பால் பண்ணை தொழில்நுட்பம்!



வீட்டிலிருந்தபடியே படிக்கலாம் 

‘மாடு’ என்றால் செல்வம் என்பது பொருள். ‘ஒரே ஒரு பசு மாடு, ஒரு குடும்பத்தையே வாழ வைத்து விடும்’ என்பது நம் பாரம்பரிய சொல்லாடல். அதுவே மாட்டுப்பண்ணை என்றால், எத்தனை லாபகரமான தொழிலாக இருக்கும்! அப்படிப்பட்ட தொழிலை ஊக்குவிக்கத்தான் பால் பண்ணை தொழில்நுட்பப் படிப்புகளை தொலைதூரக் கல்வியாக வழங்கி வருகிறது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

‘‘உலக அளவில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு கிடைக்கும் சராசரி பாலின் அளவு 258 கிராம். இந்தியாவில் தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு கிடைக்கும் பாலின் அளவு, 256 கிராம். பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியாதான் நம்பர் ஒன்!’’ எனத் துவங்குகிறார் தொலைதூரக் கல்வி இயக்குநர் தியாகராஜன்... ‘‘தமிழ்நாடு ஆண்டுக்கு 7 ஆயிரம் டன் பாலை உற்பத்தி செய்து, இந்தியாவில் 8வது இடத்தில் உள்ளது. கடந்த காலங்களை விட தமிழகத்தின் பால் உற்பத்தி எவ்வளவோ வளர்ந்துள்ளது. பாரம்பரிய பால் உற்பத்தி முறை, மெல்ல மெல்ல அறிவியல் ரீதியானதாக நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியதே இதற்குக் காரணம்.

பால் மற்றும் அனைத்து கால்நடைப் பொருட்களும் எளிதில் கெடக் கூடியவை. ஆகவே, பாலை பால் பொருளாக மாற்றுவதன் மூலம், அதிக வருவாயை ஈட்டலாம். பால் பொருட்களை உலகத் தர நிர்ணயக் குறியீடுகளுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி செய்து தானும் உயரலாம்.

நாட்டுக்கு அந்நிய செலவாணியையும் ஈட்டித் தரலாம். எனவேதான், விவசாயப் பெருமக்கள் மட்டுமல்லாது மகளிர், வேலையில்லா இளைஞர்கள் என அனைவரும் பால் உற்பத்தி பற்றிய அறிவியல் தொழில்நுட்பங்களை முறைப்படி கற்றுக்கொண்டு, தொழில் செய்ய நாங்கள் வழி செய்கிறோம்’’ என்கிற தியாகராஜன், தொலைநிலைக் கல்வியில் வழங்கப்படும் பால் பண்ணை சார்ந்த சில குறிப்பிட்ட சான்றிதழ் படிப்புகள் குறித்து விளக்குகிறார்...

‘‘இங்கு நேரடி பயிற்சிப் பாடத் திட்டங்களும் உள்ளன. அஞ்சல் வழி கல்வித் திட்டங்களும் உள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தொலைநிலை கல்வி இயக்ககத்தின் மூலம், பால் பண்ணை சார்ந்த சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறோம். இதில் பால் பண்ணை சம்பந்தமாக நான்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளன. அவை,

1. கால்நடைப் பண்ணை மேலாளர் (3 மாதம்)
2. பால் பண்ணை உதவியாளர் (1 மாதம்)
3. பால் பதனநிலைய உதவியாளர் (1 மாதம்)
4. பால் மற்றும் பால் பொருட்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர் (1 மாதம்)

இவற்றில் முதல் பயிற்சிக்கு மட்டும் +2 தேர்ச்சி தேவை. மற்றவை அனைத்துக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும். இவை தவிர, எங்களது பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் நிலையங்களில் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், சுயவேலை வாய்ப்பு பயிற்சிகளும் நேரடிப் பயிற்சிகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு வயது வரம்பு கிடையாது. ஆண்டு முழுவதும் சேர்க்கை நடைபெறுகிறது. பால் பண்ணை தொழில் சார்ந்த அஞ்சல் வழி சான்றிதழ் பயிற்சிகள் மொத்தம் மூன்று இங்கே வழங்கப்படுகின்றன.
அவை,
1. கறவை மாடு வளர்ப்பு
2. மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல்
3. கால்நடை மற்றும் கோழிப் பண்ணை மேலாண்மை தமிழகம் முழுக்க எப்பகுதியிலிருந்தும் இந்தப் படிப்புகளில் சேரலாம்.

இவற்றில் கறவை மாடு வளர்ப்பு, மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள், மூன்று மாத காலமும் கால்நடை மற்றும் கோழிப்பண்ணை மேலாளர் பயிற்சி 6 மாத காலமும் நடைபெறுகிறது. நீண்ட கால அவகாசத்தில் அனைத்துத் தொழில்நுட்பங்களும் தெளிவாகவும் முழுமையாகவும் இளைஞர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. மேலும் பயிற்சியின் முடிவில் பாடத்திட்டத்திற்கேற்ப பண்ணையிலேயே நேர்முகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. பயிற்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது’’ என்கிறார் தியாகராஜன்.

பயிற்சிகளில் சேர...

இந்தப் பயிற்சிகளில் சேர விரும்புவோர் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் DDE Announcements என்பதை க்ளிக் செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பத்தை பயிற்சிக் கட்டணத்திற்கான வரைவோலையுடன் இணைத்து தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு, 044 - 25554411, 98841 36148.

-எம்.நாகமணி