கேம்பஸ் நியூஸ்



ஆராய்ச்சி உதவித்தொகை

மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு உதவித்தொகை பெற விண்ணப்பங்களை வரவேற்கிறது, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி).  இதில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துள்ள கல்லூரிப் பேராசிரியர்களுக்கான ‘ஆராய்ச்சி விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களுடைய துறையில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, ஆராய்ச்சியில் முழுக் கவனம் செலுத்தும் வகையில் அவர்கள் பணிபுரியும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்கு முழு உதவித்தொகையை யுஜிசியே வழங்கும்.

 ஆராய்ச்சி உதவித்தொகையாக, சமூக அறிவியல் துறை என்றால் ரூ.2 லட்சமும் பிற துறைகளுக்கு ரூ.3 லட்சமும் யுஜிசி வழங்கும். இதற்கு விண்ணப்பிக்க கடைசித்தேதி: ஆகஸ்ட் 16. 

முதுநிலை ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசித் தேதி.  இதற்கு விண்ணப்பிப்பவர்கள் எச்.டி. முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு  மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் உதவித் தொகையும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.20 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அனுபவமிக்க ஆராய்ச்சியாளருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

பிஎச்.டி., எம்.ஃபில். மேற்கொள்பவர்களுக்கான, மவுலானா ஆஸாத் தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசித் தேதி. இதுபோல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான ராஜீவ்காந்தி தேசிய கல்வி உதவித்தொகை திட்ட அறிவிப்பும் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 25. இந்தத் திட்டங்களின் கீழ் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் வீதமும், அதன் பிறகு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வீதமும் உதவித்தொகை வழங்கப்படும். விரிவான விவரங்கள் காண : www.ugc.ac.in. 

மருத்துவக் காளான் வளர்ப்பு பயிற்சி

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் உயிரி வேதியியல் துறை சார்பில் மருத்துவக் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற உள்ளது. இலைக் காளான், பால் காளான் மற்றும் வைக்கோல் காளான் ஆகிய மூன்று வகை காளான் வளர்ப்பு குறித்துப் பயிற்சி அளிக்கப்படும்.  கட்டணம் ரூ.400/-. ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு:  09942668270, 09791532363.

ஆபத்துகால சேவை குறித்த படிப்பு

ஆபத்துகால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு, 108 ஆம்புலன்ஸ் இயக்கி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்தால் தொடங்கப் பட்டுள்ளது.
இரண்டாண்டு கால படிப்பான இதில், ஆபத்துக் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், ஆபத்தில் இருக்கும் நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கற்பிக்கப்படும். இந்தப் படிப்பில் செயல்முறை வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. நுண்ணுயிரியல் (மைக்ரோபயாலஜி), பி.பார்ம் படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம்.
விவரங்களுக்கு: ஜிவிகே இஎம்ஆர்ஐ கஸ்தூர்பா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனை, திருவல்லிக்கேணி, சென்னை-5 தொலைபேசி: 044 - 2888 8060/ www.emri.in

பி.எட். படிக்க நுழைவுத் தேர்வு இல்லை!


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூரக் கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் முழுநேரப் பணியில் இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை. விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யவும் கூடுதல் விவரம் அறியவும்: www.tnou.ac.in .

நவம்பர் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது.

 இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்க தமிழக  அரசு முடிவு செய்துள்ளது. ‘2014-2015ம் கல்வியாண்டில் மாணவிகளுக்கு - குறிப்பாக பழங்குடியினத்தைச் சார்ந்த மாணவிகள் தங்களைக் தற்காத்துக் கொள்ள வழிவகை செய்யும் பொருட்டு இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இதற்காக அரசு ரூ. 14 லட்சம் ஒதுக்கி உள்ளது. கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க, பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 2014-2015  கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

தமிழ்ப் பல்கலையில் எம்.எட் படிக்கலாம்

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறையில் எம்.எட் சேர விண்ணப்பங்களை நேரில் ரூ.600 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர் சாதிச் சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை அளித்து, ரூ.300 செலுத்தினால் போதும்.அஞ்சல் வழி பெற விரும்புவோர், The Registrar, Tamil University, Thanjavur  613 010 என்னும் பெயரில் பொது வகுப்பினர் ரூ.650க்கும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.350க்கும் தஞ்சாவூரில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேட்பு வரைவோலை (ஞிஞி) எடுத்து வேண்டுதல் கடிதத்துடன் அனுப்பிப் பெறலாம்.

விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.in இணையதளத்திலிருந்தும் பெற்று உரிய விண்ணப்பக் கட்டணத்தை வங்கி கேட்பு வரைவோலையுடன் அனுப்பலாம். 14.8.2014 மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கல்வியியல் பட்டத் தேர்வில் (பி.எட்) 50 விழுக்காடுக்கு (எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வில்) குறையாமல் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 04362-227782, 226720.

காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 48ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நவம்பர் 2013-ஏப்ரல் 2014 மற்றும் ஜூலையில் நடைபெறும் துணைத்தேர்விலும் தேர்ச்சி   பெற்ற மாணவ, மாணவியர்கள் மட்டும் வரும் 2014ம் ஆண்டு பட்டமளிப்பிற்குப் பல்கல்கலைக் கழக இணையதளம் மூலமாக விண்ணப் பங்களைப் பெற்று, அவற்றை நிறைவு செய்து பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி அவர்களுடைய பட்டயச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு களைக் கல்லூரிகளில், மாலை நேரக் கல்லூரிகளில் பயின்று ஏப்ரல் 2009/ 2010/2011/2012/2013-ல் ஏற்கெனவே பட்டமளிப்புக் கட்டணத் தொகையைக் கல்லூரி மூலம் செலுத்திய மாணவ மாணவியர்கள் 2014ம் ஆண்டு பட்டமளிப்புக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் எல்லோரும் சிறப்புப் பட்டமளிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு கட்டணம் ரூ.1500.விண்ணப்பிக்க கடைசித் தேதி செப்டம்பர் 1.  அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க செப். 15 கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களுக்கு www.mkuniversity.org.