உறவுகள் பிரிவதும் இணைவதும் சொற்களால்தான்!



உளவியல் தொடர் 29

உடல்... மனம்... ஈகோ!


நான் அறிவாளி என்று எனக்குத் தெரியும். ஏனெனில் எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும்- சாக்ரடீஸ்
- ஈகோ மொழி

ஓர் உடல் அதனுள்ளிருக்கும் உயிர். அந்த உயிரின் வெளிப்பாடான மனம், மனமும் உடலும் கலந்த திரட்சியாக மனிதன். மனிதனின் உணர்ச்சியிலிருந்து நிறைந்து உருவாகி வெளிப்படுகிறது ஆணவம் எனும் ஈகோ. ‘மனிதன்’ என்று உருவகத்தில் அகங்காரமாகக் குடிகொண்டிருக்கும் பிம்பத்தினுள் ’உயிர்’ என்ற உண்மையை உணரவும், அகங்காரத்தின் நாக்குகள் வளர்வதைத் தடுக்கும் வல்லமையைப் பெற ஒரு வழி இருக்கிறது.

அதை யாசகம் என்று குறிப்பிடுகிறார்கள். இன்று தனி மனிதன் தொடங்கி, திரண்ட குடும்பங்களையும், ஒட்டுமொத்த சமூகத்தையும் ‘ஈகோ’ என்ற பெயரில் ஆட்டுவிக்கும் சக்தி. தனி மனித மனதினின்றும் தொடங்கினாலும், அந்த சக்தியை வளர விடாமல் செய்யவும், சாதக மான முறையில் மாற்றவும் கூடிய யுக்தியை யாசகத்தின் வாயிலாகப் பெறலாம் என்பதே உளவியலாளர்களின் கூற்றாக இருக்கிறது.

  யாசகம் என்பதைக் கேட்க சங்கடமாக இருக்கலாம். ஆனால், யதார்த்த நிஜம் அதனுள்தான் அடங்கி இருக்கிறது. அதை ‘தரும் கை…’,‘பெறும் கை…’ என்று குறிப்பிடுகிறார்கள். யோசித்துப் பார்த்தால் எதையும் யாசகமாய்ப் பெறும்போது, (கோயில்களில் அன்னதானம் வாங்குவது) மனதில் ஒருபோதும் கர்வம் எட்டிப்பார்ப்பதே இல்லை.

அடுத்தவரிடமிருந்து யாசித்துப் பெறும் தருணத்தில்தான் மனம் முதலில் தன்னை உணரத் தொடங்குகிறது. அந்த உணர்தல், எத்தனை பெரிய மனிதர்களையும் அகங்காரமின்றி இருக்க வைக்கிறது! மிக முக்கியமாக, யாசகம் பெறும் கணங்களில்தான் சகமனிதர்களின் மனங்களை முழுவதுமாக  உணரத் தொடங்குகிறது!

ஈகோ ஒரு ருசியைப் போன்றது. அதை மனம் அனுபவித்து சுவைக்க ஏங்கிக் கொண்டே இருக்கிறது. ‘நான் பெரியவன்’ என்ற தனி மனித ஈகோவின் எழுச்சியாலும், வெளிப்பாட்டாலும்தான் பல குடும்பங்களும், சமூகமும் அழிகிறது. உறவுகள் கசந்துபோகின்றன.

மனிதர்களின் பழக்கவழக்கத்தால், உறவுகளில் கசப்பு ஏற்படாமல் இருக்க, ஏற்பட்ட கசப்புகள் இனிக்க ஈகோதான் கை கொடுத்து நிற்கிறது. ஆத்திரம் ததும்ப உணர்ச்சி வேகத்தில் சொற்களைக்கொண்டு வாள்வீசும் ஈகோதான் நிதானமாக மென் உணர்ச்சியோடு சூழல் அறிந்து சொற்களால் மருந்து போடவும் செய்கிறது (என்னை மன்னிச்சிடு). உலகில் பல உறவுகளும், குடும்பங்களும் பிரிந்ததும் சொற்களால்தான்.

