மாதம் ரூ.30,000 வருமானம் தரும் இடியாப்ப சேவை தயாரிப்பு!



சுயதொழில்

தமிழ்நாட்டு மக்கள் எளிதில் செய்து உண்ணும் உணவு இடியாப்ப சேவை. இது உடனடியாக உட்கொள்ளும் உணவு. சராசரியாக தோசை, இட்லி, இடியாப்பம் மற்றும் இடியாப்ப சேவை அனைத்தும் நமது தமிழ்நாட்டு மக்களின் காலை உணவாக உள்ளது.தோசை மற்றும் இட்லி தயார் செய்வது எளிது.

எனவே, அனைத்து வீடுகளிலும் எளிதாக தயார் செய்துகொள்ள முடியும். ஆனாலும்கூட இயந்திரகதியாகிப்போன நகர வாழ்க்கையில் இட்லி தோசையைக்கூட ஓட்டல்களிலும் கையேந்திபவன்களிலும் வாங்கி சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளனர். நிைலமை இப்படி இருக்க ஆரோக்கிய உணவான இடியாப்ப சேவை தயார்செய்வது சற்று கடினமானது என்பதால், இந்த உணவை வெளியில் இருந்து வாங்கி அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்த இடியாப்ப சேவை என்பது புழுங்கல் அரிசியில் இருந்து செய்வதாகும். இடியாப்ப சேவை என்பது வெறும் அரிசி மட்டும் உபயோகப்படுத்தி செய்யும் உணவு. அதிலும் புழுங்கல் அரிசி என்பதால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவித ரசாயன பொருட்களும் சேர்ப்பதில்லை என்பது சிறப்பு.

தோசையை ஒரு மணி நேரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இட்லியை இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இடியாப்ப சேவை ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு நாள் வரை கூட வைத்திருந்து சாப்பிடலாம்.

இடியாப்ப சேவையை தேங்காய்ப் பால் மற்றும் குழம்புடன் அப்படியே சாப்பிடலாம் அல்லது இதை மறுபடியும் எலுமிச்சை, வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து உணவாகத் தயாரித்து ருசியாக சாப்பிடலாம். இடியாப்ப சேவையினை தயார் செய்து காலை மற்றும் மாலையில் குடியிருப்புப் பகுதிகளில் விற்பனை செய்யலாம்.

சிறு சிற்றுண்டிக் கடைகள், பால் சப்ளை செய்யும் இடங்களில் காலை ஆறு மணிக்கே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். கோவை, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் இடியாப்ப சேவை மிகவும் பிரபலம். அதிகாலை ஏழு மணிக்கே அனைத்தும் விற்பனை ஆகிவிடும். தேவைக்கேற்ப மட்டும் தயாரித்து அனுப்ப வேண்டும். சுத்தமாகவும் தரமாகவும் தயாரிப்பதாலும் அனைத்து வயதினரும் உண்ணும் உணவு என்பதாலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இப்போது இடியாப்ப சேவை மக்களிடம் மிகவும் பிரபலமாகி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்ற உணவுப்பொருளாக உள்ளது.

இதனை 350 கிராம் மற்றும் 500 கிராம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.வாங்குபவர்களின் வேலைப்பளுவை குறைப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தொழிலுக்கான சாத்தியக்கூறுகள்

*அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு.
*மூலப்பொருள் தரமான அரிசி மட்டுமே.
*தரக் கட்டுப்பாடு பற்றிய பயம் தேவையில்லை.
*இயந்திரங்களினால் குறைந்த ஆட்களைக் கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.
*இதில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படுவதில்லை.
*நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
*அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட அறிக்கை:
முதலீடு (ரூபாயில்)
இடம்    : வாடகை
கட்டடம்    : வாடகை 
இயந்திரங்கள்
மற்றும் உபகரணங்கள்    : 1.52லட்சம்
மின்சாரம்-நிறுவும்
செலவு     :    0.15லட்சம்
இதர செலவுகள்    :    0.20லட்சம்
நடைமுறை மூலதனம்    :    0.60லட்சம்
மொத்த முதலீடு    :    2.50லட்சம்
இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று தொழில் செய்வதற்கான நடைமுறை.
மொத்த திட்ட மதிப்பீடு     :     2.50லட்சம்
நமது பங்கு 5%     :    0.13லட்சம்
அரசு மானியம் 25%    :    0.62லட்சம்
வங்கி கடன்      :     1.76லட்சம்

தேவையான இயந்திரங்கள்:
Wet Grinding Machine
(10kg Capacity)    -     Rs.40,000/-
Stainless Steel Stream
Cooking Stow    -     Rs.15,000/-
IdiyappanSevai
Extruding Machine     -    Rs.62,000/-
Weighing Digital Scale     -     Rs.06,000/-
Polythene Cover Sealer
Machine (2Nos)    -     Rs.05,000/-
Packing Table    -    Rs.17,000/-
Total    -     Rs.1,45,000/-
Tax 5%    -    Rs.7,250/-
Sub Total    -     Rs.1,52,250/-
Say Rs.1.52 Lakhs
மூலப் பொருட்கள்:
இந்த இடியாப்ப சேவை தயார் செய்ய அரிசி மட்டுமே மூலப்பொருளாக பயன்படுத்துகிறோம்.தயாரிப்பு முறை: இடியாப்ப சேவை தயாரிக்க என தேர்ந்தெடுக்கப்பட்ட புழுங்கல் அரிசி குறைந்த விலையில் மொத்தமாக வாங்கலாம். இந்த அரிசியை மாற்றக் கூடாது. எப்போதும் ஒரே தரத்திலான அரிசியைப் பயன்படுத்துவது நல்லது. இடியாப்ப சேவை செய்ய விலையுயர்ந்த அரிசி தேவையில்லை.

