45 நாட்களில் தமிழ்... 39 நாட்களில் கணிதம்!



எளிமையாக கற்க ஒரு கையேடு

‘ஔ’,‘கௌ’ எழுத்துக்களில் பின்புறம் வருவது ‘ளகரம்’ அல்ல... அதன் பேர் கொம்புக்கால்.‘ª’ - இது கொம்பு. ‘¬’ - இது ரெட்டைக் கொம்பு... ‘«’என்பது ரெட்டைக்கொம்பே இல்லை. அதன் பேர் கொம்புச்சுழி!- இப்படிப் பல புதிய தகவல்களால் திணறடிக்கிறது அந்தக் கையேடு.

‘‘நாம சில விஷயங்களை பழக்கத்தால தவறா பயன்படுத்திக்கிட்டிருப்போம் சார். ஆனா, குழந்தைகளுக்கு சரியா சொல்லிக் கொடுக்கணும் இல்லையா?’’ - தன் கையேட்டை புரட்டிக் காட்டியபடி ஆர்வமாகப் பேசுகிறார் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் கனகலட்சுமி. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு 45 நாட்களில் தமிழ் சொல்லிக் கொடுக்க இவர் உருவாக்கியிருக்கும் கையேட்டில்தான் இத்தனை அரிய பெரிய சங்கதிகள்!

‘‘ஆறு வயசு வரும்போது ஒரு குழந்தையின் மூளை முழுமை அடையுது. எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் அதை உள்வாங்கிக்கிற காலமும் அதுதான். அந்த நேரத்துல மொழித்திறன்கள் வாயிலாக தாய்மொழியைக் கற்பிக்கணும்.

 இதனால, மாணவர்கள் தொடக்கக் கல்வியை முடிக்கும்போதே பிழையின்றித் தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்து கொள்வார்கள்’’ என்று சொல்லும் கனகலட்சுமி, தனது கையேட்டுக்கு வைத்திருக்கும் பெயர் ‘கசடறக் கற்க கற்பிக்க’!

‘அ, ஆ... எப்படி உச்சரிக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்?’ என்பதில் தொடங்கி தமிழில் கலந்திருக்கும் வடசொற்கள் வரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
‘‘எனக்கு சொந்த ஊர் கோவில்பட்டி. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் திருமணமாகியிருச்சு. என் கணவர் சரவணன் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்.

அவரோட ஊக்கத்துலதான் தொலைதூரக் கல்வி மூலமா எம்.ஏ., பி.எட் எல்லாம் படிச்சேன். ஆரம்பத்துல தனியார் பள்ளியில வேலை பார்த்துட்டு இருந்தேன். பிறகு, 1996ல் கடுக்காய் வலசை என்னும் கிராமத்துல உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வேலை கிடைச்சது. அங்கே தலைமையாசிரியராவும் பணியாற்றினேன்.

குழந்தைகளுக்குப் பாடங்களைச் சொல்லித் தரும் சுகமே தனிதான். நம்மூர் முறையான ‘ட ப ம’ முறையிலதான் சொல்லிக் கொடுத்தேன். ஆனா, இதுல குழந்தைகளுக்கு புரிய வைக்கிறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. நிறைய பேருக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியல. அதனால, இதை எளிமைப்படுத்த நினைச்சேன். அப்பதான் ஒரு சர்வதேச மாநாட்டுல கலந்துக்குற வாய்ப்புக் கிடைச்சது. அங்க கற்பிக்கும் முறை பற்றியெல்லாம் நிறைய பேசினாங்க. எனக்குள்ளயும் ஒரு மாற்றம் ஏற்பட்டுச்சு.

