KVPY Scholarship



அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் Scholarship  பெற விண்ணப்பிக்கலாம்!

மாணவர்களின் அடிப்படை அறிவியல் திறனை மேம்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயல்படுத்தும் திட்டமே, Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) , அடிப்படை அறிவியலைத் தேர்வுசெய்து படிக்கும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள், ஊக்கத்தொகைகள் வழங்குவதுடன்,

உயர் அறிவியல் நிறுவனங்களில் கோடைக்கால அறிவியல் - தொழில்நுட்பக் கருத்தரங்குகள், முகாம்களும் நடத்தப்படுகின்றன. இந்த உதவித்தொகை பெறும் வழிமுறைகளை விளக்குகிறார் கல்வியாளரும், ‘ஸ்டூடன்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்குனருமான ஆர்.ராஜராஜன்.

KVPY உதவித்தொகையை யாரெல்லாம் பெறலாம்?

+1, +2வில் அறிவியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களது கல்வித்திறன் தொடர்ந்து சோதிக்கப்படும். அறிவியல் கருத்தரங்கங்கள், முகாம்களுக்கு அழைக்கப்படுவார்கள்.

பிரபல அறிவியலாளர்களின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவும் வாய்ப்புக் கிடைக்கும். இளங்கலை முதலாமாண்டு சேர்ந்ததும் உதவித்தொகை வழங்குதல் தொடங்கும். இளங்கலை முதலாமாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஓராண்டு முகாம்கள், கருத்தரங்கங்களில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும்.

இளங்கலையில் வேதியியல், இயற்பியல், கணிதம், புள்ளியியல், உயிர் வேதியியல், நுண் உயிரியல், செல் உயிரியல், சுற்றுப்புற அறிவியல், மூலக்கூறு உயிரியல், தாவரவியல், உயிரியல், உயிரித் தொழில்நுட்பம், நியூரோ சயின்ஸ், பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், கடல் உயிரியல், மண்ணியல், மனித உயிரியல், ஜெனடிக்ஸ், பயோ ஜெனடிக்ஸ், பயோ மெடிக்கல் சயின்ஸ், அப்ளைடு பிசியாலஜி, ஜியோ பிசிக்ஸ் போன்ற அறிவியல் பிரிவுகளில்   B.Sc, B.S/B.Stat, B.Maths, Integrated M.Sc., வி.ஷி   போன்ற படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இளங்கலை முதலாம் ஆண்டில் இருந்து பிஹெச்.டி வரைக்கும் உதவித்தொகை கிடைக்கும்.

இளங்கலை படிக்கும் காலத்தில் மாதம் ரூ.5000 மற்றும் பிற செலவுகளுக்கு ஆண்டு இறுதியில் ரூ.20,000 வழங்கப்படுகிறது. முதுகலை படிப்பின்போது ஆண்டுக்கு மாதம் ரூ.8000 மற்றும் இதர செலவுக்கு ஆண்டு இறுதியில் ரூ.28,000 வழங்கப்படும்.2014-15 கல்வி ஆண்டுக்கான உதவித் தொகைக்கு தற்போது +1 சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதம், அறிவியல் பாடங்களில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 80%, SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதே பாடங்களில் +2வில் பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 60%, SC/ST/PWD பிரிவினர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்கவேண்டும்.

எந்த அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்?

Aptitude Test  மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். Aptitude Test-ல் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். வினாத்தாள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்வி ஆண்டு முடிவுற்றபின் உள்ள இடைப்பட்ட காலத்தில் Regional /National அறிவியல் தொழில்நுட்ப முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்து KVPY Scholarship  பெற கல்வியில் பெறும் மதிப்பெண்களும், முகாமில் கலந்துகொண்டு Project  செய்வதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இளங்கலையில் மாணவர்கள் அறிவியல் பாடங்களில் முதல் வகுப்பில் (பொதுப்பிரிவினர் குறைந்தது 60%, SC/ST/PWD பிரிவினர் 50%) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியைப் பெறவில்லையாயின், ஊக்கத்தொகை நிறுத்தப்படும்.

கோடைக்கால தொழில்நுட்ப முகாமில் என்ன நடக்கும்?

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் அறிவியல் திறமைகளை வெளிக்கொணரவும், மேம்படுத்தவும், மத்திய அரசின் சார்பில் Indian Institute of Science Education and Research (IISER) நிறுவனத்தால் கொல்கத்தா, புனே, மொஹாலி, போபால், திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் கோடைக்கால முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாமில், அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த பாடங்களில் விரிவுரைகளும், கருத்தரங்குகளும் ஓரிரு வாரங்கள் நடைபெறும். இம்முகாமில் மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுகள் நடைபெறும் சூழலைப் பார்க்கவும், அறிவியல் ஆய்வாளர்கள் செய்யும் பணிகளைப் பார்க்கவும், அறிவியல் ஆய்வகங்களைச் சுற்றிப் பார்க்கவும், அறிவியல் அறிஞர்களுடன் கலந்துரையாடவும்  வாய்ப்புகள் கிடைக்கும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

www.kvpy.org.in/main/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அஞ்சலில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500. SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் இணையம் மூலமாகவே கட்டணத்தை செலுத்தலாம். அல்லது வங்கியிலும் செலுத்தலாம். அஞ்சலில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தை, The Convener, Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY), Indian Institute of Science, Bangalore  560 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இறுதிநாள் 8.9.14. Aptitude தேர்வு 2.11.14 அன்று நடைபெறும்.

- வெ.நீலகண்டன்