இந்திராகாந்தி வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் M.Phil., Ph.D. படிக்கலாம்!



நுழைவுத்தேர்வு

தேசிய மற்றும் உலக வளர்ச்சிப் பிரச்னைகள் குறித்த ஆய்வுக்காக இந்திய ரிசர்வ் வங்கி 1987ஆம் ஆண்டில் மேம்பட்ட ஆய்வு நிறுவனமாக, மும்பையில் இந்திராகாந்தி வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தை (Indira Gandhi Institute of Development Research - IGIDR) நிறுவியது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், இந்தியக் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் (National Assessment and Accreditation Council  NAAC) தரப்பட்டியல் நிலையில் ‘ஏ’ நிலையினைப் பெற்றிருக்கிறது. இந்நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் சில படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: இந்நிறுவனத்தில் இரண்டு வருட கால அளவிலான பொருளாதாரம் (M.Sc. Economics) முதுநிலைப் பட்டப்படிப்பு, வளர்ச்சிப் படிப்புகள் (Development Studies) எனும் தலைப்பிலான இரண்டு வருட கால அளவிலான ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டப்படிப்பு மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.  

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: M.Sc  Economics பட்டப் படிப்புக்குப் பொருளாதாரம், வணிகவியல், புள்ளியியல், கணிதம், இயற்பியல், பொறியியல் அல்லது தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பு (B.A/B.Sc. in Economics/B.Com./B.Stat./B.Sc.(Physics or Mathematics)/B.Tech./B.E.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பட்டப்படிப்புகளில் பொருளாதாரப் பாடத்திற்குக் குறைந்தது 55% மதிப்பெண்களும், பிற படிப்புகளுக்கு 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.  

M.Phil மற்றும் Ph.D பட்டப்படிப்புகளுக்குப் பொருளாதாரம், புள்ளியியல், இயற்பியல், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல், செயல்பாட்டு ஆராய்ச்சி, மேலாண்மைப் படிப்பு களில் (M.A/M.Sc. in Economics/M.Stat./M.Sc. (Physics or Mathematics or Environmental Science or Operations Research)/M.B.A.) முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது பொறியியல்/தொழில்நுட்பத்தில் (M.Tech./M.E./B.Tech./B.E.) முதுநிலை அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பட்டப்படிப்புகளில் பொருளாதாரப் பாடத்திற்குக் குறைந்தது 55% மதிப்பெண்களும், பிற படிப்புகளுக்கு 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.igidr.ac.in எனும் இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.500 எஸ்.சி., எஸ்.டி. மாற்றுத்திறனாளிப் பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2017.

இணையவழித் தேர்வு: விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் அகமதாபாத்/காந்திநகர், பெங்களூர், பெனாரஸ், போபால், புவனேஸ்வர், பர்த்வான், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஐதராபாத்/ரெங்காரெட்டி, ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா/கிரேட்டர் கொல்கத்தா, லக்னோ, மும்பை/கிரேட்டர் மும்பை/தானே / நவி மும்பை, என்.சி.ஆர். (டெல்லி), பாட்னா, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் 15.5.017 அன்று இணையவழித் தேர்வு நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை: இணையவழித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுடையவர்கள் பட்டியல் ஒன்று தயார் செய்யப்படும். இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு மே மாதம் கடைசி வாரத்திலோ அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்திலோ நேர்காணல் நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெறும். நேர்காணலுக்கு வந்து செல்ல இரண்டாம் வகுப்புத் தொடருந்து கட்டணம் அளிக்கப்படும். அதன் பிறகு 10.7.2017 முதல் வகுப்புகள் தொடங்கும்.

  மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம் அல்லது 022 - 28416200, 28400919/20 / 21 (EPABX) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது “Indira Gandhi Institute of Development Research, Deemed University, General Arun Kumar Vaidya Marg, Santosh Nagar, Film City Road, Goregaon (East), Mumbai 400065” எனும் முகவரியிலோ அல்லது soffice@igidr.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

  - முத்துக்கமலம்