எஞ்சினியரிங் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்!



கண்டுபிடிப்பு

மாணவர்களின் மகத்தான சாதனை!


அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய குருஷேத்ரா எனும் அமைப்பு, அறிவியல் கண்காட்சி ஒன்றைச் சமீபத்தில் நடத்தியது.அதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முற்றிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 12 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தபட்டன. அக்கண்காட்சியில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த சில கண்டுபிடிப்புகளைக் கடந்த இதழில் பார்த்தோம். அந்த வகையில் இன்னும் சில கண்டுபிடிப்புகளை இப்போது பார்ப்போம்…

பார்வையற்றோருக்குப் படித்துக்காட்ட ஒரு கருவிபார்வையற்றோர்களின் கண்முன் இருக்கும் எழுத்துகளை வாசித்து ஆடியோவாக்கி அவர்களுக்கு கூறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது ப்ளைண்ட் கைடன்ஸ் என்ற கருவி.

இதை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் படிக்கும் சரிகா, கௌதமி, கிருத்திகா, சுச்சரிதா மற்றும் மூன்றாமாண்டு ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் எஞ்சினியரிங் படிக்கும் நந்திதா ஆகிய ஐந்து மாணவிகள் இணைந்து உருவாக்கியிருந்தனர்.

மாணவிகள் தங்கள் கருவியின் சிறப்புகளைக் கூறும்போது,”பொதுவா கண் தெரியாதவங்க தங்களைச் சுற்றி நடப்பதை சத்தத்தை வச்சு தெரிஞ்சுகிறாங்க. ஆனா, அவங்களுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் எழுத்துகள்தான். உதாரணமா, பஸ் வர்றது சத்தம் மூலமா அவங்களுக்குத் தெரியும். ஆனா, அது எந்த  இடத்துக்கான பஸ்ஸுனு  தெரியாது. இத மாத்தணும்னு நெனச்சோம். இத மையமா வச்சுதான் ப்ராஜக்ட் பண்ணணும்னு முடிவு எடுத்து முடிச்சும் காட்டியிருக்கோம்” என்றனர்.

மேலும் அவர்கள், “சாதாரண தொப்பியில ஒரு கேமரா, அத ஆன் பண்றதுக்கு ஒரு ஸ்விட்ச்.டெஸ்ஸராக்ட்னு கம்ப்யூட்டர் ப்ரொக்ராம் ஒன்று, மைக்ரோபிராசசர் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கியிருக்கிறோம். கண் தெரியாதவர்கள் தொப்பியை மாட்டியவுடன் அந்த ஸ்விட்சை ஆன் செய்தால், கேமரா அவங்க முன்னாடி இருக்குற எழுத்துகளை போட்டோ எடுக்கும்.

எடுத்த போட்டோவிலிருந்து எழுத்த பிரிச்சு எடுத்து, அதனோட அர்த்தத்தை ஆராய டெஸ்ஸராக்ட் ப்ரோகிராம் உதவும். இப்போ அந்த எழுத்துக்கான அர்த்தம் கிடச்சுடுச்சு. அந்த அர்த்தத்தை வாய்சாக மாற்றுவதற்கு  ஈ ஸ்டீக்னு ஒரு சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து இருக்கிறோம்.

இப்போது கிடைத்த அந்த எழுத்துக்கான வாய்சை  அவருக்கு தெரிவிக்கும் வகையில் கேமராவுடன் ஒரு ஹெட் போன் பொருத்தியிருக்கோம். இதன் மூலம் கண் தெரியாதவர்கள் தங்கள் முன் இருக்கும் எழுத்துகளை ஆடியோவாக்கி தெரிஞ்சுக்கலாம்” என்று பெருமிதம் பொங்க கூறினர்.

சேஃப்ட்டி டிராவல் பேக்!