இந்தப் புழுங்கல் அரிசியைக் கழுவும் இயந்திரத்தில் போட்டு நன்றாக கழுவவும். பிறகு வெட் கிரைண்டர் இயந்திரத்தில் தேவையான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை நீராவியில் வேக வைக்கும் இயந்திரத்தில் பரவலாக வேக வைக்கவும் (இட்லி வேகவைப்பது போல) பதமாக வெந்தபின் நன்றாக வெந்துள்ளதா என சோதனை செய்யவும். வெந்த மாவு பார்களை வெளியில் எடுத்து சிறு, சிறு துண்டுகளாக்கவும்.

இந்தத் துண்டுகளை இடியாப்ப சேவை உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் நிரப்பி இயக்கினால் ஹைட்ராலிக் முறையில் இடியாப்ப சேவையாக பிரியும். இப்போது இடியாப்ப சேவை ரெடி. இதை உணவு தரம் உள்ள பாலிதீன் பைகளில் 350 கிராம் மற்றும் 500 கிராம் என எடை போட்டு உற்பத்தி தேதி மற்றும் விலையை இதில் குறித்து சந்தைக்கு அனுப்பவும். இதை கடைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் உடனடியாக வாங்கிச் செல்வார்கள்.
இடியாப்ப சேவை உற்பத்தி:

*இந்த இடியாப்ப சேவை தரமான அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.28 முதல் ரூ.32  வரை தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது. நாம் மொத்தமாக அரிசி ஆலையில் ரூ.32 விலை உள்ள அரிசியை ஒரு கிலோ ரூ.30-க்கு வாங்க முடியும் என வைத்துக்கொள்வோம்.                                        
*மாவு பேக்கிங் செய்யும் பாலிதீன் பை ஒரு கிலோ ரூ.160 என விற்கப்படுகிறது. ஒரு கிலோவில் 200 பைகள் அடங்கும். ஒரு பையின் விலை ரூ.0.80 பைசா to ரூ.1.00. நாம் ஒரு ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

*ஒரு கிலோ அரிசியில் 1.800 கிலோ கிராம் இடியாப்ப சேவை கிடைக்கும்.

*ஒரு பாக்கெட்டில் 350 கிராம் அளவில் வைத்து விற்பனை செய்யலாம். 1.800 கிலோ கிராம் = 5.14 பாக்கெட்டுகள்

*ஒரு நாளைக்கு 80 கிலோ வரை உற்பத்தி செய்யலாம்.

80 X 5.14 = 411 பாக்கெட்டுகள்
நாம் ஒரு நாளைக்கு 410 பாக்கெட்டுகள் என வைத்துக்கொள்வோம்.
வருமானம் விவரம்:
ஒரு பாக்கெட் விலை ரூ.15க்கு மொத்த விலைக்கு விற்கலாம். சில்லறை விலையில் ரூ.18 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 410 பாக்கெட் X ரூ.15 = ரூ.6150
ஒரு நாளைக்கு வருமானம் ரூ.6,000
ஒரு மாதத்திற்கு ரூ.1,50,000
வருமானம் கிடைக்கும்.
மூலப்பொருட்கள்:
அரிசி ஒரு நாளைக்கு 80 கிலோ X ரூ.30
= ரூ.2400/-
ஒரு மாதத்திற்கு ரூ.60,000/-
 
பேக்கிங் மெட்டீரியல்:
ஒரு நாளைக்கு 400 பாக்கெட்டுகள்
ஒரு மாதத்திற்கு 400 X 25 = 10,000 பாக்கெட்டுகள்
ஒரு பாக்கெட் ரூ.1 X 10,000 = ரூ.10,000
கேஸ் சிலிண்டர்:
ஒரு சிலிண்டர் 2 வாரத்திற்கு பயன்
படுத்தலாம். ஒரு சிலிண்டர் விலை ரூ.1500. ஒரு மாதத்திற்கு ரூ.3000/-.
வேலையாட்கள் சம்பளம்:
மேலாளர் 1    : ரூ. 8,000
பணியாளர் 2 x 5000    : ரூ.10,000
விற்பனையாளர்    : ரூ. 6,000
மொத்த சம்பளம்    : ரூ.24,000
மொத்த செலவு:
மூலப்பொருட்கள்    :    ரூ.60,000
பேக்கிங் மெட்டீரியல்     :    ரூ.10,000
மின்சாரம்       :    ரூ. 6,000
கேஸ் சிலிண்டர்    :     ரூ. 3,000
சம்பளம்        :    ரூ.24,000
வாடகை     :    ரூ. 3,000
விற்பனை செலவு      :    ரூ. 5,000
மேலாண்மை செலவு    :    ரூ. 3,000
இயந்திர தேய்மானம் 15%    :    ரூ. 2,300
கடன் வட்டி    :    ரூ. 1,830
கடன் தவணை
(60 தவணை)    :    ரூ.3,000
மொத்தம்    :    ரூ.1,21,130
மொத்த செலவு ரூ.1,20,000 என வைத்துக்கொள்வோம்
லாபம் விவரம்:
மொத்த வரவு    :    ரூ.1,50,000
மொத்த செலவு     :    ரூ.1,20,000
லாபம்    :    ரூ.  30,000
இப்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் புட்டு, இடியாப்பம் விற்பனை அமோகமாக உள்ளது. குறைந்த விலையில் தரமான உணவாக உள்ளதால் பலரும் விரும்பி வாங்கும் ஆரோக்கிய உணவாக உள்ள இடியாப்ப சேவை தயார் செய்து விற்பனை செய்ய நினைப்பவர்கள் களத்தில் இறங்கலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்