நல்ல விஷயம் 4



வளாகம்

அறியவேண்டிய மனிதர் - சாய்னா நேவால்

ஹரியானா மாநிலம் ஹிஸார் நகரில் 1990 ஆம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பிறந்த பேட்மின்டன் புயல் சாய்னா நேவால். பள்ளிப்படிப்பை கேம்பஸ் பள்ளியில் நிறைவு செய்தபின் குடும்பத்தோடு ஐதராபாத்துக்கு இடம்பெயர்ந்தார். ஒலிம்பிக்கில் 3 முறை பங்கேற்ற சாய்னா இரண்டாவது முறை வெண்கலம் வென்று சாதித்தார்.

இன்டர்நேஷனல் பதக்கங்கள் 20ம் சூப்பர் சீரிஸ் பதக்கங்கள் 10ம் வென்று 2015 ஆம் ஆண்டு நெ.1 பேட்மின்டன் சாதனைப் பெண்ணாகவும் சாய்னா நேவால் மின்னினார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பேட்மின்டனில் பதக்கம் தட்டிய முதல்பெண் சாய்னா நேவால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் விளையாட்டுச் சாதனைகளுக்கு இந்திய அரசு பத்மபூஷன், ராஜிவ்காந்தி கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கௌரவித்தது திறமைக்குக் கிடைத்த மரியாதை! இவரைப்பற்றி மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/சாய்னா_ நேவால்

வாசிக்கவேண்டிய வலைத்தளம்- www.Chennailibrary.com

படிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டு புத்தகங்களைத் தேடித்தேடிப் படிக்கும் புத்தகப் பிரியர்களுக்குச் சென்னை லைப்ரரி இணையதளம் ஒரு வரப் பிரசாதமாகும். இதை இலவசத் தமிழ்நூல்களின் களஞ்சியம் என்றே சொல்லலாம். கல்கி, சாண்டில்யன், க.நா.சு, பிச்சமூர்த்தி, மகாத்மா காந்தி எனப் பலரது நூல்களையும் இத்தளத்தில் விலையில்லாமல் படித்து மகிழலாம்.

சென்னை லைப்ரரியில் ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களானால், அழகிய PDF வடிவில் நூல்களைத் தரவிறக்கம் செய்தும் வாசிக்கலாம். இதில் இதுவரையில் தமிழில் வெளியாகியுள்ள நூல்களின் முழுத் தகவல்களைக் கொண்ட அட்டவணையும் கொடுத்துள்ளது அருமையான முயற்சி. கிடைத்தற்கரிய தமிழ்நூல்களைப் படிக்க விரும்புவோர் அனைவரும் காணவேண்டிய தளம்.

படிக்கவேண்டிய புத்தகம் - பூர்வ பௌத்தனின் சாட்சியம் - பேராசிரியர் ப. மருதநாயகம்

தாழ்த்தப்பட்ட மக்களிடையே சூரியனாய்த் தோன்றி பல்வேறு மொழிகளைக் கற்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஜாதி இழிவை அகற்றப் போராடிய அமரர் அயோத்திதாசரின் 360 டிகிரியிலான கருத்துகளை எளிய மொழியில் வலிமையாக எடுத்துரைக்கும் நூலே பூர்வ பௌத்தனின் சாட்சியம்.

தொன்மைக் குலைப்பு என்ற முதல் அத்தியாயம் தொடங்கி சொல்லாடல் கலை வரை பல்வேறு நூல்களைத்தன் கருத்துக்கேற்ப மொழிபெயர்த்து தவறான திசைநோக்கி மக்களை வழிநடத்துபவர்களை கடுமையாகக் கண்டித்துப் பேசும் அயோத்திதாசரின் கருத்துகள் பிரமிப்பு. வரலாற்று உண்மைகளை நேருக்குநேராகச் சந்திக்க விரும்புபவர்கள் வாசிக்கவேண்டிய நூல் இது. (வெளியீடு: தடாகம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை -41, 8939967179 ரூ.160 )

பார்க்கவேண்டிய இடம் - தேக்கடி

தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப்பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேக்கடி. தேக்கடி என்றதுமே யானைகள், முடிவில்லா சங்கிலித்தொடர் போன்ற குன்றுகள், நறுமணமூட்டும் வாசனை பொருட்களின் தாவரங்கள் ஆகியவை நம் கண்முன் விரியும்.

இங்குள்ள பெரியார் வனவிலங்குச் சரணாலயம் இந்தியாவின் மிகச்சிறந்த சரணாலயங்களுள் ஒன்றாகும். இங்குப் புகழ்பெற்ற பசுமை மாறாக் காடுகளும், சவன்னா காடுகளும் அடர்த்தியாகவும் அழகாகவும் அமைந்து மனமகிழ்ச்சியை அளிக்கும். தேக்கடி பூங்கா, ஏரியில் படகுப் பயணம் இயற்கை எழிலை ரசிப்பதற்கு அற்புதமான ஏற்பாடு.

காட்டுயானை, சிறுத்தைப்புலி, சாம்பார் மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற 35 வகையான விலங்குகளை ஏரியில் படகுகளில் செல்லும்போதும், மலைப்பகுதியில் செல்லும்போதும் காணலாம். 1978 இல் புலிகள் காப்பகமாக இப்பூங்கா அறிவிக்கப்பட்டது. ஜீப் பயணம், மலையேறுதல் எனப் பலவற்றுக்கும் ஏற்ற, தேக்கடி நம் மனக்கவலையை அகற்றும் அற்புத இடமும் கூடத்தான். மேலும் தகவலறிய https://ta.wikipedia.org/wiki/தேக்கடி