மூன்றாமாண்டு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கும் டேனிஸ் அஹமது, ஜாகிர் அப்பாஸ், ரோகித் ஆகிய மூன்று மாணவர்கள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பேக் ஒன்றை வடிவமைத்திருந்தனர்.டிராவல் பேக் திருட்டுப் போவது, பேக்கில் பிளேடு போடுவது, பேக்கை மறந்து வைத்துவிடுவது மற்றும் ஏர்போர்ட்டில் பேகை மாற்றி எடுத்துச் செல்லுதல் போன்ற சூழ்நிலைகளில், தங்கள் டிராவல் பேகுகளை மீண்டும் மீட்டெடுக்கும்  வகையில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் படைப்பின் சிறப்பைக் கூறும்போது, “ஒரு மெயின் போர்டில் சிம் கார்டு போல இருக்கும் ஜி.எஸ்.எம். கார்டு, ப்ரொடக்டிவ் வயர், சென்சார் போர்டு போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளோம். உங்கள் டிராவல் பேக் தொலைந்தாலோ அல்லது திருட்டுப் போனாலோ, அந்த பேகில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டு போன்று இருக்கும் ஜி.எஸ்.எம். மாடியுலின் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

அந்த பேக் இப்போது எங்கே இருக்கிறது என நம் மொபைலுக்கு மெஸேஜ் வந்துவிடும். இதேபோல் பேகின் உட்புறம், எலக்ட்ரிக் வயர் போன்ற ப்ரொடெக்டிவ் மெஸ் ஒன்று சுற்றப்பட்டு சென்சார் போர்டும் இணைக்கப்பட்டிருக்கும். இதன் உதவியால் பேகில் பிளேடு போடும்போது  அலாரம் அடிக்கும்.மேலும் இதில்  பாஸ்வேர்டை கூட போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் முக்கியப் பொருட்களை வைத்து எடுத்துச் செல்லும் பேக்கானது மிகவும் பாதுகாப்பாக–் இருக்கும்” எனக் கூறினர்.

மாயக் கண்ணாடிநேரம், செய்திகள், வெதர் ரிப்போர்ட், காலண்டர், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பதிவுகள் மெயில் போன்றவற்றை செல்போனில் பார்ப்பது சாதாரண விஷயம். ஆனால், இதைக் கண்ணாடியிலேயே பார்க்கும் ஒரு கண்டுபிடிப்பை அண்ணா பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்கள் நிகில், கீர்த்தனா, பீப்தி, ஆகாஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.இக்காண்ணாடியைப் பற்றி ஆகாஷ் கூறுகையில், “காலையில் எழுந்ததும் நாம் முதல்ல கண்ணாடி முகத்துலதான் முழிக்கிறோம்.

அப்படி கண்ணாடியைப் பாக்கும்போதே முகம் தெரியவும் மற்றும் அதே சமயத்தில்  கண்ணாடியில் நம் செல்போனில் வந்திருக்கும் செய்திகள் தெரிவதற்கும் 2 (2 way mirror) வழிக் கண்ணாடியைப் பயன்படுத்தியிருக்கோம்.

இதனால் செய்திகள் இக்கண்ணாடியின் உள் திரையிலும், உங்களின் முகம் வெளித் திரையிலும் தோன்றும். மேலும்  செய்திகள் ,நேரம், வெதர் , நினைவூட்டல் ஆகியவற்றை  உங்களுக்கு தெரிவிக்க ஒரு ஸ்பீக்கரும்,  மற்றும் அக்கண்ணாடியுடன் ‘நேரம் என்ன?’ என்பதைத் தெரிவிப்பதற்கு  ஒரு மைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

இக்கண்ணாடியை இயக்குவதற்கு ராஸ்ப் பெர்ரி 5 எனும் மைக்ரோ ப்ராஸஸர், ஜி.எஸ்.எம். மாடியுல் உபயோகப்படுத்தியுள்ளோம். ஜி.எஸ்.எம். மாடியுலில் உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்துவிட்டால் போதும். இதன் மூலம் இந்தக் கண்ணாடியைப் பார்த்து காலையில் பல் தேய்க்கும் நேரத்திலேயே அன்றைய உங்கள் செல்போன் பதிவுகளைக் கண்ணாடித் திரையிலேயே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” என்றனர்.
மாணவர்க்ளின் படைப்புகள் அனைவரையும் வியக்கவைக்கின்றன. அவர்களின் முயற்சி மேலோங்க நாமும் வாழ்த்துவோம்!

- வெங்கட் குருசாமி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்