அமையும். (மனம் கவர்ந்த கதை மாந்தர், முன்னுரை, முடிவுரைக்கு 3 மதிப்பெண்களும், கதைச் சுருக்கத்திற்கு 2 மதிப்பெண்களும், கதை மாந்தர் பண்புக்கூறுகளை உட்தலைப்பிட்டு விளக்குவதற்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்படும்)
(அல்லது)
இப்பகுதியில் சொந்தக் கற்பனையில் சிறுகதை எழுதுவது போல இரண்டு வினாக்கள் அமையும். (முன்னுரை, கதைத் தொடக்கத்திற்கு 3 மதிப்பெண்களும், கருப்பொருள் சார்ந்த வளர்ச்சிக்கு 3 மதிப்பெண்களும், கற்பனைத் திறனுக்கு 4 மதிப்பெண்களும், கதை முடிவிற்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். கதைச்சுருக்கம் ஆசிரியர் குறிப்பாகவும் கதை மாந்தர் திறனாய்வு மாணவர் கூற்றாகவும் அமைய வேண்டும்)

பகுதி V இலக்கிய நயம் பாராட்டல்

(வி.எண் 15)

வினா எண் 15ல் இடம்பெறும் பாடல் பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வரால் எழுதப்பட்ட பாடல்களாகத்தான் இருக்கும்.ஆசிரியர் குறிப்பு கண்டிப்பாக எழுத வேண்டும். பாடலைக் கவனமாகப் படித்துணர்ந்து, அதில் அமைந்துள்ள மையக்கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து அதில் அமைந்துள்ள எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம், கற்பனை ஆகியவற்றுள் பொருத்தமானவற்றைச் சுட்டிக்காட்டி எழுத வேண்டும்.

பகுதி VI தமிழாக்கம் (வினா எண் 16-21)

இப்பகுதியில், 6 வினாக்கள் இடம் பெறும்.மூன்றுக்கு மட்டும் தமிழாக்கம் எழுத வேண்டும்.
பகுதி VII பழமொழி  வாழ்வியல் நிகழ்வு (வி.எண் 22) இதில் மூன்று பழமொழிகள் இடம்பெறும்.ஒன்றுக்கு மட்டும் வாழ்க்கை நிகழ்ச்சி வழியாகப் பத்து வரிகளுக்கு மிகாமல் விளக்கி எழுத வேண்டும்.நிகழ்ச்சி விளக்கமின்றிக் கருத்து மட்டும் விளக்கப்பட்டிருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.அதே சமயம் நீதிநெறிக் கதைகளை இப்பழமொழி விளக்கத்திற்கு எடுத்தாளக்கூடாது.

  (அல்லது)

இப்பகுதியில் இரண்டு வினாக்கள் இடம்பெறும்.ஒன்றனுக்கு மட்டும் எட்டு முதல் பத்து வரிகளுக்குள் பிறமொழிக் கலப்பின்றி மரபுக் கவிதையோ அல்லது புதுக்கவிதையோ எழுத வேண்டும்.இது உங்கள் சொந்தப் படைப்பாக இருப்பது அவசியம்.

பகுதி VIII மொழிப்பயிற்சி (வி.எண் 23-32)

இப்பகுதியில் 10 வினாக்கள் இடம்பெறும்.ஒவ்வொரு வினாவிற்குக் கீழும் அடைப்புக்குறிக்குள் குறிப்பு இடம் பெற்றிருக்கும்.அக்குறிப்பின் உதவியுடன் அனைத்து வினாக்களுக்கும் கவனமுடன் விடையளிக்க வேண்டும்.மாற்றம் செய்த எழுத்து அல்லது சொல்லுக்கு அடியில் அடிக்கோடு இடவேண்டியது அவசியம்.

பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வினாவிற்குப் பொருள் குறிப்பிடுவதோடு அதன் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் வாக்கியத்தில் அமைத்து எழுதினால்தான் முழு மதிப்பெண் பெறமுடியும். இப்பகுதியில் இடம்பெறும் வினாக்களில் பயிற்சி பெறக் கடந்த ஆண்டு வினாத்தாள்களைப் புரட்டிப் பாருங்கள்.பதற்றத்தைத் தவிர்த்து, ஆர்வத்தோடு திட்டமிட்டுத் தேர்வுக்குத் தயாராகுங்கள். தமிழ் உங்களை உச்சத்தில் ஏற்றும்!