உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படும் தடைகள்!



உளவியல் தொடர் 15

உடல்...மனம்...ஈகோ!


‘கண்கள், கைகள்,மனம், பாவனை… இவை அனைத்தும் ஒன்றுகூடி வெளிப்படும்  கலை  நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’
- நாட்டிய சாஸ்திரம்
- ஈகோ மொழி

நான்என்ற அர்த்தத்தைத் தாங்கி நிற்கும் ஈகோ (EGO) லத்தின் மொழியிலிருந்து வந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.எதிரில்இருப்பவரையோ, மற்றவரையோ அல்லது யாரோ ஒரு நபரையோ குறிப்பிட்டுப் பேசும்போது அவர் நம்கண்முன் வருவார். அதுவே நாம் நம்மைப்பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்போதோ, அல்லதுஉருவகப்படுத்தும்போதோ நாம் நம் கண்முன் தோன்றி நிற்பதே இல்லை. அதே நேரம் நம்மைப்பற்றி பேசும்போது நம்முள் ஈகோ பெரிதாக எழுந்துகொள்வதை உணரலாம்.

அதுதான்மனித மனதிற்குள் ஈகோ காட்டும் வர்ணஜாலம்.ஈகோ நமக்கு ஒரு விலைமதிப்பில்லாத சொத்தா அல்லது அது ஒரு பெரும் மனச்சுமையா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழக்கூடும். இரண்டும் ஒன்றுதான்… ஆனால் வேறுவேறு. இரண்டும் வேறுவேறுதான்… ஆனால் ஒன்று. என்ன குழப்பமாக இருக்கிறதா? இதில் விசித்திரம் என்னவென்றால், ஈகோ இரண்டும் கலந்ததுதான். ஆம், அது ஒரு சுமையான சொத்தாகத்தான்பாவிக்கப்படுகிறது.

எந்த ஒரு விஷயத்திலும் தான் மறைந்து ‘நான்’ வெளிப்படும் தருணம் பரவசமானது. அது கடலின் பேரலை வாரிச்சுருட்டி விழுங்கிவெளித்தள்ளும் நிலைக்கு இணையானது.அந்தத் தருணங்களில் மனம் அடையும் மனக்கிளர்ச்சியையும்,உணர்வெழுச்சியையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

 ‘நான்’ வெளிப்படும் அந்தச் சுவை நிலையில் மனம் அடையும் மகிழ்ச்சியையும், நிறைவையும் ஒருபோதும் அளவிடவே முடியாது. எவ்வளவு நேரம் இருந்தாலும், ஒருபோதும் அந்தத்தருணங்களில் இருந்து மீண்டு வர மனம் ஒப்புக்கொள்ளவே செய்யாது.

‘நான்’வெளிப்பட ஒருவகையில் தருணங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. தருணங்களின் தன்மையால் நான் வெளிப்படுவதும், நான் வெளிப்பட தருணங்களின் பங்களிப்பும் ஒன்றுக்கு ஒன்று இணையானது. அதனால்தான் ஈகோவின் நிர்வாகத்தில் தருணங்களின் பங்களிப்பு பற்றிய புரிதலும் அவசியமானதாகிறது.கடற்கரையில் அலைகளாக வந்து பாதங்களைத் தொட்டுச் செல்லும் கடல்நீரை விரும்பும் மனம், ஆழமான பகுதியிலிருக்கும் கடல்நீரை ஒருபோதும் ரசிப்பதே இல்லை.

அதேபோலத்தான் தருணங்களும்.மனதிற்குச் சாதகமான நிலையில் இருக்கும் தருணங்களை ரசிக்கும் மனம், சாதகமற்ற நிலையில்இருக்கையில் ரசிக்கப்படுவதே இல்லை. காரணம், தருணங்களை எதிர்கொள்கையில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் ஏற்படும் சில தடைகள் சிக்கல்களை ஏற்படுத்திவிடுவதுதான்.அன்றாட வாழ்வில் சந்தித்த எந்த ஒரு தருணத்தையும் யோசித்துப்பாருங்கள், அங்கு ஈகோ தனக்கான
வெளிப்பாட்டை பிரதிபலிக்கத் தயாராக காத்துக்கொண்டே இருப்பதைத் பார்க்கலாம்.

