தகவல் களஞ்சியம்



நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளுக்கும் தீர்வு சொன்னதோடு, நிபுணர்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியது ‘வேலைக்கு வெல்கம்’ பகுதி. அதைப் போலவே இளைஞர்களுக்கு பயனளிக்கும் மற்றொரு தொடரை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
- எஸ்.சங்கீதா, சென்னை-17.

பொன்மார் பிரின்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களின் நாற்று நடும் இயந்திரம் + ஜெனரேட்டர், காலத்திற்கு உகந்த கண்டுபிடிப்பு. வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்ட அந்த மாணவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
- கே.ரவிசங்கர், புதுச்சேரி.

‘சுலபமாகச் செய்யலாம் சுயதொழில்’ பகுதி, பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறது. தொடர்பு விபரங்கள் உள்பட முழுமையான தகவல்களை ஒவ்வொரு இதழிலும் வாரி வழங்குகிறீர்கள். கடந்த இதழில் வெளிவந்த காலணித் தொழில் பற்றிய தகவல், வேலை இல்லாத இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
- ஜி.எல்.கல்யாணி மூர்த்தி, கரூர்.

இந்தியன் குரல் அமைப்பைச் சேர்ந்த சிவராஜ் வருமானச்
சான்றிதழ் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாக விடை அளித்திருக்கிறார். விண்ணப்பித்து நடையாக நடந்தும் எனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. தகவல் உரிமைச் சட்டப்படி ஒரு விண்ணப்பம் அனுப்பியதும் தேடி வந்து கொடுத்தார்கள்.
- எச்.குமரேசன், தேனி.

 வெறும் செய்தியாக இல்லாமல் வழிமுறைகளையும் உள்ளடக்கிய கட்டுரைகளே ‘கல்வி வேலை வழிகாட்டி’யின் அடையாளம். ‘7 லட்சம் பேருக்கு வங்கி வேலை ரெடி’ என்ற கட்டுரையைப் படித்து முடித்ததும் வேலையே கிடைத்த மாதிரி இருந்தது. நம்பிக்கையை விதைத்த உங்களுக்கு நன்றி.
- ஆர்.சுகுணா செல்வராஜ், கடலூர்.

முதல் முறையாக திருநங்கை என்ற அடையாளத்தோடு அரசுக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் திவ்யாவுக்கு வாழ்த்துகள். திருநங்கைகளை அவமரியாதை செய்யும் சமூகம், இதன் பிறகாவது மாறினால் நல்லது. - டி.கே.ரங்கமணி, சாத்தூர்.

‘வேலை ரெடி’ பகுதியில் வரும் தகவல்கள் அனைத்தும் நிறைவாக இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் நான்கைந்து இதழ்களை வாங்கிப்போட்டு வேலைவாய்ப்புப் பகுதிகளை அலசும் என் தம்பி, இப்போது ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’ மட்டுமே வாங்குகிறான். தகவல் களஞ்சியமாக வெளிவரும் இதழுக்கு வாழ்த்துகள். 
- வி.சங்கரலிங்கம், மதுரை.