நூறு ஆண்டுகளைக் கடந்த குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்!



வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்


எதிர்காலத்தை மனதில் கொண்டு வாழ்வை வளமாக்கவும், ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்கவும் எண்ணும் நம் தேசத்து இளைய சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் உயர்கல்விக்கு வெளிநாடு செல்ல திட்டமிடுகின்றனர்.

 அப்படித் திட்டமிடும்  மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் இந்தப் பகுதியில் ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதில் ஆய்வுப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அங்குள்ள பாடத்திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாகப் பார்த்துவருகிறோம்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்கள் முதல் உள்கட்டமைப்பு வரை மிகச்சிறந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச அளவில் அதிகமான மாணவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் US, UK பல்கலைக்கழகங்களுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

சர்வதேசத் தரம் அடிப்படைக் கட்டமைப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து முன்னணியில் உள்ள 10 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நாம் அடுத்ததாகப் பார்க்கவிருப்பது University of Queensland பல்கலைக்கழகம்.

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் முன்னணி இடம்பிடித்துள்ள University of Queensland பல்கலைக்கழகம் 1909 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ளது.

இது ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு நூறு வருடங்களுக்கும் மேல் ஆகின்றது. பாடத்திட்டங்களில் பிசினஸ் மற்றும் லைஃப் சயின்ஸஸில் முன்னணி வகிக்கிறது இந்தப் பல்கலைக்கழகம்.

உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் இந்தப் பல்கலைக்கழகம் 50வது இடத்தில் உள்ளது. இங்குப் படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்கள் உலக அளவில் கல்வித் தரத்தில் திறன்மிக்கவர்களாக இருப்பார்கள்.

அதேபோல உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளின் தர வரிசையிலும் இந்தப் பல்கலைக்கழகம் 50வது இடம்பிடித்துள்ளது. மேலும் இந்தப் பல்கலைக்கழகம் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விண்ணப்பித்தல், விசா பெறுதல், உடல்நலம், தங்கும் இடம் என அனைத்துத் தேவைகளிலும் கவனம் செலுத்துவதில் சிறப்பாகச் செயல்படக்கூடியது.

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வந்து படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு University of Queensland பல்கலைக்கழகத்தில் பல்வேறு  உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.நம் நாட்டில் உள்ளது போலவே இங்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தங்களுக்கு ஈடுபாடு உள்ளது எது என்பதைத் தேர்வு செய்து அதில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் Agribusiness, Agriculture, Environment and Science, Engineering, Architecture, Planning, Information and Technology, Humanities, Education, Psychology and Music, Business, Economics and Law, Health and Medicine ஆகிய பாடங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

இங்குக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்டன்ஷிப் முதல் பார்ட் டைம் ஜாப் வரை அனைத்து விதமான தேவைகளுக்கும் ஆலோசனைகள் வழங்குவதோடு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அங்குப் படிக்கும் பட்டப்படிப்புகளோடு தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் வசதியாக அனைத்து விதமான கட்டமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன.  l

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்
வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்