தருணங்களின் தன்மையை அறிந்து, ஒரு இடைவெளியில் அதைக் கவனித்து, புரிந்துகொண்டபின்,அதற்கான வெளிப்பாட்டைக் காட்டுவதுதான் ஈகோவையும், தருணங்களையும் சரியான முறையில் நிர்வகிக்கும் செயலாகும்.விளக்கமாகச்சொல்வதானால், தருணங்களுக்கான வெளிப்பாட்டைப் புரிந்துகொள்ள, சிற்பியின் தொழில் முறையைக் கொண்டு அணுகலாம்.

ஒரு சிற்பி சிற்பத்தைச் செதுக்கும்போது, பொதுப்பார்வைக்கு உளி கொண்டு செதுக்குவதாகத்தான் தோன்றும். ஆனால், அவரைச் சற்றுகூர்ந்து கவனித்தால், சிற்பி சில நேரங்களில் சற்று பின் நகர்ந்து சிந்தித்துச் செதுக்கத் தொடங்குவதைப் பார்க்கலாம். (ஓவியர்கள் கூட இப்படிச் செய்வதுண்டு). இங்குதான்இருக்கிறது சூட்சுமம்.சிற்பி தனது மனதுக்குள் வடித்துள்ள சிற்பத்தின் பிம்பம், கண்முன் தோன்றிவரும் சிற்பத்திற்குள் பொருந்துவதற்காக அவ்வாறு பின் நகர்கிறார்.

இன்னும் சொல்வதானால்,சிற்பி செதுக்கும் தருணத்தில் தனது மனதிற்குள் இருக்கும் சிற்பத்திற்கும், கண் எதிரில் உருவாகிவரும் சிற்பத்திற்குமான உருவ இடைவெளியை ஒன்றுகலப்பதன் மூலமாக அதை நிறைவேற்றுகிறார். இதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. எந்த ஒரு தருணத்தை எதிர்கொள்கையிலும், ஈகோவின் வெளிப்பாடு முன்முடிவுகளின் ஆளுமையால் உள்ளுக்குள் மேலோங்கி வெளிப்படத் தயாரான நிலையிலேயே இருக்கும்.

உணர்ச்சிகரமானசூழலில் அது சட்டென்று உணர்ச்சி வேகத்துடன் வெளிப்பட்டு, தருணங்களின்அடர்த்தியுடன் ஒன்றிணையாமல் போனால், அதே தருணங்கள் மனதிற்கு சாதகமற்றதாக மாறிவிடும். அப்போது ஈகோவும் காயப்பட்டுவிடும்.எந்தஒரு தருணத்திலும் ஈகோ காயப்படாமல் இருந்திட, சற்று பின் நகர்ந்து, ‘யதார்த்தத்தை’ நிதானமாக கவனிக்க வேண்டும்.

அது தருணத்தின் அடர்த்தியையும், பல் வேறு சிக்கல்களையும், தொக்கிநிற்கும் சவால்களையும் நமக்குத் துல்லியமாக இனம்பிரித்துக்காட்டுவதோடு, பிம்பத்தின் வடிவ அளவையும் குறைத்து, ஈகோவின் பிரதிபலிப்புடன் இணைந்து ஒரு சாதகமான சூழலை மனதிற்கு ஏற்படுத்தித்தரும். ஈகோ நிர்வாகத்தில் இந்த இடத்தில்தான் தருணங்களால் ஈகோவும், ஈகோவால் தருணங்களும் சிறப்பான பலனைப் பெற்றுக்கொள்கின்றன.

தருணங்களை எதிர்கொள்வதும், ஈகோவை நிர்வகித்து சாதகமாக மாற்றிக்கொள்வதும் யாவும் மனித மனம் அமைதியாக இருப்பதற்கான வழிமுறைதான். வாழ்க்கை நடைமுறையில் தருணங்களை எதிர்கொள்வது குறித்தும், அங்கு ஈகோவின் (உடல்,மனம் இரண்டிற்குமாக) உடனடி பிரதிபலிப்பு எவ்வாறுஇருக்கிறது என்பது பற்றியும், லண்டனில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அங்குப் பல்கலைக்கழக விடுதியில் (ஹாஸ்டலில்), இரவு உணவு உண்டபின் மாணவர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவி வைக்க வேண்டும் என்பது நடைமுறை. அந்தத் தருணத்தைவலுக்கட்டாயமாக கடினமாக்கினால், அதை மாணவர்களின் ஈகோ எப்படி எதிர்கொள்கிறது என்பதை பரிசோதிக்க முடிவு செய்தார்கள். சாப்பிட்ட தட்டுகளைக் கழுவும் தண்ணீரை மிகமிகக் குளிர்ந்த நிலையில் வைத்தார்கள். அதை அறியாத மாணவர்கள் தண்ணீரின் குளுமையைக் கண்டு பயந்து உடலளவில் நடுங்கிப் போனார்கள்.

