ஓட்டல் நடத்துங்க... ஓகோன்னு வாழுங்க!



சுலபமாக செய்யலாம் சுயதொழில்

எல்லா தொழிலிலும் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், உணவை விற்பனைப் பொருளாகக் கொண்ட தொழில்களில் மட்டும் நஷ்டம் ரொம்ப அரிது. நிலவுக்கே போனாலும் அங்கே ஒரு நாயர் டீக் கடை இருக்கும் என்பார்கள்.

உணவுக்கு இருக்கும் மதிப்பு அப்படி! ‘‘சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களே... ஓட்டல் தொழில் பக்கம் வாருங்கள்!’’ என ஊக்கப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறது திருச்சி துவாக்குடியில் செயல்பட்டுவரும் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பவியல் கல்லூரி.

‘‘1981ம் ஆண்டு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளே ஓட்டல் துறை மற்றும் கேட்டரிங் பயிற்சிகளை நேரடியாக வழங்குவது இக்கல்லூரியில் மட்டுமே’’ என்கிறார் இந்நிறுவனத்தின் முதல்வர் ஆர்.சிங்காரவேலவன். ‘‘ஆரம்பத்தில் ஓராண்டு உணவக மேலாண்மை பயிற்சி தரும் பட்டயப் படிப்பு மட்டுமே இங்கிருந்தது. 1994ம் ஆண்டு முதல் 3 ஆண்டு பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

 இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மேலாளராகவும், சிறந்த பயிற்சியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். சுயமாக தொழில் செய்ய வேண்டுமானாலும் வங்கிக் கடன் பெற்று உணவகங்களை நடத்தலாம்’’ என்கிற சிங்காரவேலவன், ‘சுற்றுலா வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்யக்கூடிய படிப்புகள் இவை’ என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

‘‘மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் மூன்று ஆண்டு பட்டப் படிப்பு (B.Sc Programme in Hospitality - Hotel Administration) பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது. இப்படிப்பில் சேரும் மாணவ / மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டத்தட்ட உறுதிதான். காரணம், இந்திய நாட்டில் ஹோட்டல் துறையும் சுற்றுலாத் துறையும் வளர்ந்து வரும் வேகம் அப்படி. புதிய நட்சத்திர ஹோட்டல்களும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடுத்தர ஹோட்டல்களும் தற்போது நிறைய உருவாகிக் கொண்டிருப்பதால் இப்பயிற்சிகளை முடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமல்லாது கப்பல்கள், விமானங்கள், சுற்றுலாத்துறை விடுதிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இப்படிப்பு முடித்தவர்கள் மேலாளராகப் பணியாற்ற முடியும்.
தற்போது இப்பயிற்சியைப் படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. எனவேதான் இங்கு நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அனைத்து வங்கிகளுமே கல்விக் கடன் வழங்கத் தயாராக உள்ளன.

இதைத் தவிர, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வருட பட்டயப் படிப்பும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வருட சான்றிதழ் படிப்பும், உணவு தயாரித்தல், உணவு பரிமாறல் மற்றும் பேக்கரி துறையில் சிறு பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகிறது’’ என்கிறார் அவர். இந்நிறுவனத்தில் குறுகிய கால இலவசப் பயிற்சிகளும் கற்றுத் தரப்படுகின்றன. முழுக்க முழுக்க சுயதொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சிகள் குறித்தும் அவர் விளக்கினார்.

‘‘இங்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் 2009-10 கல்வியாண்டு முதல் ஏராளமான குறுகிய கால இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஏழை, எளிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. உணவு தயாரித்தல் மற்றும் பேக்கரி ஆகிய துறைகளில் 8 வாரப் பயிற்சிகளுக்கு ரூ.2000 ஊக்கத்தொகையும்... 6 வார பயிற்சியான உணவு பரிமாறல் மற்றும் அறை பராமரிப்பு பயிற்சிக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சியின்போது சீருடை, உணவு, நோட்டு, பேனா, பயிற்சிக் கையேடு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நிறைவு பெற்றபின் இந்நிறுவனத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதலும் கொடுக்கப்படும். இதற்கான தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும் 18 முதல் 28 வயதுக்குள்ளும் இருப்பதுதான். மாற்றுத்திறனாளிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவிகள் தங்களுடைய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல் மற்றும் 4 புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நேரில் வந்து உடனடியாக பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம்.

இது மட்டுமில்லாமல் 6 நாட்கள் திறன்மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. திருச்சியைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், தாபாக்கள், கேன்டீன்கள், விருந்தினர் இல்லங்கள், கிளப்கள், உணவு அருந்தும் அமைப்புகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் சமையல் கலைஞர்கள் மற்றும் வெயிட்டர்கள்,

 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சுற்றுலாவின் முக்கியத்துவம், சுற்றுப்புற சூழ்நிலை, சுகாதாரம், சுவையான உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறலில் உள்ள நுணுக்கங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது’’ என்கிறார் அவர்.ஓட்டல் தொழிலுக்கு இந்த இடம் நிஜமான பிள்ளையார் சுழி!

தொடர்புக்கு: மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பவியல் நிறுவனம், துவாக்குடி, திருச்சிராப்பள்ளி - 620 015.
தொலைபேசி: 0431 - 2500660, 2500960

 எம்.நாகமணி