இணைந்ததும் சொற்களால்தான்.இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஈகோவின் துணைகொண்டு காயத்திற்கு மருந்து போட முற்படும்போது, துணைக்கு வரும் ஈகோவைத் திறம்பட நிர்வகிக்க வேண்டும். தவறினால் அது இன்னொரு கசப்பாக மாறிவிடும் சாத்தியம் அதிகம்.

ஈகோவை நிர்வாக ரீதியாகக் கையாளும்போது, ஒரு கருவியை பயன்படுத்தும் எண்ணம் இருக்க வேண்டுமே தவிர, அதை ஓர் உணர்ச்சி பாவத்துடன் அணுகவேகூடாது. ஒருவருடன் மனமிறங்கி பேசச் செல்லும்போது, ‘இப்ப நல்லா அசத்தலா பேசி ஆளை மடக்கறேன் பாரு’ என்று ஆவேசத்துடன் அணுகவே கூடாது.

அப்படிச் செய்வது வெற்றி-தோல்வி நிலையாக மாறிவிடும். அது ஒரு வெறியுடன் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்கும் தள்ளிவிடும்.  மேலும் தோல்வி கிடைக்கக்கூடாது என்ற பயத்தையும் ஏற்படுத்தி, படபடப்பாக்கி வேறு விதமான தவறுகளைச் செய்ய வைத்துவிடும்.

ஈகோவைத் திறம்பட நிர்வகிக்கும்போது, குறிப்பாக உறவுகளோடு பழகும்போது, ஈகோ அடிப்படை நிலையில்/நடுநிலையில் (Base level/Neutral level) இருப்பதே பலனளிக்கக்கூடியது.ஈகோவை நடுநிலையுடன் வைத்திருப்பது என்றால் என்னவென்று பார்ப்போம். ஒரு பேருந்தில் பயணிக்கையில், அறிமுகமில்லாத யாரோ இருவர் சண்டையிட்டுக்கொள்வதைப் பார்க்கும்போது, எதுவுமே நடக்காதது போல், ஒரு பார்வையாளராய், பொது நியாயத்துடன் கவனிப்போம். யாரும் அழைக்காதவரை,  மனித உரிமைகள் மீறப்படாதவரை விலகியே இருப்போம்.

அதுவே அவர்களுக்குள் மத்தியஸ்தம் (பஞ்சாயத்து) செய்ய வேண்டிய சூழல் வரும்போது, சண்டையின் தன்மை அறிந்து, உள் நியாயம் உணர்ந்து பேசுவோம். காரணம், அந்த இடத்தில் நாம் வேறு, சண்டைபுரிந்தவர்கள் வேறு. நமக்கும் அவர்களுக்கும் எந்தவிதமான உணர்வுத் தொடர்பும் மனதில் வைத்திருக்காமல் இருப்பதே ஈகோ நடுநலை.

அதுவே குடும்பத்திற்குள் இரண்டு மகன்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது, விலக்கிவிடுங்கள் என்று யாரும் சொல்லாவிட்டாலும், அவர்களுக்கு இடையில் நுழைந்து உணர்ச்சி வேகத்துடன் முதலில் பெரியவனை விலக்கி (தவறு சிறியவன் மீது இருந்தாலும்) ‘எப்பப் பார்த்தாலும் ரவுடிமாதிரி அடிச்சுகிட்டு’ என்று ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வோம். காரணம், இது பெரியவன் மீது கொண்டிருந்த ஒட்டுமொத்த எண்ணத்தின் திரட்சி.

இந்த உணர்ச்சி கலந்த திரண்ட கருத்தின் வெளிப்பாடுதான் உறவுகளைச் சிதைக்கிறது. பெரிய பையன் என்றோ செய்த தவறை, அவனை அடக்கும் தருணத்தில் சுட்டிக்காட்டுவது அந்தச் சூழலில் அவனை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்திற்காகத்தான். நடுநிலை தவறிய அந்த ஈகோவின் அதிர்வுதான் உறவுகளுக்குள் விரிசல் வேர்விட காரணமாகிறது.

‘முதல்ல என்ன நடந்துது சொல்லுங்க’ என்பதுதானே நடுநிலையாக இருந்திருக்கக் கூடும்.உறவுகளோடு பழகும்போது நடுநிலை மனதுடன் இருக்கும்போதுதான் இருதரப்பு/எதிர்தரப்பு நியாயங்களைக் கவனமாக கேட்க முடியும், புரிந்துகொள்ள முடியும்.