முதலில் வந்த சிலர், தண்ணீரில் கை வைக்கமுடியாமல், தட்டுகளை அப்படியே போட்டுவிட்டு கைகளை துடைத்துக்கொள்ள நினைத்தார்கள். சிறிதுநேரத்தில் நடைமுறை நிலையை உணர்ந்து, (பின் நகர்ந்து) கழுவி வைத்தார்கள்.

உண்மையில்தட்டுகளைக் கழுவி வைக்காமல் போனால், மறுநாள் சாப்பிட வரும்போது கழுவாத தட்டுகளே கிடைக்கக்கூடும் என்பதையும், தண்ணீரின் குளுமை விநாடி நேர அவஸ்தைதான்.

அதுவேகழுவாத தட்டில் மறுநாள் உணவு அருந்துவது அசூயையானது என்பதை நிமிட நேர இடைவெளியில்ஈகோவின் நிர்வாகம் அவர்களுக்கு புரியவைத்தது. ஈகோவின் செயல்பாடுகளை வைத்தும், அதைப் பயன்படுத்துபவரின் திறமையை வைத்துமே ஈகோ நிர்வாகம் திறம்பட அமைகிறது என்பதே யதார்த்தம். தருணங்கள் முன்வைக்கும் அழுத்தங்களாகட்டும், அதை லாவகமாகக் கடக்க உதவும் ஈகோ நிர்வாகமாகட்டும் நாம் தருவதும் பெறுவதும் யாருக்கோ யாரிடமிருந்தோ இல்லை. நாம் நமக்கே வழங்கிக் கொள்கிறோம், பெற்றுக்கொள்கிறோம்.

ஒரு கல்… ஒரு கண்ணாடி!

மரத்தடியில்அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தான் சிஷ்யன். அருகே வந்து நின்றார் குரு. கண் விழித்த சிஷ்யன், “வணக்கம் குருவே” என்றான். சிஷ்யனைப் பார்த்து, “நீ இவ்வளவு நேரமாக என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்றார் குரு. உடனே சிஷ்யன், “தியானம் செய்து கொண்டிருந்தேன் குருவே!”என்றான். “அப்படியா? எதற்காகத் தியானம் செய்கிறாய்?” என்றார் குரு. சிஷ்யன், “மன அமைதிக்காகவும், மனம் தெளிவடையவும் தியானம் செய்தேன் குருவே!” என்றான்.

சிஷ்யனின் பதிலைக் கேட்டு, “நல்லது” என்று கூறிய குரு, சற்று திரும்பி, கீழே கிடந்த ஒரு கல்லைக் யில்எடுத்துக்கொண்டு,அதை வேகமாக ஒரு பாறையில் தேய்க்கத் தொடங்கினார். குருவின் செயலைக் கண்டு குழம்பிய சிஷ்யன், “என்ன செய்கிறீர்கள் குருதேவா? கை வலிக்கப்போகிறது!”என்றான்.“நான் இந்தக் கல்லைத் தேய்த்துத் தேய்த்துக் கண்ணாடியாக மாற்றப்போகிறேன்!” என்றார் குரு. இதைக் கேட்டுச் சிரித்த சிஷ்யன், “என்ன குருவே, உங்களுக்கு என்ன ஆயிற்று?

நீங்கள் எவ்வளவுதான் தேய்த்தாலும் கல் எப்படிக் கண்ணாடியாகும்?” என்றான். “நிறைய தியானம் செய்கிறவன் மனம் தெளிவடைய முயலும்போது, கல்கண்ணாடியாக மாறமுயலக்கூடாதா என்ன?” என்றார் குரு. குரு சொல்வது புரியாமல் சிஷ்யன் குருவைப் பார்த்தான். குரு தொடர்ந்தார், “இதோ பார், எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் வைத்துக்கொண்டு ஒருபோதும் தியானத்தில் மாத்திரமல்ல எதிலும் ஈடுபடக்கூடாது.

அது பலனைத் தராது. கடந்துசெல்லும் விநாடியை அமைதியாகச் சுவைத்து வாழ்வதுதான் தியானத்திற்கும், வாழ்விற்கும் ஒரே நோக்கமாக இருக்கவேண்டும். பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்யாதே!” என்றார் குரு. குருசொல்லும் தத்துவத்தின் அர்த்தம் புரிந்த சிஷ்யன் “சரி குருவே” என்றான்.

ஸ்ரீநிவாஸ் பிரபு