அதன்பிறகுதான் நிறைய தமிழ் நூல்களை ஆய்வு செய்ய ஆரம்பிச்சேன். பிறகு, எளிமையாகவும், புதுமையாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்லித் தரும் வழிமுறையைக் கண்டுபிடிச்சேன். அப்பவே ஒரு முடிவும் பண்ணிட்டேன். இனி, தொடக்கக் கல்வி முடித்து வெளியேறும் குழந்தைகள் மொழிப் பாடங்களிலும் மற்ற பாடங்களிலும் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தெளிவா இருக்கணும். அந்த  வழிமுறைதான் என் கையேடு’’ என்கிற கனகலட்சுமி இதே போல் கணிதத்துக்கும் ஒரு கையேட்டை கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கையேடுகளை உருவாக்க 12 ஆண்டுகள் தேவைப்பட்டதாம்.

‘‘இந்தக் கையேடுகளை உருவாக்க நிறைய பேராசிரியர்கள், மொழி அறிஞர்கள் எனக்கு உதவினாங்க. முதல்ல தமிழ்க் கையேட்டை உருவாக்கினதும் அதைப் பார்த்து ‘இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்’ பாராட்டி, நூலை வெளியிட உதவி செய்தாங்க. இதுல கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்கள்னா என்ன? அதில் வருகிற குறைபாடுகள், அதை எப்படிப் போக்கணும்?

 இப்படி எல்லாவற்றுக்கும் ஒரு சின்ன முன்னுரை கொடுத்திருக்கேன். பிறகு அ, ஆ எப்படி உச்சரிக்கணும், எழுதணும், அதற்கான பயிற்சிகள்னு எல்லாமே இதில் இருக்கு. இதை நல்லா பயிற்சி செய்தா வருங்காலத் தலைமுறையை நல்ல மொழியறிவோடு உருவாக்கலாம். இதனை என் வகுப்புக் குழந்தைகளுக்கு நான் கத்துக் கொடுக்கிறேன். அவங்க முன்னாடி இருந்ததைவிட இப்ப நல்ல நிலையில் தேறியிருக்காங்க’’ என்கிறார்.

இந்த முயற்சிக்காக கடந்தாண்டு தமிழக அரசிடமிருந்து நல்லாசிரியர் விருதும் பெற்றிருக்கும் கனகலட்சுமி, தற்போது ‘தொடக்கப்பள்ளியில் தமிழ் கற்பித்தல் பற்றிய ஓர் ஆய்வு’ எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்விலும் மும்முரமாக இருக்கிறார்.

‘‘இந்த ஆய்வை விரிவாக்குவதற்காக தலைமைஆசிரியை வேலையை விட்டுட்டு சென்னைக்கு மாறுதலாகி வந்தேன். இந்தத் தமிழ்க் கையேடு தயாரிக்கிறபோதே கணக்கு கையேட்டிற்கான வேலையையும் செய்துட்டேன். சமீபத்தில் அதை சென்னை மேயர் வெளியிட்டார். 39 நாட்களில் கணிதத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இந்தக் கையேடு உதவும். பூஜ்ஜியத்திலிருந்து நூறு எண்கள் வரை ஒன்றாம் வகுப்பு குழந்தைகளால் எழுத முடியும்.

கூட்டல் கணக்கை கற்பிக்க கோடுகள் போட்டு எண்ணச் செய்வதன் மூலம் எளிமையாக புரிஞ்சிக்கலாம். அது எப்படிங்கிறதை இந்தக் கையேட்டில் சொல்லியிருக்கேன். இதோடு கழித்தல், வாய்பாடு ஆகியவற்றை கற்கும் முறையையும் கொடுத்திருக்கேன். தகுந்த விளக்கங்களுடன் பயிற்சி அளித்தால் மாணவ-மாணவிகளுக்கு கணக்கு கற்கண்டாக தித்திக்கும்’’ என்கிறார் இவர் நம்பிக்கை பொங்க.

தற்போது, கல்வித் துறையின் ஆணைப்படி பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் முறையையும் கற்றுத் தருகிறார் கனகலட்சுமி. ‘‘அடுத்து ஆங்கிலத்திற்கென ஒரு கையேட்டைத் தயாரிக்க இருக்கேன். தரமான மாணவச் செல்வங்களை உருவாக்கறதுதான் என் லட்சியமே’’ என உற்சாகத்தோடு முடிக்கிறார் அவர்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்