அதுதான் சூழலை உறவுக்கு சாதகமாக மாற்றித்தரும். வெற்றி/தோல்வி மனநிலையோடு அணுகும்போது, தோற்கக்கூடாது (எப்படியாவது அவளை சம்மதிக்க வைக்கறேன் பாரு) என்ற மனநிலை, பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும். அதுவே சூழலின் தன்மையையும் எதிர்தரப்பு நியாயத்தையும் கேட்க விடாமல் செய்துவிடும்.

உறவுகளில் உணர்ச்சிப் பேரழிவுகள் ஏற்படாதிருக்க நடுநிலை மனதுடனான ஈகோதான் பாதுகாப்பான பகுதி. ஈகோ நிர்வாகத்தில் சக மனிதர்களை திறம்பட புரிந்து கொள்வதுதான் கருத்து மோதல் ஏற்படாத வண்ணம் செய்கிறது. திறம்படப் புரிந்துகொள்ளுதல் என்பது சிறிய வாக்கியம். ஆனால், அதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தும் வல்லமை வேண்டுமல்லவா?நடுநிலை ஈகோவைக் கொண்டு மனிதர்களைத் திறம்படப் புரிந்துகொள்வது எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்…

குரு சிஷ்யன் கதை

பலவீனமான செயல்!

குருவும் சிஷ்யனும் ஊருக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே வந்த ஒரு முரடன் மிகுந்த கோபத்துடன் குருவைப் பார்த்து எச்சிலைத் துப்பினான். குரு எதுவும் நடக்காதது போல், ‘பலவீனமான செயல்’ என்றபடி மேல்துண்டால் துடைத்துக்கொண்டு, “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா நண்பா....?” என்றார்.

குரு கோபப்படாமல் நடந்துகொண்ட செயலைக் கண்டு, முரடன் விக்கித்து நின்றான். சிஷ்யன் மிகுந்த ஆவேசத்துடன் முரடனைப் பார்த்தான். அதைக் கவனித்த குரு, “பொறுமையாய் இரு. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். இவரிடம் வார்த்தைகள் இல்லாததால் இப்படி ஒரு செயலைச் செய்துவிட்டார். இவர் வார்த்தை களின் பலவீனம் கொண்டவராக இருக்கிறார். வார்த்தைகள் வராததற்கு  இவர் என்ன செய்யமுடியும்..?” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

குருவின் சொற்களையும், நடவடிக்கையையும் பார்த்த முரடன் பேசாமல் நகர்ந்தான். அன்று இரவு அவனுக்கு அவன் செயல் உறுத்திகொண்டே இருந்தது. குற்றஉணர்வால் தூக்கமேவரவில்லை.மறுநாள் விடிந்ததும், முதல் வேலையாகக் குருவைத் தேடிக்கொண்டு ஆசிரமம் வந்து, அவரது காலில் விழுந்து அழுதான்.

சிஷ்யன் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தான். அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. குருவிடமிருந்து முரடனை விலக்கிவிட முயல்கையில், குரு அமைதியாகச் சொன்னார், “இரு, இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். இவரிடம் வார்த்தைகள் இல்லாததால் இப்படி ஒரு செயலைச் செய்துவிட்டார் அவ்வளவுதான்!” என்றபடி முரடனின் தோளைத் தொட்டு நிமிர்த்தி, “எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் போய் வா நண்பா” என்றார்.

முரடன் நகராமல் “ஐயா, நான் நேற்று எச்சில் துப்பியபோது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட என்னைத் திட்டிப் பேசவில்லை....?” என்றான் தலையைக் குனிந்தபடி.“நான் ஏன் நண்பா உன்னைத் திட்டிப் பேச வேண்டும். மேலும், நீ எண்ணியது போல் நான் உன்னைத் திட்டிப் பேச நானென்ன உன் அடிமையா..?”என்றார் குரு புன்னகையுடன். அதைக் கேட்டு, முரடன் தலைகுனிந்தபடி சென்றான்.குரு அமைதியாய் இருந்ததின் அர்த்தம் இப்போதுதான் சிஷ்யனுக்குப் புரிந்தது.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு