TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்


தமிழ்நாட்டின் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒவ்வோர் ஆண்டும் பலகட்டமாகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் மூலம் அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற பலரது கனவை நனவாக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரிய வாய்ப்பளிக்கிறது. அதிகாரி பணி முதல் அட்டண்டர் பணி வரை உள்ள பல்வேறு பணியிடங்களும் இந்தத் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அரசுப் பணியில் சேரலாம்.

அதற்குத் தேவையான பாடத்திட்டங்கள், கேள்வி கேட்கும் முறைகளைப் பற்றிய விளக்கங்களையும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். கடந்த இதழில் புவியியல் பாடத்தில் காற்று பற்றியும் அதன் வகைகளையும், மழைப்பொழிவையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்களை இனி பார்ப்போம்…  

வள ஆதாரங்கள்

மனிதனுக்குப் பயனளிக்கும் பொருட்கள் வள ஆதாரங்கள் என்று அழைக்கப்படுகிகின்றன. அவை அனைத்தையும் நாம் நிலக்கோளம், நீர்க்கோளம் மற்றும் புவிக்கோளத்தின் மூலம் பெறுகின்றோம்.  வள ஆதாரங்கள்தான் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வள ஆதாரங்களை அவற்றின் பயன்பாட்டினைக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.        
                                           
இயலா ஆற்றல் வள ஆதாரங்கள்: மக்களால் பயன்படுத்த முடியாத வளங்கள். (எ.கா,) அண்டார்டிகாவில் உள்ள வளங்கள்.
புதுப்பிக்க இயலாத  வள ஆதாரங்கள்: தீர்ந்து போகக்கூடிய வளங்கள். (எ.கா.) கனிம வளம்.
 புதுப்பிக்கக்கூடிய  வள ஆதாரங்கள்: தீர்ந்து போகாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளங்கள். (எ.கா.) நீர், சூரிய ஆற்றல்.
வளர்ச்சியுற்ற  வள ஆதாரங்கள்: மக்களால் பயன்படுத்தக்கூடிய வளங்கள். (எ.கா.) அனைத்து வகைகளிலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய வளங்கள்.
புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்கள்
நீர்மின் சக்தி: சீனாவின் ‘யாங்சி’ ஆற்றின் குறுக்கே உள்ள முப்பள்ளத்தாக்கு அணையில் உலகின் மிகப்பெரும் நீர்மின்சக்தி நிலையம் உள்ளது. இந்தியாவில் பெரியது & பக்ராநங்கல்.
சூரிய ஆற்றல்: ஒளியின் வோல்டா மின்கலம் சூரியசக்தியை சேமிக்கப் பயன்படுகிறது. ஜெர்மனி உலகிலேயே அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
காற்று ஆற்றல்: தமிழகத்தின் ஆரல்வாய்மொழியில் உலகின் மிகப்பெரிய காற்றாலை நிறுவனம் உள்ளது. மகாராஷ்டிரமும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கிறது.
உயிரி ஆற்றல்: மரங்கள், பயிர்கள், வேளாண்மை மற்றும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்கள் உயிரி ஆற்றலுக்கு முக்கிய ஆதாரம் ஆகும்.
 நிலக்கரி - புதை எரிபொருள் என அழைக்கப்படுகிறது
 எண்ணெய் - இந்தியாவின் முக்கிய எண்ணெய் வயல்கள் அஸ்ஸாமில் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல் மும்பை.
  நினைவில் கொள்கநமது மாநிலத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி. யுரேனியம், தோரியம் ஆகியவை அணுசக்தி கனிமங்கள்.

இந்தியாவில் தமிழ்நாடு,  கேரளா கடற்கரை மணற்பரப்புகளில் அதிக அளவு காணப்படுகிறது - இல்மனைட்.
மாட்டுச் சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருள்  மீத்தேன்வள ஆதாரங்களுக்கு அடுத்தபடியாக நாம் தொழில்கள் பற்றிப்பார்ப்போம். இதுவும் புவியியல் பாடத்திட்டத்துக்குள் வரக்கூடிய பகுதி என்பது கவனத்தில்கொள்க.

தொழில்கள்

முதல்நிலைத் தொழில்கள்: சிவப்புக் கழுத்துப் பட்டை  பணியாளர்கள் இயற்கையோடு இணைந்த பழமையான தொழில் நடவடிக்கை. (எ.கா.) வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், உணவு சேகரித்தல், கனிமங்கள் வெட்டியெடுத்தல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் மற்றும் விவசாயம்.        

இரண்டாம்நிலைத் தொழில்கள்: நீலக்கழுத்துப் பட்டை - பணியாளர்கள்
மூலப்பொருட்களை முடிவுற்ற பொருளாக மாற்றுவது. (எ.கா.) கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை.

மூன்றாம்நிலைத் தொழில்கள்: வெளிர் சிவப்புக்கழுத்துப்பட்டை - பணியாளர்கள்
வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புச் சேவைகள். தொழில் நுட்பத்தில் சிறப்புமிக்க பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள்.           
                     
 நான்காம்நிலைத் தொழில்கள்: வெள்ளைக்கழுத்துப் பட்டை - பணியாளர்கள்
கல்வித்துறை, நீதித்துறை, மருத்துவம், பொழுதுபோக்கு, கேளிக்கைள், நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் தன்மை பணிகள்.              
                                
ஐந்தாம்நிலைத் தொழில்கள்: தங்கக் கழுத்துப் பட்டை - பணியாளர்கள்
ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டம் வகுப்போர் போன்ற உயர்நிலைப் பணியாளர்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள தொழில்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த மேலும் பல தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.